Last Updated : 21 Mar, 2020 09:11 AM

 

Published : 21 Mar 2020 09:11 AM
Last Updated : 21 Mar 2020 09:11 AM

பூமித்தாயின் புதல்வர்கள்

நிலவுரிமை குறித்து இன்று நாம் பேசத் தொடங்கினால் அந்த வரலாற்றில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியரின் ரத்தமும் சதையுமான அர்ப்பணிப்பு இருக்கிறது. நிலம் எப்படி பன்னெடுங்காலமாக மக்களை ஒடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்ந்து, அந்த மக்களுக்கான விடுதலை நிலவுரிமையில்தான் இருக்கிறது என அதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர்கள் அவர்கள். நிலம் தொடர்பான வரலாற்றுச் சிக்கல்களுக்கான தீர்வை நோக்கி நகரும்போது அடுத்தடுத்து வெவ்வேறு இடர்பாடுகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. ஒவ்வொரு காலத்திலும் அனுபவத்திலிருந்து பெற்ற பாடத்தால் அவர்களுடைய அணுகுமுறை மெருகேறிக்கொண்டே வந்தது. யதார்த்தத்துக்கு ஏற்ப அந்தத் தீர்வுகள் வெவ்வேறு வடிவம் எடுத்தன. அடுத்தது, அடுத்தது என அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வும் மிகப் பெரும் சமூக மாற்றத்துக்கு வித்திட்டது.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இருவரும் நிலவுரிமைக்காகப் போராடத் தொடங்கிய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமும் போராடியது என்றாலும், போராட்ட வடிவில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. கம்யூனிஸ்ட்டுகள் நிலவுடைமையாளர்களிடம் எதிரே நின்று உரிமை பேச, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனோ அவர்களின் தார்மீகத்தைத் தட்டியெழுப்பி அவர்களிடமிருந்து நில தானம் பெற்றார்கள்.

ஒரு கிராமத்தில் நிலச்சுவான்தார்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் மக்களோடு போய் உரையாடுவதுதான் அவர்கள் அணுகுமுறையின் முதல் படி. நிலச்சுவான்தாரை மட்டுமே நம்பி வாழும் சூழலில் மக்களால் எப்படி அவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க முடியும்? கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அதைச் சாத்தியப்படுத்தினார்கள். மக்களோடு தங்கியிருந்து, அவர்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு, அவர்களுள் ஒருவராகத் தங்களை உணர வைத்து நம்பிக்கையைப் பெறுவார்கள். பிறகு, மக்களையும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். ஒருகட்டத்தில், இரு தரப்புக்கும் இடையிலான உரையாடல் சாத்தியமானது. இடையில், மக்களோடு சேர்ந்து அடியும் உதையும் பெற நேர்ந்தது; ஆனால், போராட்டம் தனக்கே உரிய இடத்தையும் வெற்றியையும் பெற்றது.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர் போராடியது நிலக்கிழார்களுக்கு எதிராக, அதிகாரம் படைத்தவர்களுக்கு எதிராக, தாழ்த்தப்பட்டவர்களை வெட்டிச்சாய்த்தவர்களுக்கு எதிராக, குடிசைகளைக் கொளுத்தியவர்களுக்கு எதிராக. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் அக்கறையும் நெஞ்சுரமும் துணிச்சலும் மிக அபூர்வமானது. அவர்கள் மக்களுடைய மன வலிமையை ஒருங்கிணைத்தது ஒருபுறம் என்றால், யாரிடமிருந்து நிலத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுடைய மனசாட்சியை உலுக்குவதும் இவர்களுடைய போராட்ட முறையின் தனித்துவமாக இருந்தது. இதற்கான உந்துதல் கிடைத்தது காந்தியிடமிருந்துதான்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனோடு தொடர்புடைய முக்கியமான நபர்களையெல்லாம் ஒரு சங்கிலியில் கோத்தோம் என்றால் அவர்களெல்லாம் காந்தியம் எனும் கண்ணியால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். காந்தியவழிப் போராட்டம் என்பது வெறுமனே போராட்ட வடிவம் மட்டுமல்ல; போராடுபவர்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதும், அவர்கள் எந்தத் தரப்பின் மனசாட்சியை உலுக்குகிறார்கள் என்பதும்தான். காந்தியச் சிந்தனை பலரையும் ஒன்றிணைக்கும் அம்சமாகவும், வழிநடத்தும் பாதையாகவும் இருந்திருக்கிறது. அந்தச் சிந்தனையை ஏற்றுக்கொண்டு பின்பற்றுவதற்கான சுபாவமும் அவர்களுக்கெல்லாம் வாய்த்திருக்கிறது. பிந்தையது இல்லையென்றால் முந்தையது சாத்தியமில்லை, இல்லையா? உண்மையில், காந்தியை நெருக்கமாகப் புரிந்துகொள்வதற்கு காந்தியர்கள் நமக்குப் பேருதவி புரிகிறார்கள்.

லாரா கோப்பாவின் அபாரமான எழுத்தில், பி.ஆர்.மகாதேவனின் சரளமான மொழிபெயர்ப்பில் வெளியான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான ‘சுதந்திரத்தின் நிறம்’ இப்போது செம்பதிப்பு கண்டிருக்கிறது. இருவருடைய இளமைக்காலம் தொடங்கி அவர்களுடைய பிள்ளைகளின் மனப்பதிவுகள் வரை என இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியைப் பற்றிய ஒரு முழுமையான ஆவணம்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

சுதந்திரத்தின் நிறம்

லாரா கோப்பா

தமிழில்: பி.ஆர்.மகாதேவன் தன்னறம் நூல்வெளி வேங்கிக்கால், திருவண்ணாமலை-606601.

தொடர்புக்கு: 98438 70059

விலை: ரூ.500

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x