

புத்தகத் திருவிழாவுக்குள் சுற்றிவந்த களைப்பில் உணவகத்தில் ஒதுங்கும் வாசகர்களைப் பல இடங்களில் விலைப் பட்டியல் மிரட்டும். ஆனால், ஈரோடு புத்தகத் திருவிழாவில் அந்தப் பிரச்சினை இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். பெற்றோரிடம் வாங்கிய தொகையில் புத்தகத்துக்குப் போக, உணவகத்துக்கு என்று மிச்சப்படுத்திய சிறு தொகையைக் கொண்டே மாணவர்கள் நொறுக்குத் தீனிகளைச் சுவைக்க முடிகிறது. அதோடு, புத்தகத் திருவிழாவின் வாயிலிலிருந்து வெளியேறியதும் மிக அருகிலேயே தேநீர்க் கடைகள், உணவகங்கள் அதிகமாக இருப்பதால், உணவகம் தொடர்பான குறைகள் பெரிதாக இல்லை. மாநகராட்சிக்குச் சொந்தமான கழிப்பிட வசதியுடன், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதியும் திருப்திகரமே.
வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் பணியாளர்களைப் பணியமர்த்தி, வரிசையாய் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. கூடவே, ஒவ்வொரு பதிப்பகம் குறித்தும், அங்கு வெளியிடப்படும் நூல்கள் குறித்தும் தனியான அறிவிப்பை முகப்பில் உள்ள அறிவிப்புப் பலகை மூலம் வெளியிட்டால், அரங்குகளைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கும் என்பதும் வாசகர்களின் விருப்பம்.