Published : 29 Mar 2020 08:04 AM
Last Updated : 29 Mar 2020 08:04 AM

கரோனா காலத்து மனிதர்களுக்கு ‘பிளேக்’ வழியே காம்யு சொல்வது என்ன?

அலான் து பொத்தோன்

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குக் கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவி, அல்ஜீரியக் கடற்கரையில் அமைந்திருக்கும் ஓரான் என்றழைக்கப்பட்ட ‘ஒரு சாதாரண நகர’த்தின் மக்கள்தொகையில் பாதிப் பேரைக் கொன்றழித்த நுண்கிருமியைப் பற்றிய கதையொன்றை ஜனவரி 1941-ல் எழுதத் தொடங்கினார் ஆல்பெர் காம்யு. 1947-ல் வெளியான ‘பிளேக்’ நாவலானது உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் தலைசிறந்த ஐரோப்பிய நாவல்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

புத்தகத்தைத் திறக்கும்போதே திகிலுக்கு ஆளாகிவிடுவோம். அந்நகரத்தில் வசிப்பவர்கள் பணத்துக்காக அலைபவர்களாகவும் இயல்புக்கு மாறானவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். திகில் அடியெடுத்து வைத்தவுடன் அச்சமும் தொடங்கிவிடும். கதைசொல்லியான டாக்டர் ரியூ, ஒரு செத்த எலியைக் கடந்துவருவார். தொடர்ந்து ஒருவர் பின் மற்றொருவராக. அதைத் தொடர்ந்து, ஓரான் நகரத்தைத் தொற்றுநோய் கவ்விக்கொள்ளும்; ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவி, ஒவ்வொரு தெருவிலும் பீதியை உருவாக்கும்.

பிளேக் காலகட்டம்

இந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக, காம்யு தன்னை பிளேக் காலகட்டத்துக்குள்ளாக அமிழ்த்திக்கொண்டிருந்தார். 14-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஐந்து கோடி பேரைக் கொன்ற ‘கருப்பு மரணம்’ என்றழைக்கப்பட்ட பிளேக் நோய்ப் பரவலைப் பற்றியும், 1630-ல் இத்தாலியின் லம்பார்டி மற்றும் வெனிடோ பிராந்தியங்களில் 2,80,000 பேரைக் கொன்ற பிளேக் நோயைப் பற்றியும், 1665-ல் லண்டனில் ஏற்பட்ட பிளேக் நோயைப் பற்றியும், சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட பிளேக் பற்றியும் அவர் படித்துக்கொண்டிருந்தார்.

குறிப்பிட்ட ஒரு பிளேக் நோய்த் தாக்குதலைப் பற்றி மட்டுமே காம்யு எழுதவில்லை. அப்படிச் சுருக்கிப் பார்த்துவிடவும் முடியாது. சில பேர் குறிப்பிட்டதுபோல இந்த உருவகக் கதையானது பிரான்ஸ் நாட்டை நாஜிக்கள் ஆக்கிரமித்துக்கொண்டதைப் பற்றியது. எனினும், பிளேக் என்று நாம் அழைக்கும் இந்த வரலாற்று உண்மைச் சம்பவங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும் என்றும், அதன் கதைத் திருப்பங்கள் சாஸ்வதமானவை என்றும் நம்பியே இந்தக் கதைக்கருவை காம்யு தேர்ந்தெடுத்தார்: அனைத்து மனித உயிர்களும் எந்த நேரமும் எந்த நோக்கமும் இல்லாமல் அடியோடு அழிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, அது நுண்கிருமிகளால் இருக்கலாம், விபத்தால் இருக்கலாம் அல்லது நம்முடைய சக மனிதர்களாலேயே இருக்கலாம்.

ஓரான் நகரத்து மக்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களில் கால்வாசிப் பேர் இறந்துகொண்டிருந்தபோதும்கூட, மிச்சமிருந்தவர்கள் அவ்வாறு தங்களுக்கு நிகழாது என்பதற்கான காரணங்களைக் கற்பனைசெய்துகொண்டிருந்தார்கள். தொலைபேசி, விமானங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றோடு வாழ்ந்த நாகரிக மனிதர்கள் அவர்கள். 17-ம் நூற்றாண்டின் லண்டன் அல்லது 18-ம் நூற்றாண்டின் கேன்டன் நகரத்தின் துரதிர்ஷ்டம் பீடித்த மக்களைப் போல அவர்கள் இறந்துபோக வேண்டியிருக்கவில்லை. ‘அது பிளேக் ஆக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அது மேற்கிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று எல்லோருக்கும் தெரியும்’ என்று ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. ‘உண்மைதான், ஒவ்வொருவருக்கும் அது தெரியும்’ என்று கூறும் காம்யு மேலும் சொல்கிறார்: ‘மரணத்தைத் தவிர.’

காம்யுவைப் பொறுத்தவரையில், மக்களைக் கொல்வதற்காக மீண்டும் அது வரும்போது, வரலாற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை, நம்முடைய பலவீனங்களிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. உயிரோடு இருப்பது என்பது முன்பு எப்போதும் இருந்ததைப் போலவே, வருங்காலத்திலும்கூட எப்போதும் அபாயகரமானதாகவுமே இருக்கும். தப்பிக்க வழியே இல்லை என்ற உண்மைதான் ‘அடிக்கோடிடப்பட்ட முன்நிபந்தனை’.

