Published : 22 Mar 2020 09:13 AM
Last Updated : 22 Mar 2020 09:13 AM

மதமும் தத்துவமும் கொடுத்த நிம்மதியைத் தற்போது கலை மட்டுமே தர முடியும்!- கணபதி சுப்பிரமணியம் பேட்டி

ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம், சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளைக் கீற்றிவருகிறார். இவர் எழுதி சமீபத்தில் ‘யாவரும் பதிப்பக’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகமானது ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் மிக முக்கியமானது. ஓவியம் சார்ந்து பேசத் தொடங்கி அது வேறு வேறு புலங்களுக்கு இயல்பாகப் பயணிக்கும் உரையாடல் இது.

ஓவியம், அதுசார்ந்த கல்வியை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?

குழந்தைப் பருவத்தில் படித்த ‘பூந்தளிர்’, ‘அம்புலிமாமா’, ‘பாலமித்ரா’, ‘ரத்னபாலா’ புத்தகங்களில் இருந்த அற்புதமான ஓவியங்களும் சிறுவர் கதைப் புத்தகங்கள், இதழ்களின் நீர்வண்ண ஓவியங்களும் வேறொரு உலகமாக இருந்தது எனக்கு. அமெரிக்க, ஐரோப்பிய காமிக்ஸ் புத்தகங்கள் என்னைப் பெரிதளவும் ஈர்த்தன. பழக்கப்பட்ட உலகத்துக்கும் புகைப்படங்களில் பார்க்கும் உலகத்துக்கும் அப்பாற்பட்ட தனி உலகமாகச் சித்திர உலகம் எனக்கு இருந்தது. எனது பதினோறாவது வயதில் இப்படிப்பட்ட பின்னணியில் ஓவியம் படிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

நீங்கள் ஓவியக் கல்லூரிக்குச் செல்லவில்லை. சுயமுயற்சியில் எப்படி ஓவியத்தைக் கற்றுக்கொண்டீர்கள்?

பள்ளி நூலகத்தில் இருந்த ஓவியம் சார்ந்த புத்தகங்களில் தொடங்கிய அந்த முயற்சி, இறுதியில் சந்தனு சித்திர வித்தியாலயம் நடத்திய தபால்வழி முறையில் நின்றது. நார்மன் ராக்வெல் போன்ற சிறந்த ஓவியர்களை அவர்கள் தங்களது குழுவில் சேர்த்துக்கொண்டனர். ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், கான்ட் போன்றவர்களில் தொடங்கி காண்டின்ஸ்கி, க்ளே, ராத்கோ, ஹாப்மன் போன்ற ஓவியர்களின் எழுத்துகள் வரை பல பொக்கிஷங்கள் ஆசிரியர்களாக அமைகின்றன. சமகால ஓவியர்கள், ஆசிரியர்கள், விமர்சகர்களுடனான பல்வேறு உரையாடல்கள் எண்ணங்களை மேலும் விரிவுபடுத்துகின்றன.

ஓவியம், சிற்பம் குறித்துப் பேசும்போது தொன்மை, தற்காலம், நவீனம், வெகுஜனக் கலை, செவ்வியல் கலை என்று சொல்லப்படும் வித்தியாசங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சமகாலம் என்ற வார்த்தையை நான் வெங்காயம் மாதிரி பார்க்கிறேன். இளநீர் மாதிரி வெங்காயத்தைக் குறுக்காக வெட்டினால், எல்லா அடுக்குகளையும் பார்க்க முடிவதுபோல எல்லாம் ஒரே காலத்தில் பக்கவாட்டில் ஜனிக்கிறது. செவ்வியல்தன்மையும் நவீனத்தன்மையும் பின்நவீனத்தன்மையும் சேர்ந்தேதான் உள்ளது. அதனால்தான், ஜப்பானின் மாங்கா காமிக்ஸும், ஐரோப்பிய அதிநவீன ஓவியங்களும் சேர்ந்தே உலகம் முழுவதும் ரசிக்கப்படுவதாக இருக்கிறது. டின் டின் காமிக்ஸ் ஓவியங்களை பிகாசோ ஓவியங்களைப் போலவே காட்சிக்கு வைத்து ரசிக்கிறார்கள். நமது தொன்மையான சிலைகளுக்கு இன்று இருக்கும் அபரிமிதமான மதிப்பு அதன் காலம் தொடர்புடையது மட்டுமல்ல; அது இன்றைய பார்வையாளரையும் பிரமிக்க வைக்கக்கூடிய கலை நயத்துடன், கைத்திறனுடன், நளினத்துடன், வடிவத்துடன், செம்மையுடன் படைக்கப்பட்டுள்ளது என்பதுதான் காரணம்.

