உங்கள் அனுபவம் எப்படி? ஒரு விற்பனையாளர் - ஒரு வாசகர்

உங்கள் அனுபவம் எப்படி? ஒரு விற்பனையாளர் - ஒரு வாசகர்
Updated on
1 min read

மாணவர்கள் திருவிழா

சி. மகேந்திரன், மகேந்திரா புக் செல்லர், சென்னை

ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வருகைதான் ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிறப்பு. இது போன்ற மாணவர் கூட்டத்தை வேறு எந்தப் புத்தகத் திருவிழாவிலும் நான் பார்த்ததில்லை. எங்கள் அரங்கில் உ.வே.சா. நூல் நிலைய வெளியீடுகளான ‘என் சரித்திரம்’, ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு’ மற்றும் ‘சங்கீத மும்மொழிகள்’, ‘சங்கீத வித்வான் சரித்திரம்’ ஆகிய அரிய நூல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதோடு, மஞ்சுல் பதிப்பகத்தின் ‘எனது பயணம்’, கண்ணதாசன் பதிப்பகத்தின் ‘அக்கினிச் சிறகுகள்’, ‘திருப்புமுனை’, ‘கலாம் காலங்கள்’ ஆகிய அப்துல் கலாமின் நூல்கள்தான் விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.

உள்ளூர்ப் பெருவிழா

செந்தில்குமார் - இலக்கிய ஆர்வலர், ஈரோடு.

ஈரோடு மக்களைப் பொறுத்தவரை இது 12 நாள் திருவிழா. யார் யாரைச் சந்தித்தாலும் ‘புத்தகத் திருவிழாவுக்குப் போனீங்களா?’ என்றுதான் பேச ஆரம்பிக்கிறார்கள் என்பது திருவிழாவின் வெற்றி. புத்தக விமர்சனம், மதிப்புரைகளை விருப்பிப் படிப்பது என் வழக்கம். அப்படிப் படிக்கும்போது, நான் விரும்பும் புத்தகங்களை டைரியில் குறித்து வைப்பேன். புத்தகத் திருவிழாவில் அவற்றை வாங்கிவிடுவேன். சராசரியாக ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரம் என்று பட்ஜெட் போட்டு, புத்தகத் திருவிழாவில் நுழைந்தால் அது ரூ. 7 ஆயிரம் வரை நீண்டுவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. விசாலமான புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தாலும், பகலில் கொளுத்தும் வெயில் அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in