Published : 15 Mar 2020 09:33 AM
Last Updated : 15 Mar 2020 09:33 AM

வெண்ணிற நினைவுகள்: பசித்த மனிதர்கள்

கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் மதராஸ் என்றாலே சென்ட்ரல் ஸ்டேஷனையும் எல்ஐசி பில்டிங்கையும் மெரினா பீச்சையும் காட்டுவார்கள். சில திரைப்படங்களில் மயிலாப்பூர் கோயிலும் அண்ணாசாலையும்கூடக் காட்டப்படுவதுண்டு. ஆனால், அதே சென்ட்ரல் ஸ்டேஷனை ஒட்டிய சேரிப் பகுதியில் வாழும் மனிதர்களை சினிமா ஒருபோதும் பிரதானப்படுத்தியதில்லை. சென்னையில் 1,202 சேரிகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. சினிமா இங்கே வசிப்பவர்களை அடியாட்களாக, வேலைக்காரர்களாக, ரிக் ஷா, ஆட்டோ ஓட்டுபவர்களாக, பிச்சைக்காரர்களாகத்தான் சித்தரித்திருக்கிறது. தற்போதுதான் சினிமாவில் சென்னையின் உண்மையான முகம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றத்துக்கு முன்னோடியாக அமைந்த படங்களில் ஒன்று ‘பசி’.

1979-ம் ஆண்டு வெளிவந்த ‘பசி’ திரைப்படத்தை இயக்கியவர் துரை. விஜயன், ஷோபா, டெல்லி கணேஷ், சத்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். கதாநாயகி என்றாலே வெள்ளைத் தோல் கொண்ட அழகி என நினைத்திருந்த தமிழ் சினிமாவின் பொதுப்புத்தியை மாற்றி, குப்பம்மா போன்ற ஏழைப் பெண்களும் கதாநாயகிகளே எனப் படம் அடையாளப்படுத்துகிறது. படம் முழுவதும் சென்னைத் தமிழ் அழகாக ஒலிக்கிறது. சேரி மக்களின் வாழ்க்கையை நிஜமாகக் காட்சிப்படுத்தியிருப்பதே இதன் தனிச்சிறப்பு.

கூவத்தின் கரையிலுள்ள ஒரு சேரியில் வசிக்கிறான் ரிக் ஷா ஓட்டும் முனியன். அவனுக்கு ஏழு பிள்ளைகள். மூத்த மகள் குப்பம்மா. வறுமையில் சிறிய குடிசை வீட்டில் வாழ்கிறார்கள். ஒரு நாள் ரிக் ஷா ஓட்டிக் கிடைத்த சம்பாத்தியம் என மூன்று ரூபாயைக் கொண்டுவந்து மனைவியிடம் தருகிறான் முனியன். இதை வைத்துக்கொண்டு எப்படிக் குடும்பத்தை நடத்துவது என முனியனின் மனைவி கவலைப்படுகிறாள். முனியன் குடிகாரன். தனியே போய் இட்லிக் கடையில் சாப்பிடுகிறவன். தன்னைக் கவனித்துக்கொள்வதே முக்கியம் என நினைப்பவன். குடும்பம் அவனுக்கு ஒரு பாரமே. வீட்டின் தேவைகளுக்காக பேப்பர் பொறுக்க சத்யாவுடன் செல்கிறாள் குப்பம்மா. சினிமா போஸ்டர்களையும் தூக்கி எறியப்பட்ட காகிதங்களையும் பொறுக்கி விற்று, அதில் கிடைக்கும் பணத்தைத் தாயிடம் தருகிறாள்.

ஒருநாள் சத்யாவும் குப்பம்மாவும் டீக்கடை ஒன்றில் லாரி ஓட்டுநரான ரங்கனைச் சந்திக்கிறார்கள். ரங்கனுக்கு குப்பம்மாவை முதல் பார்வையிலேயே பிடித்துப்போகிறது. அவளுக்கு உதவ ஆரம்பிக்கிறான். அதிலும் அப்பனுக்காக அவள் பிரியாணி வாங்கக் காசில்லாமல் தவிப்பதைக் கண்டு பிரியாணி வாங்கித் தருகிறான் ரங்கன். அந்தக் காட்சியில் குப்பம்மா ஹோட்டலில் வெட்கத்துடனும் ஆசையுடனும் பிரியாணி சாப்பிடும் அழகு மறக்க முடியாதது. ரங்கனின் அன்பைப் புரிந்துகொண்ட குப்பம்மா அவனிடம் தன்னையே இழக்கிறாள். ரங்கன் திருமணமானவன் என அவளுக்குத் தெரியாது. லாரியில் வந்து குப்பம்மா இறங்குவதைக் கண்ட அம்மா, “யார் அவன்?” எனக் கேட்க, குப்பம்மா எதையும் மறக்காமல் நடந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறாள். இதைக் கேட்ட குப்பம்மாளின் தாய், மகளின் மானம் போய்விட்டதாகக் கருதி உயிரை விடுகிறாள். இதன் பிறகு, குப்பம்மாளின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை மிகவும் யதார்த்தமாகச் சித்தரித்துள்ளார் துரை.