21-ம் நூற்றாண்டின் பின்னணியில் கலையை எப்படி வரையறுப்பீர்கள்?

பொருளாதார யதார்த்தம், உறவுநிலை யதார்த்தம், ஆரோக்கியம் சார்ந்த யதார்த்தம், சமூக யதார்த்தம் இப்படி நமது யதார்த்தங்கள் பல வகையானவை. இந்த யதார்த்தங்களை நாம் சமாளிக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதற்கு நடுவில் கொஞ்சம்போல மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று பார்க்கிறோம். இந்தப் பிரபஞ்சம் நமது சொந்தப் பிரச்சினைகளை மீறி, பிரம்மாண்டமாக இருக்கிறது. தலையை நிமிர்த்திப் பார்த்தால் வானத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். நம் யதார்த்தத்துக்கும் அதற்கும் தொடர்பில்லை. ஆனால், அவை இருக்கின்றன. இங்கேதான் கலை என்பதன் சாத்தியம் என்ன என்ற கேள்வி வருகிறது. ஒரு பறவைக்கு இறக்கை எப்படி இருக்கிறதோ அதுதான் மனிதனுக்குக் கலையாக உள்ளது. இறக்கையின் பயனை உணரும்போதுதான் நாம் பறக்க முடியும். இல்லையென்றால் இறக்கை நமக்குச் சுமையாகிவிடும்.

சென்ற நூற்றாண்டில் மதிப்போடு அணுகப்பட்ட படைப்பு, படைப்பாற்றல், கைத்திறனை இந்நூற்றாண்டில் தொழில்நுட்பமும் உற்பத்தியும் இடம்பெயர்த்திருக்கிறதா?

ஒருவர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் ஒதுக்குவது என்ற நிலை இன்று இல்லை. ஒருவர் அலுவலகத்தில் இருந்துகொண்டே தனது ஈடுபாடு சார்ந்த இன்னொரு விஷயத்தைச் செய்யலாம். ஒருவர் சொல்ல எல்லோரும் கேட்பது என்ற நிலை போய் எல்லோரும் சொல்லக்கூடிய ஜனநாயகச் சூழல் உருவாகியிருக்கிறது. உயரத்தில் பொக்கிஷமாக வைத்துப் பராமரிக்கிற ‘எலைட்னெஸ்’ உடைக்கப்பட்டுவிட்டது. இது ஒரு வளர்ச்சி. அனிமேஷன் துறையில் ஜப்பானிய ஓவியர் ஹாயோ மியாசகி, கையிலேயே ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்து எடுக்கும் திரைப்படம் ஒவ்வொன்றும் பெரிய வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஐந்தாறு பேரைக் கொண்ட சின்னக் குழுவை வைத்து ஓவியங்களை வரைகிறார் அவர். அதேசமயத்தில், ஹாலிவுட்டில் டிஸ்னி ஸ்டுடியோ அதிகபட்சத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ஒரு அனிமேஷன் மென்பொருளை உருவாக்குகிறார்கள். படைப்பு வேறொரு அவதாரத்தை எடுத்திருக்கிறது. படைப்பும் தொழில்நுட்பமும் மிக நெருக்கமாகிக்கொண்டிருக்கிறது. எங்கே தேவையோ அப்போது அது தீவிரமாகச் செயல்படுகிறது.

கலைப் பரிணாமம் என்று ஒன்று இருக்கிறதா?

கலை பற்றி ஜோசப் ஷில்லிங்கர் கூறிய ஐந்து பரிமாணங்கள் ஒரு நல்ல கோட்பாடு. இயற்கையே கலையாக இருப்பது ஒரு கட்டம். ஒரு குயில் பாடுவது இயற்கை. நிலவை ரசிக்கிறோம். அந்தக் கலைச் செயல்பாட்டில் யாரும் பங்கேற்கவில்லை. இதற்கு அடுத்த நிலை, உயிர்கள் அதை போலச்செய்ய முயல்வது. அதற்கு எனது உடலையே நான் பயன்படுத்துகிறேன். பாடுதல், நடனம் எல்லாம் இருக்கும். அடுத்தது, தனியாகக் கருவிகளைப் பயன்படுத்தும் கட்டம். கரித்துண்டை எடுத்துக் கீற்றுகிறேன். இசைக் கருவிகள் இந்த மூன்றாவது கட்டத்தில்தான் வருகின்றன. நான்காவது கட்டத்தில், கருவிகளைக் கடக்கும் முயற்சி நடக்கிறது. இன்றைக்கு மத்தளம் எனும் தோல் கருவி தேவையில்லை. அதில் வரக்கூடிய ஒலியையும் அலைவரிசைகளையும் அந்தக் கருவி இல்லாமலேயே உருவாக்கக்கூடிய நான்காம் கட்டத்தில் பயணிக்கிறோம். இங்கே ஓவியத்துக்குக் கித்தான் கிடையாது. புகைப்படத்துக்கு ஃபிலிம் என்ற பொருள் தேவையில்லை. இது அளப்பரிய சுதந்திரத்தைக் கொடுக்கிறது. இந்த நிலை வரை மனிதனின் பங்கேற்பு இருக்கிறது. இதைத் தாண்டிய ஐந்தாவது பரிணாமம் உள்ளது. அங்கேதான் செயற்கை அறிவுத்திறன் வருகிறது. அங்கே இயந்திரம் என்பது நமது சக படைப்பாளியாக மாறுகிறது.

