Published : 04 Apr 2020 07:39 AM
Last Updated : 04 Apr 2020 07:39 AM

அடுத்த தாவலுக்கு மனிதகுலத்தைத் தயார்படுத்தும் கொள்ளைநோய்கள்...

கன்னட நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் எஸ்.எல்.பைரப்பா. அவர் எழுதிய ‘பருவம்’, ‘திரை’, ‘தாண்டு’, ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ ஆகிய நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘கிருக பங்கா’வின் தமிழ் மொழிபெயர்ப்பான ’ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலானது ‘நேஷனல் புக் டிரஸ்ட்’டால் 1980-களில் வெளியிடப்பட்டது. நாவலின் களம், கர்நாடகத்தின் சென்னராயப்பட்டினம் வட்டாரக் கிராமங்கள். காலம், 1920 தொடங்கி அடுத்த 25 ஆண்டுகள்.

கோழைத்தனமும் சுயநலமும் ஒன்றுசேர்ந்த சோற்றுமூட்டை, சென்னிகராயன். அவனுக்கு வாழ்க்கைப்பட்ட நஞ்சம்மாவோ தியாகத்தின் திருவுருவம். வறுமையில் உழன்றாலும் எப்படியோ ஒருவழியாய் மகள் பார்வதியை மனைவியை இழந்த ஒருவருக்கு இரண்டாம் தாரமாய் மணம் பேசி முடித்துவிடுகிறாள். பள்ளிக்கூடத்தில் படிக்கும் இரண்டு ஆண் குழந்தைகளும் படிப்பில் சமர்த்தாக இருக்கிறார்கள். அப்பனைப் போல இல்லாமல் நிச்சயம் பிழைத்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள். அவளின் அத்தனை நம்பிக்கையையும் அடித்துச்செல்லும் அழிவு சக்தியாகக் கோர தாண்டவமாடிவிட்டுப் போகிறது பிளேக் நோய்.

மகளுக்குத் திருமணமாகிவிட்டால் கிராமத்துத் தெய்வமான காளம்மனுக்குப் படையலிடுகிறேன் என்று வேண்டிக்கொண்டிருந்தாள் நஞ்சம்மா. காளம்மனுக்கு ரவிக்கை எடுத்து வைத்துப் படையலிட்டு வீடு திரும்பிய சற்று நேரத்திலேயே குளிர்க்காய்ச்சல் வந்து படுத்துவிடுகிறாள் பார்வதி. கோடைக் காலத்தில் குளிர்க்காய்ச்சல் என்பது நஞ்சம்மாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பக்கத்து வீட்டு சர்வக்கா சொன்னதுபோல அது கண்திருஷ்டியாக இருக்கலாம் என்றுதான் அவளும் நினைக்கிறாள். மாலையில் கம்பளிப் போர்வைக்குள் சுருண்ட பார்வதியின் காய்ச்சல் இரவில் இன்னும் அதிகமாகிறது. சீரகம், குறுமிளகு, லவங்கம், துளசி முதலியவற்றைப் போட்டு கஷாயம் போட்டுக்கொடுக்கிறாள். பலனில்லை.

பார்வதியின் முகம் சோர்ந்து கண்கள் சிவந்துவிடுகின்றன. மீண்டும் ஒரு முறை கஷாயம். காலையில் காய்ச்சல் கொஞ்சம் குறைந்ததுபோல தோன்றினாலும் முழுவதுமாகக் குறையவில்லை. கோழி கூவும் நேரத்தில் எழுந்து மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மூத்த மகன் ராமண்ணனும் அன்று எழுந்திருக்கவில்லை. அவனுக்கும் காய்ச்சல். பிள்ளைகள் இருவருக்கும் அரிசிக் கஞ்சி கொடுத்துவிட்டுக் கஷாயம் கொடுக்கிறாள் நஞ்சம்மா. மாலையில் மறுபடியும் பார்வதியின் கண்கள் சிவந்துவிடுகின்றன. காலில் நெரி கட்டியிருப்பதாக அவள் சொல்கிறாள். ராமண்ணனும் அப்படியே சொல்கிறான். இரவெல்லாம் நஞ்சம்மாவுக்குத் துர்சொப்பனங்கள்.

பிள்ளைகளுக்கு வந்திருப்பது பிளேக்காக இருக்குமோ என்று அஞ்சுகிறாள் நஞ்சம்மா. அவளது கணவனை மூன்று முறை எழுப்பியும் ஒன்றுக்கும் உதவாத அந்தப் பயல் எழுந்திருக்கவே இல்லை. பார்வதியின் இளைய தம்பி விசுவன், மாதேவய்யாவை அழைத்துவருகிறான். சில நாட்களுக்கு முன்பு பக்கத்துத் தெருவில் எலி விழுந்ததாய்ப் பேசிக்கொண்டார்கள் என்கிறார் அவர். நஞ்சம்மா விக்கி அழுகிறாள். பிளேக் வந்தாலும் எவ்வளவோ பேர் தப்பிப் பிழைக்கிறார்கள் என்று அவளைத் தேற்றுகிறார் மாதேவய்யா.

டாக்டரை அழைத்தால் அம்மன் கோபித்துக்கொள்வாள் என்ற நம்பிக்கைகளை உதறித் தள்ளிவிட்டு மருத்துவரை அழைத்துவரச் சம்மதிக்கிறாள் நஞ்சம்மா. ஊரில் பிளேக் பரவியிருப்பதாகவும் ஊர்மக்கள் ஊருக்கு வெளியே கொட்டகைகள் போட்டுத் தங்கியிருக்குமாறும் தண்டோரா போடப்படுகிறது. பிளேக் தேவதை சுங்கலம்மாவைத் தடுக்காமல் கிராம தேவதை காளம்மன் கடமை தவறிவிட்டாளே என்று கிராமத்துத் தேவதைகளையும் சந்தேகிக்கிறாள். இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊருக்குள் வந்து உயிர்ப்பலி வாங்கிப்போகும் பிளேக் நோய்க்கு மருந்து இல்லையே என்று வருத்தப்படுகிறாள் அவள்.

