Published : 22 Mar 2020 09:13 AM
Last Updated : 22 Mar 2020 09:13 AM

வெண்ணிற நினைவுகள்: ஆடும் கால்கள்

பரதம் ஆடும் பெண்களை எத்தனையோ திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், பரதம் ஆடுகிற ஆணின் உலகை மிக அழகாகப் பதிவுசெய்த ஒரே திரைப்படம் ‘சலங்கை ஒலி’. கமல் ஹாசன் நடித்து, தெலுங்கில் வெளியான ‘சாகர சங்கமம்’ என்ற திரைப்படத்தின் தமிழ் வடிவமே ‘சலங்கை ஒலி’. 1983-ல் வெளியான இப்படத்தைக் கே.விஸ்வநாத் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு பி.எஸ்.நிவாஸ். இசை இளையராஜா. இப்படத்துக்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். அதுபோலவே எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் சிறந்த பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

படத்தின் தொடக்கக் காட்சியில் குமாரி ஷைலஜாவின் நடன நிகழ்ச்சியைக் காண்பதற்காக ரிக்‌ஷாவில் வந்து இறங்குகிறார் கமல் ஹாசன்; அவரது கதாபாத்திரத்தின் பெயர் பாலு. வயதான தோற்றம். அவரது கழுத்தில் ஒரு மஃப்ளர். தோளில் ஜோல்னா பை. வாயில் வெற்றிலை. அவர் ரிக்‌ஷாவில் மறந்துவிட்டுவந்த ரப்பர் செருப்பை ரிக்‌ஷாக்காரன் தூக்கி எறிகிறான். பாலு சொந்த வாழ்க்கையின் மீது கவனமே இல்லாதவர் என்பதை அந்த ஒரு காட்சியின் வழியே புரிய வைத்துவிடுகிறார்கள். பத்திரிகையாளர்களுக்கான பகுதியில் பாலு உள்ளே நுழைகிறார். நடன நிகழ்ச்சி தொடங்குகிறது. ஷைலஜா நாட்டியத்தில் கவனம் செலுத்துவதைவிடவும் கைதட்டல்கள் வாங்குவதிலே கவனம் செலுத்துகிறார் என்பது பாலுவை எரிச்சல்படுத்துகிறது. மிக மோசமான நாட்டியம் என மறுநாள் கடுமையாக விமர்சனம் எழுதுகிறார். இதைக் கண்டு பொங்கி எழுந்த ஷைலஜாவும் அவளது காதலரும் பத்திரிகை அலுவலகத்துக்கே தேடிவந்து, மன்னிப்பு கேட்கும்படி மிரட்டுகிறார்கள். “உனக்கு நடனத்தைப் பற்றி என்ன தெரியும்?” எனக் காதலன் ஆத்திரப்படுகிறான்.

கழிப்பறைக்குச் சென்று பாட்டிலில் மீதமிருக்கும் மதுவைக் குடித்துவிட்டு வரும் பாலு, டேப்ரெக்கார்டரை ஒலிக்கவிட்டுப் பரதம், கதக், கதகளி என ஆடிக்காட்டுகிறார். அதுவும் கதகளி ஆடிக்காட்டும்போது அவர் காலை உயர்த்திய வேகத்தில் காபி டம்ளர்கள் பறப்பதும், அந்த வேகத்திலே நடனம் தெரியுமா எனக் கேட்ட ஷைலஜாவின் காதலன் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு வெளியேறுவதும் மறக்க முடியாத காட்சி. அரங்கத்தின் வாசலில் தொடங்கி அலுவலகத்தில் நடனமாடிவிட்டு வெளியேறுவது வரையான அந்தப் பன்னிரண்டு நிமிடமும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருக்கிறார் விஸ்வநாத்.

ஒரு கதாபாத்திரத்தை மிக எளிமையாக அறிமுகப்படுத்தி அவரது குடி, வெற்றிலைப் பழக்கம் எனப் பலவீனங்களைக் காட்டிவரும் இயக்குநர், ஆவேசமாக பாலு ஆடிக்காட்டுவதன் மூலம் அவர் ஒரு நிகரற்ற நடனக் கலைஞர் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். இவ்வளவு திறமையான கலைஞன் ஏன் இப்படி இருக்கிறார் என்று பார்வையாளர்கள் யோசிக்கும்போது பாலுவின் கடந்த கால வாழ்க்கையை விவரிக்கத் தொடங்குகிறார்.