ஆனால், அங்கே மனிதன் தனிமையை, மன அழுத்தத்தை அனுபவிக்கத் தொடங்குகிறான் இல்லையா?

கணினி கொண்டு அந்தச் செயல்முறைகளில் ஈடுபட்டுவருகிறபோதும், நன்கு பரிணமித்துவிட்ட ஐந்தாம் கட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கும்போது அது மிகவும் இயல்பாக இருக்கிறது. எவ்வளவு நேரம் படித்தாலும் சோர்வைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இருப்பதில்லை. ஆனால், அதே அளவு செல்பேசியில் படித்துப் பாருங்கள். இணையத் தொழில்நுட்பம் வழியாக நாம் ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் பேருடன் தொடர்பில் இருக்கிறோம். உடலுக்கு அது அசாத்தியமாகிவிடுகிறது. அதற்கு நாம் தகவமைக்கப்படவில்லை. காலம், நிகழ்ச்சிகள், இடம் என எல்லாத் தளத்திலும் முடிவே இல்லாத தன்மை நமக்குப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. மெய்நிகர் யதார்த்தத்தின் ஆரம்ப நிலையில் இப்போது இருக்கிறோம். அங்கே என்னுடைய இருத்தல், அடையாளம், கதை எல்லாம் குழம்பிப்போய்விடுகின்றன. என்னுடைய பார்வையில் உள்ள எனக்கேயான பிரபஞ்சத்தை நான் இங்கே இழந்துவிடுகிறேன். இந்த அசாதாரணமான சூழ்நிலையில் நாம் ஆசுவாசமாக இருப்பதற்குக் கலை மட்டுமே உதவக்கூடியது என்று நம்புகிறேன். மதமும் தத்துவமும் கொடுத்த நிம்மதியைத் தற்போது கலை மட்டுமே தர முடியும்.

உங்களது ‘ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்’ புத்தகத்தில் வடிவம், வடிவமின்மை, இலக்கணம், மெய்சார், மெய்சாராத படைப்புகள் குறித்துப் பேசுகிறீர்கள்...

உருவப் படத்துக்கு இலக்கணம் இருக்கிறது. நிலக்காட்சிகளுக்கான இலக்கணமாகத் தூரத்தில் இருக்கிற பொருட்கள் சின்னதாகவும் விவரங்கள், வண்ணச்செறிவு குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் தத்ரூபமாக இருக்கும் என்றும் லியனார்டோ டாவின்சி எழுதி வைத்திருக்கிறார். இயற்கையில் இரண்டு கண்களுக்கு இடைவெளி எவ்வளவு உள்ளதோ அதுதான் அங்கேயும் இலக்கணமாக உள்ளது. ஓவிய இலக்கணம் என்று ஏதேனும் உண்டா என்று கேட்டால் அதற்கென தனியாக ஒன்று இருக்கிறதுதான். ஓவிய அம்சங்களான புள்ளி, கோடு, வடிவம், உருவம், இழைநயம், வண்ணம், ஒளித்திண்மை, நிறத்தின் செறிவு போன்ற தன்மைகள் இருக்கின்றன. ஒரு ஓவியத்தில் கண்கள் பயணம் மேற்கொள்கின்றன. எந்த இடத்தில் கண்கள் நிதானிக்க வேண்டும், எங்கே வேகமாகத் தாண்ட வேண்டும். இந்த இலக்கணம் சினிமாவுக்கும் இசைக்கும் பொருந்தக்கூடியது. வண்ணத்தையே எடுத்துக்கொண்டால் ஒரு வண்ணத்துக்குத் தனியாக ஒரு அனுபவம் கிடைக்கும். இன்னொரு வண்ணத்துடன் சேரும்போது இன்னொரு அனுபவம் கிடைக்கும். அதிலேயே சஞ்சரிக்கிற ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆலாபனை மாதிரி.