மருத்துவரை அழைக்கப்போன மாதேவய்யா ஊர் திரும்புகிறார். மருத்துவர் ஊரிலும் பிளேக் பரவியதால் அவரால் வர முடியவில்லை. பிள்ளைகள் இருவரையும் வண்டி கட்டி, பத்து மைல் தாண்டி டாக்டரிடம் அழைத்துப்போகிறார் மாதேவய்யா. அவர் இரண்டு நாளைக்கு மருந்து கொடுத்து அனுப்புகிறார். வீடு திரும்புகிறபோது இளையவன் விசுவனுக்கும் காய்ச்சல் ஆரம்பமாகிவிடுகிறது. பிள்ளைகள் மூவரையும் பிளேக் நோய்க்குப் பறிகொடுத்துவிடுவோமா என்று அழுது அரற்றுகிறாள் நஞ்சம்மா. வண்டியில் வேறோரு மாட்டைப் பூட்டி விசுவனை டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போகிறார் மாதேவய்யா.

மருத்துவமனையில் டாக்டர் இல்லை. நோயாளியை வீட்டுக்கே அழைத்துக்கொண்டு வந்ததற்காகக் கோபிக்கிறார்கள். மருத்துவரின் உதவியாளர் மனமிறங்கி மருந்துக் கடைக்கு வழிகாட்டுகிறார். மதராஸ் வெங்கடாசார்லு கம்பெனியிலிருந்து வந்த ஹேமாதி பானகம் என்ற ஆயுர்வேத மருந்தைக் கொடுக்கிறார் கடைக்காரர். பிளேக் ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த மருந்தைக் கொடுத்துக் காப்பாற்றிவிட முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார். பிளேக் இருக்கும் ஊருக்குள் யாரும் போகக் கூடாது, நோய் இருக்கிற வீட்டுக்கும் போகக் கூடாது, ஊருக்கு வெளியே எங்கேயாவது இருக்க வேண்டும் என்றும் அந்தக் கடைக்காரர் அறிவுறுத்துகிறார்.

ஊர் திரும்பிய விசுவனைத் தன்னுடன் கோயிலிலேயே வைத்துக்கொள்கிறார் மாதேவய்யா. இதற்கிடையில் கட்டிகள் உடைந்து, சீழ் வெளியேறி, நாடி குறைந்து, மூச்சை நிறுத்திக்கொள்கிறாள் பார்வதி. பிளேக் வந்து இறந்த உடல் கறுத்துவிடும் என்பதால் அவளது கணவனுக்குச் சொல்லாமலே உடல் எரியூட்டப்படுகிறது. அவளுக்குத் தீ மூட்டித் திரும்புவதற்குள் ராமண்ணனும் இறந்துபோகிறான். அவனுக்குக் கட்டிகள் உடையவில்லை. காய்ச்சலும் மட்டுப்பட்டிருந்தது. நோய் தீவிரமடைவதற்கும் மட்டுப்படுத்துவதற்கும் தெளிவான அறிகுறிகள் என்று எதுவுமில்லை. பிளேக் நோயின் காலகட்டத்தில் அதற்கு முன்பு வந்த நெருப்புக்காய்ச்சல் என்ற வியாதியைப் பற்றியும் நினைவுகூர்கிறார்கள். நெருப்புக்காய்ச்சல் காலத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விறகு அடுக்க முடியாது என்று இரண்டு, மூன்று பேரை எரித்த சம்பவங்கள் நினைவுகூரப்படுகின்றன.

ஒருசேர இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுக்க நேர்வதை எந்தத் தாயால்தான் தாங்கிக்கொள்ள முடியும்? கலங்கிநிற்கிறாள் நஞ்சம்மா. மாதேவய்யாவின் கருணையால் விசுவன் மட்டும் உயிர்பிழைக்கிறான். மாதேவய்யா அவனைத் தனிமைப்படுத்தியதாலேயே அவன் உயிர்பிழைத்தான். அந்த விசுவன்தான் எஸ்.எல்.பைரப்பா. நாவல் வடிவிலான அவரது சுயசரிதைதான் ‘கிருக பங்கா’.

கரோனாவுக்கு முன்பு கொள்ளைநோய்கள் தாக்கியபோதும் உடனடியாக மருந்துகளைக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவங்களே உயிர்களைக் காப்பாற்றச் செய்திருக்கிறது. ஆனாலும், தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே எல்லாக் காலத்திலுமே தற்காப்பு நடவடிக்கையாக இருந்துவருகிறது. இன்றைக்கு வண்டி கட்ட வேண்டியதில்லை. தொலைபேசியில் அழைத்தால் அவசரச் சிகிச்சை ஊர்தி வருகிறது. சிகிச்சையளிக்க எல்லா அரசு மருத்துவமனைகளும் திறந்திருக்கின்றன. தடுப்பு மருந்துக்காக உலகம் முழுவதும் அறிவியலாளர்கள் இரவுபகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். காலச்சக்கரத்தில் கொள்ளைநோய்கள் வந்துபோய்க்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு முறையும் நாம் கற்றுக்கொள்ளும் பாடம், அடுத்த நோய்த்தாக்குதலை எதிர்கொள்ளும் தடுப்பாற்றலுக்கு நம்மை அவை தயார்ப்படுத்துகின்றன என்பதுதான்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x