Published : 28 Mar 2020 08:20 am

Updated : 28 Mar 2020 08:20 am

 

Published : 28 Mar 2020 08:20 AM
Last Updated : 28 Mar 2020 08:20 AM

ஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்?

21-days-lockdown

ஒட்டுமொத்த இந்தியா மட்டும் அல்ல; இந்த உலகின் மூன்றில் ஒரு பங்கு மனித குலமும் வீட்டுக்குள்ளேயே இன்று இருக்கிறது. கரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள ‘ஊரடங்கு’ எனும் உத்தியை உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் இந்நாட்களில், வீட்டில் நேரத்தை எப்படிப் பயனுள்ள வகையில் கழிப்பது என்பது பலர் முன்பும் எழுந்திருக்கும் கேள்வி. தொலைக்காட்சி, சமூக வலைதளங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு புத்தகங்களைக் கையில் எடுங்கள் என்கிறார்கள் இவர்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்


இந்தச் சூழ்நிலையில் நல்ல இசை கேட்பது, ஆவணப்படம் பார்ப்பது, கவிதை மற்றும் நாவல் வாசிப்பது என்று எனது நாட்கள் கழிகின்றன. கிரேக்க நாடகங்கள், ஷேக்ஸ்பியரை மறுவாசிப்பு செய்கிறேன். குறுந்தொகைப் பாடல்களில் தினம் 10 வாசிக்கிறேன். டால்ஸ்டாய் எழுதிய ‘புத்துயிர்ப்பு’ நாவலை வாசிக்க எடுத்து வைத்துள்ளேன். இந்தச் சூழ்நிலையில் வாழ்க்கை வரலாறு, கவிதை படிக்கவே பிடித்தமாக உள்ளது. முடிந்தவரை ஒரு நாளைத் திட்டமிட்டுக்கொள்கிறேன். காலை ஒரு மணி நேரம் கவிதை வாசிப்பு. பின்னர் இரண்டு மணி நேரம் இணையம். அதில் மெயில், அன்றாட எழுத்துப் பணிகள். பிறகு, ஒரு ஆவணப்படம். மதியம் ஒரு மணி நேர உறக்கம். பிறகு, இரண்டு மணி நேரம் நாவல் அல்லது வாழ்க்கை வரலாறு வாசிப்பு. மாலை பீத்தோவன், மொஸார்ட் இசை. பிறகு, நண்பர்களுடன் தொலைபேசி உரையாடல். இரவு ஏழு மணிக்கு ஒரு திரைப்படம். பிறகு ஒரு மணி நேரம் கறுப்புவெள்ளை கால சினிமா பாடல்கள் பார்ப்பது. இப்படித்தான் இந்த நாட்களை எதிர்கொள்கிறேன்.

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பாளர்

படிப்பதற்கு நிகராக எழுத்து வேலைக்கு உகந்ததாகவும் இந்தச் சூழலை மாற்றிக்கொண்டிருக்கிறேன். சென்ற ஆண்டு மொழிபெயர்த்து முடித்த அருந்ததி ராய் நாவலைத் திருத்தம் செய்கிறேன். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘பிரேவ் நியூ வேர்ல்டு’நாவலை மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன். வீட்டுக்கு வந்திருக்கும் மகன் என்னை வாசிப்பறையிலிருந்து இழுத்துவந்து நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்க்க அழைக்கிறான். அதில் மனம் திரும்பாமல் மீண்டும் அறைக்கு வந்து படிக்க வருகிறேன். கை தன்னிச்சையாக ஸரமாகோவின் ‘பிளைண்ட்னெஸ்’ நாவலை எடுக்கிறது. என்னை நானே கடிந்துகொண்டு பி.ஜி.வோடவுஸுக்குச் செல்கிறேன். எனக்கு எப்போதும் அடைக்கலம் அளித்து ஆசுவாசப்படுத்தும் மேதை அவர். இப்போதும் கைவிடவில்லை. இப்படி ஒவ்வொரு நாளும் புதுப்புது உலகங்களுக்குள் பிரவேசிக்கிறேன்.