ஒரு காட்சி தொடங்கினால் அது வளர்ந்து அடுத்த நிலையைத் தொட்டு முடிவடைவதற்கு ஐந்தாறு காட்சிகளாகிவிடுகிறது. இது திரைக்கதையின் தனித்துவம். படத்தில் சரத்பாபுவுக்கும் கமல் ஹாசனுக்குமான நட்பு அபூர்வமானது. இளமையில் தொடங்கி முதுமை வரை தொடரும் அன்பின் அடையாளமாகவே அந்த நட்பு காட்டப்படுகிறது. கதக் கற்றுக்கொள்வதற்காகக் குருவைத் தேடி வரும் கமல் ஹாசன், மொழி தெரியாத பெண்ணிடம் நடனத்தின் வழியே ‘என்னிடம் பணமில்லை, ஆனால் கதக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ எனச் சொல்லும் காட்சி கவித்துவமானது. அந்தக் காட்சியில் கமல் நடனமாடுகிறவர்களின் கால்களைக் குனிந்து கவனித்துக்கொண்டிருப்பார். நடனத்தின் மீது தீவிர ஆசை கொண்டவர் என்பதை அக்காட்சி அழகாக வெளிப்படுத்துகிறது.

கல்யாண வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மாவைக் காணவரும் பாலு, நடனமாடுகிற தனது புகைப்படங்களைக் காட்டுகிறான். “அந்தப் புகைப்படத்தில் ஒன்றை வாங்கித் தர முடியுமா?” என அம்மா தயங்கிக் கேட்கிறாள். “தருகிறேன்” என பாலு சொன்னபோதும், “வேண்டாம், தவறாக நினைத்துவிடுவார்கள்” என மறுத்துவிடுகிறாள். பின்பு, புகழ்பெற்ற பரதக் கலைஞர் மஞ்சு பார்கவியின் நடனத்தை ஒரு திருமண வீட்டில் காணும் அம்மா தன் மகன் ஆடுவதுபோல கனவுகாண்கிறாள். சிறிய அக்காட்சியிலே அவர்களின் வறுமையும் கனவுகளும் ஒருசேரச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

கோவிலில் வைத்து பாலு புகைப்படம் எடுக்க முற்படும்போது ஸ்டுடியோ பையன் அபிநயம் என்பதை ஏதோ சாப்பிடும் உணவு என நினைத்துக்கொண்டு சம்மணமிட்டு அமர்வது வேடிக்கையான காட்சி. மாதவிக்கும் பாலுவுக்குமான காதலும், மாதவியின் பொருட்டு அவளது மகளுக்கு பாலு பரதம் கற்றுத் தருவதும், மாதவியின் வாழ்க்கை உண்மைகளை அறிந்துகொள்ளாமல் பழகுவதும் உணர்ச்சிபூர்வமான கதைப்போக்கு. பரதத்தைக் கதைக்களமாகக் கொண்ட படங்களில் போட்டி காரணமாகவே ஆண் நடனம் கற்றுக்கொள்வான். ஆவேசமாக நடனமாடுவான். ‘பாட்டும் பரதமும்’ என்ற சிவாஜி படம் ஒரு உதாரணம். ஆனால், ‘சலங்கை ஒலி’யில் வரும் பாலுவோ சிறந்த நடனக்கலைஞர் ஆக விரும்புகிறான். வாழ்க்கை நெருக்கடிகள் அவன் கனவைக் கலைத்துவிடுகின்றன. கமல் ஹாசன் முறையாகப் பரதம் பயின்றவர். பல்வேறு விதமான நடனங்களையும் நன்றாக அறிந்தவர். மிகச் சிறந்த நடிகர். ஆகவே, பாலு கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். கமல் ஹாசனின் திரை வாழ்வில் இப்படம் ஒரு தனி அடையாளம்.

கதக் நடனம் மீது அவருக்குத் தீவிர ஆசை இருப்பதை இந்தப் படத்தில் காண முடிகிறது. அது பின்னாளில் ‘விஸ்வரூபம்’ படத்தில் கதக் கலைஞராகவே நடித்து முழுமையாகியிருக்கிறது. ‘சலங்கை ஒலி’ வெளியான நாட்களில் மதுரையில் நிறைய இளைஞர்கள் பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததை அறிவேன். அதுபோலவே, கல்லூரி கலை விழாக்களில் யாராவது ஒரு மாணவன் ‘சலங்கை ஒலி’ பாடலுக்குப் பரதம் ஆடுவதும் வழக்கமானது. இன்றும் அது தொடரவே செய்கிறது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என நான்கு மாநிலத்திலும் இப்படம் நூறு நாட்கள் ஓடி சாதனை செய்திருக்கிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர். தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x