

சுட்டி டி.வி.யில் காட்டு விலங்குகளைக் கதாநாயகர்களாகக் கொண்ட ஒரு தொடர்கதை ஒளிபரப்பாகிறது. ‘வருத்தப்படாத கரடிகள் சங்கம்’ என்று அதற்குப் பெயர். முதலாளி ஒருவனின் தூண்டுதலால், ஒரு வேட்டைக்காரன் காட்டில் உள்ள மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகிறான். மரம் வெட்டுவது மட்டுமே அவனது தொழில். வேட்டைக்காரனின் தொழிலால் தம் வாழ்விடமான காடு மெல்ல அழிந்துவிடும் என்று விலங்குகள் அச்சப்படுகின்றன. இதனால் வேட்டைக்காரனை மரம் வெட்டவிடாமல் தடுத்து நிறுத்த தொடர்ச்சியாக விலங்குகள் முயற்சி செய்கின்றன. இரு கரடிகள் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக அமைகின்றன. குழந்தைகளுக்கானது என்பதால் வேடிக்கையும் நகைச்சுவையும் இக்கதையில் நிரம்பப் பெற்றிருக்கும். கதையின் மையம் காடு அழிவுறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாகும். விலங்குகளின் நோக்கமும் (மனிதர்களுக்கு அல்ல) அதுவேயாகும்.
அந்தக் கதையில் அணில் ஒரு கனவு காண்கிறது. தாம் கூடு கட்டியிருக்கும் மரத்தை வேட்டைக்காரன் வந்து வெட்டுவதாகவும்; அதனால் அம்மரத்தில் இருக்கும் தன் கூடு கலைந்து, சிதைந்து போய்விடுவதாகவும், தமக்குப் பெரும் துன்பம் வரப்போவதாகவும் அந்த அணிலின் கனவு அமைந்திருக்கும். கனவு கலைந்து விழிப்புற்ற அணில், தன் நிலையை எண்ணி வருந்தும். பின்னர் அணில், கரடிகளுடன் சேர்ந்து வேட்டைக்காரன் மரம் வெட்டுவதைத் தடுப்பதற்கு முயற்சிசெய்யும்; அவனைத் தொடர்ந்து துன்புறுத்தும்.
சீன மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட கதை இது. சீன மொழியில் உருவாக்கப்பட்டுள்ள இக்கதையில் வரும் அணில் காணும் கனவு குறித்த காட்சி, கலித்தொகைப் பாடலொன்றில் யானை கண்ட கனவுக் காட்சியோடு ஒப்புநோக்கத் தக்கவகையில் உள்ளது. கபிலர் பாடிய கலித்தொகைப் பாடல் அது. தோழி பேசுவதாக அமைந்த பாடல் அது.
யானை கண்ட கனவு
கபிலர் பாடிய அப்பாட்டு, திருமணத்துக்கு முன்னர் காதலிக்கும் காலத்தில் காதலன் ஒருநாள் காதலியைக் காண்பதற்காக இரவு நேரத்தில் வருகிறான். அதை அறிந்த காதலியின் தோழியொருத்திக் காதலனிடம் ‘நீ இரவில் வருவது எங்களுக்குத் துன்பத்தைத் தருவதாய் உள்ளது. அதனால் இனிமேல் இரவில் வருவதைத் தவிர்த்துப் பகலில் வருக’ எனக் கூறுவதாகும். இதை ‘இரவுக் குறி மறுத்துப் பகற்குறி சுட்டியது’ என அழைப்பது சங்க மரபாகும்.
தோழி சொல்வதாக அமைந்த அந்தப் பாட்டில் யானை காணும் கனவு இது.
கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇ,
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம்மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும்……… (கலி. 49: 1 – 9)
‘தன்னைத் தாக்க வந்த புலியை மிக வருத்தத்துடன் எதிர்த்து வென்ற யானை, புலியுடன் போரிட்ட களைப்பினால் நீண்டுயர்ந்த மலைச் சாரலில் உறங்கியது. நனவிலே தான் செய்தது மனத்திலே நிலைத்திருந்ததால் கனவிலும் புலி வரக்கண்டது. கண்டதும் கடும்சினம் கொண்டு, அருகில் புதுமலர்கள் நிறைந்திருந்த ஒரு வேங்கை மரத்தைப் புலி என்றெண்ணி, அதனைத் தன் ஆற்றலால் சாய்த்து அழித்தது’ என்கிறது மேற்கண்ட பாடலடிகள்.
அணில் கண்ட கனவும், யானை கண்ட கனவும் தன் உயிரச்சத்தின் பாற்பட்டதாகும். நனவில் கண்ட நிகழ்ச்சி மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்ததனால் இரு விலங்குகளின் கனவிலும் வந்தன. அணிலின் கனவு எதிர்காலத்தில் நிகழப்போவது குறித்த எச்சரிக்கையாக உள்ளது. நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்துக் கண்ட கனவாக யானையின் கனவு அமைகின்றது.
அகநானூற்றுப் பாடலொன்றில் (170) பகல் முழுவதும் இரை தேடி கிடைக்காமல் திரிந்துவிட்டுப் பசியோடு இரவில் உறங்கும் ஒரு காக்கை கனவில் சுறா மீனைப் பிடித்துத் தின்பதாகக் கனவு கண்டு மகிழ்கிற கதையும் உண்டு!