நசீமா ரசாக் எழுத்தாளர்

பரபரப்பான வாழ்க்கையில் நமக்குப் பிடித்த பல விஷயங்களைக் காலத்தின் காற்றில் கரைத்துவிட்டிருந்தோம் என்ற கசப்பான உண்மையை உணரும் வாய்ப்பை கரோனா தந்திருக்கிறது. நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் மட்டுமே இந்த 21 நாட்கள் முழுக்கக் கிடைத்துள்ளன என்பது ஒருவகையில் வரம். புத்தகத்தை வாசிக்கும்போது நம் இடம் மாறும், காலம் மாறும், ஒரு புது அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக, குழந்தைகளோடு சேர்ந்து வாசிப்பதும், அதைப் பற்றி அவர்களிடம் கதைப்பதும், அவர்களை வாசிப்பின் பக்கம் ஈர்க்கச்செய்யும்.

த.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., தொல்லியல் துறை ஆணையர்

நிர்ப்பந்தமானதுதான் என்றாலும் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் இவ்வளவு ஓய்வு கிடைப்பது என்பது அபூர்வமானது. நிறைய புத்தகம் வாங்கி வைத்திருப்போம். இந்த நேரத்தை வாசிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சூழல் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. ஏன் இப்படி ஒரு நிலை, சுற்றுச்சூழலுக்கு என்ன செய்துவைத்திருக்கிறோம், ஒரு சாதாரண கிருமி எப்படி அரசியல் எல்லைகளையெல்லாம் உடைத்தெறிந்திருக்கிறது, உலக மக்களுக்கு இதன் மூலம் ஏதேனும் செய்தி சொல்கிறதா? இது தொடர்பாகத்தான் நான் வாசிக்கிறேன். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை திட்டமிட்டு வாசிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரமேஷ் வழக்கறிஞர்

நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால், அதற்கான அவகாசம் இருக்காது. ஒரு புத்தகத்தை நிறுத்தி நிதானமாக வாசித்திருக்கக்கூட முடிந்திருக்காது. புத்தகம் பேசும் விஷயங்களை யோசிப்பதற்கும் உள்வாங்கிக்கொள்வதற்கும் வாய்ப்பு இருந்திருக்காது. நான் ஏற்கெனவே வாசித்து ரசித்த புத்தகங்களையெல்லாம் இப்போது மீண்டும் வாசிக்கிறேன். நிதானமாக, ஆழமாக உள்வாங்கி, வர்ணனைகளையெல்லாம் ரசித்து வாசிக்கிறேன். சாதாரணமாகக் கடந்துபோன வரிகளெல்லாம் இப்போது நுட்பமாகப் பிடிபடுகின்றன. பொதுவாக, நம் பிள்ளைகள் சொல்வதைவிட நாம் செய்வதைத்தான் பின்பற்றுவார்கள். இந்தக் காலகட்டத்தை ஒவ்வொருவரும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

நர்மதா சேகர் ஐடி ஊழியர்

வீட்டிலிருந்து வேலை பார்ப்பது என்பது ஐடி ஊழியர்களுக்கு வழக்கமானதுதான். ஆனால், இப்போது வித்தியாசமாக இருக்கிறது. எல்லோரும் வீட்டில் இருக்கிறோம். நிறைய பேர் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் என ஹெச்டியில் படம் பார்ப்பதால் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறவர்களுக்கு இணையம் ஒத்துழைக்க மறுக்கிறது. அவர்களை மனதில் கொண்டாவது இணையப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வாசிப்பை வகைப்படுத்திக்கொள்ளலாம். எந்தப் புத்தகமெல்லாம் உங்களை மகிழ்விக்குமோ அதை வாசிக்கலாம். எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் அப்படி.21 days lockdownஊரடங்கு காலத்தில் ஏன் வாசிக்க வேண்டும்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x