மேற்கத்திய கலை இலக்கணம், கீழைத்தேய இலக்கணம் இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன?

மகாபலிபுரத்தில் உள்ள மகிசாசுரமர்த்தினி சிற்பங்களைப் பாருங்கள். உயிர் போகும் யுத்தக்களம் அது. ஆனால், சிலையில் அத்தனை நளினமும் நாடகத்தன்மையும் இருக்கிறது. மெய் சார்ந்த, மெய் தாண்டிய ஒன்று இப்படியான படைப்புகளில் உள்ளது. தன்மை சார்ந்தது என்கிறது கிழக்கு. வடிவம் சார்ந்தது என்கிறது மேற்கு. நான் ஒரு மாம்பழத்தை வரைகிறேன் என்றால், மாம்பழத்தின் தன்மையைத்தான் வரைய வேண்டும் என்று கிழக்கு சொல்கிறது. நீங்கள் இந்த அறைக்குள் வந்தவுடனேயே மாம்பழத்தைப் பார்க்காமலேயே மாம்பழத்தின் வாசனை தெரிந்துவிடுகிறது. வாசனையை மாம்பழத்தின் ஒரு தன்மை என்று சொல்லலாம். மாம்பழத்தின் தன்மைதான் அறை முழுக்கப் பரவி வாசனையாக இருக்கிறதா அல்லது வாசம் என்ற அந்தத் தன்மையின் பருவடிவம்தான் மாம்பழமா என்று கேட்கலாம். அதைப் போல ருசி, வண்ணம், வடிவம் எல்லாம் ஒரு தன்மை. மாம்பழத்தின் மேற்கோடுகளை மட்டும் வரைவதல்ல ஓவியம். நாம் ஒன்றைச் சொந்தம் கொண்டாடுவதற்கு அதை வெல்லவோ வாங்கவோ எடுத்துக்கொள்ளவோ செய்கிறோம். ஒன்றைச் சொந்தம் கொண்டாடுவதற்குத் தானே அதுவாகிவிடுவதை கிழக்கு பரிந்துரைக்கிறது. அதைப் பூனைகளிடம் பார்க்கலாம். பூனை ஒரு பொருள் மீது தன் சருமத்தைத் தேய்க்கும்போது தன் மணத்தை அதன் மீது தெளித்து தனது உலகமாக ஆக்கிவிடுகிறது. பூனை அந்தப் பொருளோடு சேர்ந்து அந்த உலகைத் தனதாய் விரித்துவிடுகிறது.

சமீப காலமாக, நீங்கள் அதிகமாகப் பூனைகளை வரைகிறீர்கள். உங்கள் பூனைகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் வீட்டில் பூனை ஒன்று ஒரு குட்டியைப் பிரசவித்து விட்டுவிட்டுப் போனது. கண்கள் மட்டுமே திறந்த நிலையில் இருந்த அதற்குப் பால் கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடன் பழகி விளையாடவும் செய்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஆனந்தமான உறவு என்று புரியத் தொடங்கியது. ஒருநாள் வீட்டு வாசலில் பறவையின் இறகைப் போட்டுவிட்டுப் போனது. இன்னொருநாள், எலிக்குட்டி. கொஞ்சம் தொந்தரவை உணர்ந்தேன். அப்போதுதான் பூனை உளவியல் சார்ந்து படிக்க ஆரம்பித்தேன். பூனை என்னை மனிதனாகப் பார்ப்பதில்லை, அது என்னை இன்னொரு பெரிய பூனையாகத்தான் பார்க்கிறது என்று தெரிந்துகொண்டேன். அதற்கு நான் சாப்பாடு கொடுத்ததற்குப் பதிலாக அது கொடுத்த பரிசுதான் அந்த எலியும் பறவையும் என்பதைப் புரிந்துகொண்டேன். பூனை என்னை வேறுபடுத்தாமல் பார்த்தது எனக்கு இரண்டாம் பிறப்பாக இருந்தது. அதிலிருந்து பூனைகளை வரைந்துகொண்டே இருக்கிறேன்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

ஓவியம்: தேடல்கள், புரிதல்கள்

கணபதி சுப்பிரமணியம்

யாவரும் பதிப்பகம்

வேளச்சேரி, சென்னை-42.

தொடர்புக்கு: 90424 61472

விலை: ரூ.350

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x