குப்பம்மா ஏன் ரங்கனுடன் உள்ள உறவை வீட்டில் ஒளிக்காமல் வெளிப்படுத்துகிறாள்? அதேசமயம், அவனைக் காட்டிக்கொடுக்க வேண்டிய சூழல் வரும்போது, தன்னால் ரங்கனின் குடும்பம் சீரழிய வேண்டாம் என அவனைக் காப்பாற்றிவிடுகிறாள். அவளிடம் வெளிப்படுவது தன்னை ஏன் ரங்கன் நம்ப வைத்து ஏமாற்றினான் என்ற ஆதங்கமே. கடைசி வரை அவள் ரங்கனை வெறுக்கவில்லை.

1979 டிசம்பரில் பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘அழியாத கோலங்கள்’ வெளியானது. அதில் இந்துமதி டீச்சராக நடித்துத் தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஷோபா, ‘பசி’யில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் அவர் தெருநாயை விரட்டும் தந்தையிடம் பேசும் விதமும், தோழியிடம் வீட்டுக்கு உதவுவதற்காகக் காகிதம் பொறுக்கத் தானும் வருவதாகச் சொல்வதும், அதற்கும் சங்கம் இருக்கிறது எனத் தோழி சொன்னதும் ஷோபா காட்டும் முகச்சுழிப்பும், டீக்கடையில் தயக்கத்துடன் தோழி வாங்கித் தந்த பன்னைத் தின்பதும் என ஒவ்வொரு காட்சியிலும் ஷோபா வெளிப்படுத்தும் நடிப்பு நிகரற்றது.

ரிக் ஷா ஓட்டும் முனியன் கதாபாத்திரத்தில் நடித் துள்ள டெல்லி கணேஷ் தனது உடல்மொழியிலும் பேச்சிலும் அச்சு அசலாக ரிக் ஷா ஓட்டுபவராகவே வாழ்ந்திருக்கிறார். டெல்லி கணேஷின் திரை வாழ்க்கையில் இப்படம் மிக முக்கியமானது. மகள் எவரிடமோ மானத்தை இழந்துவிட்டாள் என மனைவி கோவித்துக்கொள்ளும்போது, அவர் ஆத்திரத்துடன் பதில் தரும் காட்சி முக்கியமானது. ஜெயகாந்தன் சிறுகதையில் வரும் கதாபாத்திரம் ஒன்று உயிர்பெற்று வந்துவிட்டதுபோலவே இருந்தது டெல்லி கணேஷின் நடிப்பு. இதுபோலவே குப்பம்மாவின் தோழியாக வரும் சத்யா டீக்கடையில் போய் டீ கேட்கும் விதமும், விஜயனை அண்ணாத்தே என உரிமையாக அழைத்து, அவர் செலவிலே பன்னும் டீயும் வாங்கிச் சாப்பிடும் அழகும், படத்தின் பிற்பகுதியில் ‘‘நான் உன்னை அண்ணாத்தேனுதான் கூப்பிடுறேன், ஆனா நீ என்ன நினைச்சுப் பழகுறியோ’’ என விஜயனைக் குத்திக்காட்டும் விதமும் அபாரம். நாராயணனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

1970-களில் இருந்த சென்னை நகரைப் படம் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. ஆளரவமற்ற அமைதியான தெருக்கள், வெட்டவெளியில் காணப்படும் வள்ளுவர் கோட்டம், ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தின் போஸ்டரைக் கிழிக்க மறுத்த குப்பம்மாள், எம்ஜிஆர் பற்றிப் பேசுவது, கள்ளச்சாராயம் குடித்துவரும் முனியனைக் காவலர்கள் பிடித்துச் செல்வது, குப்பத்தில் இட்லி சுட்டு விற்கும் பெண்ணின் அன்பு எனப் படம் எழுபதுகளின் சாட்சியம்போலவே காணப்படுகிறது.

‘பசி’, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது, அத்துடன் ஷோபாவுக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ‘பசி’ போல பெண்களை முதன்மைப்படுத்திய திரைப்படங்களை உருவாக்கிய துரை மிகுந்த பாராட்டுக்குரியவர். அவராலே இதுபோன்ற யதார்த்த முயற்சிகளைத் தொடர முடியவில்லை என்பதே திரையுலகின் நிஜம்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x