Published : 14 May 2014 12:34 pm

Updated : 14 May 2014 13:21 pm

 

Published : 14 May 2014 12:34 PM
Last Updated : 14 May 2014 01:21 PM

துயரம் நிரம்பிய வாழ்வின் பதிவு

பெற்றெடுத்த பிள்ளைகளில் இருவரைக் களத்தில் பலி கொடுத்துவிட்டு, பேரப் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அடிக்கடி இடம்பெயர்ந்து, கடைசியில் ‘அயல்மண்ணில்’ மனம் கூசி நிற்கும் அறுபதைக் கடந்த ஓர் அம்மம்மாவின் கதையைச் சொல்கிறார் தமிழ்க் கவி.

குழந்தைகளை மட்டும் தூக்கிக் கொண்டு முதியோர்களையும் ஆடு மாடு களையும் அப்படியே கைவிட்டுச் செல்ல நேரும் துயரம். உணவுப் பொருட்களையும் எரிபொருளையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல். கைகால்களை நீட்டிப் படுப்பதும்கூட நிறைவேறாத கனவாகிப் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை. குழிகளுக்கு உள்ளே மழை நீர் நிறைந்து நிற்கும் அவலம். எறிகணைச் சத்தம் கேட்டு அலறியபடி அருகில் ஓடிக்கொண்டிருப்பவர்களை அழைத்துத் தங்களது பங்கருக்குள் இருத்திக்கொள்ளும் நேயம்...


இவற்றுக்கிடையில் காதலும் மலர்கிறது. அடுத்த நொடியிலோ அடுத்த நாளிலோ மரணம் காத்திருக்கும் நேரத்தில் இணைகளை மனதார வாழ்த்தி நகரும் கருணை மனங்களும் உண்டு. உயிர் போகும் வேளையிலும் உடைமைப் பற்றையும் உயர் சாதி மனோபாவத்தையும் இழக்க மனமில்லாதோரும் உண்டு.

ஆண், பெண் என்று அடையாளம் காண முடியா வண்ணம் உடலைக் கரிக் கட்டைகளாக்கிவிடும்புதுவித எறிகணை களின் தாக்குதல் தொடங்குகிறது. பாதுகாப்புப் பகுதிகளென்றோ மருத்துவ மனைகளென்றோ அது பார்ப்பதில்லை.

உயிர் வாழும் ஆசையை முந்திக் கொண்டுவிடுகிறது பசி. தலைக்கு மேலாக எறிகணைகள் பறந்து கொண்டிருக்கையிலும் நிவாரணப் பொருட்களுக்கான வரிசை நீண்டு கொண்டே இருக்கிறது. இடம்பெயரும் வேளையில் தங்களது பிள்ளைகளைக் கட்டாயச் சேவையிலிருந்து பாதுகாத்தாக வேண்டும் என்ற பரிதவிப்பும் கூடிக் கொள்கிறது.

நிவாரணப் பொருட்களைப் பங்கிட்டு வழங்காமல் இயக்கத்தவர்கள் தங்களுக் குள்ளேயே தாராளமாகப் புழங்கிக் கொள் கிறார்கள். அனுபவப்பட்ட படைவீரர்கள் பொறுப்பாளர்களின் வீட்டில் பணிபுரிய, அனுபவம் இல்லாத சிறுபிள்ளைகளைக் களத்திற்கு அனுப்பிவைக்கிறார்கள். பொறுப்பாளர்களில் சிலர் மனைவி மக்களுடன் பாதுகாப்பாகவே தங்கியிருக் கிறார்கள். உயிராசையால், மக்கள் யாரைப் பாதுகாவலர்களாகக் கருதினார் களோ அவர்களையே பகைவராய்க் கருதும் நிலை. கூடாரத்தின் அருகே இயக்கத்தவர்கள் ஒதுங்கினால், அவர் களை நோக்கிவரும் விமானங்களால் தாங்களும் தாக்கப்படலாம் என்று அஞ்சி விலகும் நிலை.

எறிகுண்டுகளின் இடைவிடாத சத்தத்திற்கு இடையில், சோலாரின் துணை கொண்டு தொலைக்காட்சியும் பார்க்கிறார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதக் காட்சிகள் வந்து போகின்றன. அந்நிலையில் கேலி பேசி சிரித்திடவும் ஒரு வாய்ப்பு.

எறிகணை ஆபத்துக்கிடையிலும் பிறந்த நாளுக்குப் பலகாரம் செய்து பகிர்ந்துகொள்கிறார்கள். பூச் செடிக்கு இடம் விட்டுப் பதுங்குகுழி வெட்டுகிறார்கள். இடம்பெயர்ந்து உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது என்று மதம் மாறுகிறார்கள்.

ராணுவத்தின் கைகளில் சிக்கினால் ஒருவேளை உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கலாம் என்றெண்ணித் தப்பிக்கையில் சுடப்பட்டுச் சாகிறார்கள். இனி யுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்றானதும் சீருடையைக் களைந்து விட்டு பங்கருக்குள் கிடக்கும் யாருடைய உடைகளையோ எடுத்து அணிந்து கொண்டு சரணடைய வரிசையில் நிற் கிறார்கள். மொத்தத்தில் வாழ விரும்பிய, வாழ்வோம் என்று நம்பிய மக்களின் கதையை ஊழிக்காலமாக்கியிருக்கிறார் தமிழ்க் கவி.

ஊழிக்காலம் (நாவல்), தமிழ்க் கவி,
தமிழினி, ஸ்பென்ஸர் பிளாஸா, 769 அண்ணா சாலை, சென்னை-2. கைபேசி: 9344290920,
விலை: ரூ.270

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைபுத்தக விமர்சனம்ஊழிக் காலம்நூல் அறிமுகம்தமிழ்க் கவி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author