பிளேக் என்ற கருத்து

பிளேக் நோய் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால், எதிர்பாராதபடி உயிரைக் கொல்லும் வகையில் எளிதில் பாதிக்கத்தக்கது, நமது வாழ்க்கையை உடனடியாக அர்த்தம் இழக்கச்செய்துவிடுவதற்குக் காரணமான நிகழ்வு என்று நாம் பொருள்கொள்ளும்படி பிளேக் என்ற கருத்து எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. வாழ்வின் ‘அபத்த’த்தைப் பற்றிப் பேசும்போது காம்யு உணர்த்த விரும்புவது இதைத்தான். இந்த அபத்தத்தை ஏற்றுக்கொள்வது நம்மை விரக்தியை நோக்கி இட்டுச்செல்லாது, அதற்கு மாறாக இன்பம், துன்பம் இரண்டிலிருந்தும் மீள உதவும். இதயத்தை இலகுவாக்கும். மகிழ்ச்சி, நன்றியுணர்ச்சி குறித்த முடிவுகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும் விலகியிருக்க வைக்கும்.

காம்யுவின் ‘பிளேக்’ நாவல் நம்மைப் பீதிக்கு ஆளாக்க முயலவில்லை; ஏனெனில், பீதி என்பது ஆபத்தான ஒன்றை எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்துவதோடு, சிறிது காலத்துக்கு நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் நிபந்தனை விதிக்கிறது. எங்கேயும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது. காம்யு அதற்குச் சொல்லும் காரணம், நம்மிலும் தாழ்ந்துகிடக்கும் சக மனிதர்களின் மீது நாம் அன்புகாட்ட வேண்டும். துயரங்களிலிருந்து விடுபடுவது பற்றிய நம்பிக்கையோ விரக்தியோ இல்லாமல் உழைக்க வேண்டும். வாழ்க்கை என்பது விருந்தினர் இல்லம்; அது ஒருபோதும் மருத்துவமனை அல்ல. நோய்த்தொற்று உச்சத்துக்குச் சென்று வாரம் ஒன்றுக்கு 500 பேர் இறந்துகொண்டிருந்தபோது, மனிதர்களின் சீரழிவு காரணமாகக் கடவுள் அளித்த தண்டனைதான் பிளேக் என்று விளக்கி பனுல் என்றழைக்கப்படும் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். ஒரு குழந்தை இறப்பதைப் பார்த்த டாக்டர் ரியூ தெளிவாகவே புரிந்துகொண்டார்: துயரங்கள் இலக்குகள் இல்லாமலே பகிரப்படுகின்றன, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை, அது ஒரு அபத்தம் மட்டுமே, அது கனிவான அம்சம் என்றும்கூட ஒருவரால் சொல்ல முடியும்.

பிளேக் எப்போதும் சாகாது!

டாக்டர் அவரைச் சுற்றியுள்ளவர்களின் துயரங்களைப் பற்றி புரியவைப்பதற்காக ஓய்வின்றி உழைத்தார். எனினும், அவர் ஒரு கதாநாயகன் அல்ல. ‘இந்த விஷயம் முழுமையுமே கதாநாயகத் தன்மையைப் பற்றியது அல்ல’ என்கிறார் டாக்டர் ரியூ. ‘இது நகைப்புக்குரிய கருத்தாகத் தோன்றலாம். ஆனால், பிளேக்கை எதிர்த்துக் கண்ணியமான முறையில் போராடுவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.’ அந்தக் கண்ணியமான வழிமுறை என்னவென்று மற்றொரு கதாபாத்திரம் கேட்கிறது. ‘எனது மருத்துவப் பணியைச் செய்வதுதான்’ என்று டாக்டர் பதிலளிக்கிறார்.

ஓராண்டுக்குப் பிறகு, முழுமையாகவே பிளேக் நீங்கிவிட்டது. நகர மக்கள் கொண்டாடினர். துயரங்கள் முடிவுக்கு வந்தன. இயல்புநிலை திரும்பியது. எனினும், ‘இந்த நிகழ்வுகள் இறுதி வெற்றியைப் பெற்ற கதையாக இருக்காது’ என்று டாக்டர் ரியூவுக்குத் தெரியும் என்றே காம்யு எழுதுகிறார். ‘உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பதைப் பற்றிய பதிவாகவே இது இருக்கும். சந்தேகத்துக்கு இடமில்லாமல், மீண்டும் ஒருமுறை இந்த அபாயத்துக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கும்.’ பிளேக், ‘எப்போதும் சாகாது’ என்று காம்யு தொடர்கிறார்; அது, மீண்டும் ஒருமுறை வருகிற நாளுக்காக ‘படுக்கையறைகளில், நிலவறைகளில், ட்ரங்குப் பெட்டிகளில், கைக்குட்டைகளில், பழைய காகிதங்களில் காத்துக்கொண்டிருக்கிறது’, ‘எலிகளை எழுப்பி, திருப்திகரமான நகரங்களுக்குச் சென்று அங்கு சாகச் சொல்லி அனுப்பிக்கொண்டிருக்கிறது.’

காம்யு நம்மிடம் நாம் வாழும் காலகட்டத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை; வருவதை முன்பே உரைக்கும் ஒரு தீர்க்கதரிசியைப் போல நோயைக் கட்டுப்படுத்துதற்கான சிறந்த வழிமுறைகள் செயல்படாமல்போவதைப் பற்றியும், மனித இயல்புகளை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறார். அவருக்குத் தெரிந்ததும் நமக்குத் தெரியாததும் இதுதான்: ‘ஒவ்வொருவரும் தனக்குள்ளே இந்த உயிர்க்கொல்லி நோயைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த உலகத்தில் எவரும், எந்த மனிதரும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இல்லை.’

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x