Published : 28 Mar 2020 08:19 am

Updated : 28 Mar 2020 08:19 am

 

Published : 28 Mar 2020 08:19 AM
Last Updated : 28 Mar 2020 08:19 AM

நூல்நோக்கு: பக்கீரும் சிறுவனும்

book-review

பக்கீரும் சிறுவனும்

ப்ளக் ப்ளக் ப்ளக்
ராணிதிலக்
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
96777 78863
விலை: ரூ. 90


கண்ணுக்கு எட்டும் வரை வீடுகளே தெரியாத நிலமும் தாவரங்களும் வெயிலும் நதியும் மொழிரூபம் கொள்ளும் கவிதைகள் ராணிதிலக் உடையவை. ஊருக்கு வெளியே சாலையில் நடந்துசெல்லும் சிறுவனின் மனம் கொண்ட நாடோடியின் கண்களால் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘மெலட்டூர் ஆற்றுப் பாலம்’ கவிதையில் பாலம் இல்லாதபோது இருந்த ஆற்றையும், பாலம் தூர்ந்த பிறகு ஓடும் ஆற்றையும் கற்பனை செய்து எழுதியுள்ளார். அப்போது ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் பாலமாகப் பரிசல் ஆகிறது. அப்போது கைகளை நனைக்கும் ஈரத்தைப் போன்ற உணர்வை ‘ப்ளக் ப்ளக் ப்ளக்’ கவிதைகள் தருகின்றன. சமீபத்திய நவீனக் கவிதைகளில் தொலைந்துவிட்ட கூர்மையும் செறிவும் தெளிவும் ராணிதிலக்கின் கவிதைகளை நினைவுகூரத்தக்க அனுபவமாக்குகின்றன. காவிரி ஆற்றங்கரையின் இயற்கையையும் நாகரிகத்தையும் புதியதாகப் பார்க்கும் கண்களின் காட்சிகளாக, தருணங்களாக, வண்டலாகப் படிந்திருக்கும் படைப்புகள் இவை.
- ஷங்கர்

சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்

சிறு கதை தொகுப்பாசிரியர்: எஸ்.செந்தில்குமார்
எழுத்து பிரசுரம் வெளியீடு
அண்ணா நகர் மேற்கு, சென்னை-40.
98400 65000
விலை: ரூ.330

இலக்கியத்தின் மற்ற எந்த வடிவத்தைவிடவும் சிறுகதையில் தமிழ்ச் சமூகம் செய்திருக்கும் சாதனை மிகப் பெரியது. நூற்றாண்டு நெடிய பாரம்பரியம் கொண்ட சிறுகதை வரலாற்றில் உலகத் தரத்திலான பல நூறு கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதனால்தான், இன்று சிறுகதை எழுத வரும் ஒருவருக்கு முன் இருக்கும் சவால் மிகப் பெரியது. இந்தச் சாதனைகளைக் கடந்த ஒரு கதை எழுதுவது அவ்வளவு சுலபமானது அல்ல. சிறுகதை வடிவத்தை நுட்பமாகப் புரிந்துகொள்வதற்கென எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாரின் சிரத்தையான முயற்சியில் ஒரு நூல் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. தொடக்கக் கால தமிழ்ச் சிறுகதைகள், கதை நிலம், மொழிபெயர்ப்புக் கதைகள் நிகழ்த்திய மாற்றங்கள், கதைகளில் அரசியல், அரசியலற்ற கதைகளின் அரசியல், சமகால சர்வதேசப் போக்கு, சிறுகதைகளுக்கும் சினிமாவுக்குமான உறவு, கதைகளில் மாயத்தன்மை என வெவ்வேறு விஷயங்கள் குறித்து தமிழ் இலக்கியத்தின் முக்கியமான 18 ஆளுமைகள் இந்த நூலில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.
- கதிரவன்

விமர்சனங்களுக்குப் பதில்

திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?
விடுதலை இராசேந்திரன்
நிமிர்வோம் வெளியீடு, திருவான்மியூர்,
சென்னை-41. 94441 15133, விலை: ரூ.120

பெரியார் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மறுத்து ஆதாரபூர்வமான விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம். ‘திராவிட மாயை’ என்ற தலைப்பில் குணா எழுதிய புத்தகத்துக்கு எழுதிய மறுப்பாக இது எழுதப்பட்டிருக்கிறது. என்றாலும், பெரியார் பற்றிய பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கும் பதில் சொல்வதாக அமைந்திருக்கிறது.
- பி.எஸ்.கவின்


Book reviewபக்கீரும் சிறுவனும்நூல்நோக்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x