Last Updated : 15 Mar, 2020 09:29 AM

 

Published : 15 Mar 2020 09:29 AM
Last Updated : 15 Mar 2020 09:29 AM

இசை நிரம்பிய காதுகள் என்னுடையவை!- ரவிசுப்பிரமணியன் பேட்டி

ஆவணப்பட இயக்குநர், முறையாக இசை கற்றுக்கொண்டவர், நாட்டியம் பயின்றவர், கொஞ்ச காலம் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தவர் எனப் பன்முகம் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஆனாலும், அவர் ஒரு கவிஞராகவே தமிழ்ச் சூழலில் அறியப்படுகிறார். நவீனக் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடுவதும் அவருடைய அடையாளங்களுள் ஒன்று. சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுக் குழுவில் இருந்துள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து...

இளம் வயதிலேயே மூத்த படைப்பாளிகளுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு உங்களுக்கு வாய்த்தது மிக அபூர்வமானது. இதுகுறித்து?

அபூர்வம்தான். எனக்கு அதெல்லாம் பெரிய யத்தனம் இல்லாமல் யதேச்சையாகத்தான் நிகழ்ந்தது. தேனுகா, கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கிருஷாங்கினி, தஞ்சை ப்ரகாஷ், சி.எம்.முத்து, நா.விஸ்வநாதன், மீரா, வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, மா.அரங்கநாதன், பிரபஞ்சன், கலாப்ரியா இப்படி நீளும் பெரிய பட்டியல் அது. இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பழகுவதில் என்ன இருக்கிறது? அவர்களிடமிருந்து என்ன பெற்றுக் கொண்டோம் என்பதில்தான் அர்த்தம் இருக்கிறது.

கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் தொடங்கி சுஜாதா வரையிலான ஆளுமைகளிடம் நீங்கள் பெற்றுக்கொண்ட விஷயங்களைச் சொல்லுங்களேன்...

அது சொற்ப வரிகளில் சொல்லி முடிகிற விஷயமல்ல. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று நபர்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். கரிச்சான் குஞ்சு – எத்தனை கற்றாலும் திறமை இருந்தாலும் குழந்தைமையை, மனிதாபிமானத்தை விடாதிருப்பது. எம்.வி.வெங்கட்ராம் – அர்ப்பணிப்புடன் விதவிதமாக எழுதிவிட்டு, எந்த எதிர்பார்ப்புமின்றி வித்வத்தில் தன்னையே கரைப்பது. சுஜாதா – ஷார்ப்பாக இருக்க வேண்டும், புதிதுபுதிதாகத் தெரிந்துகொண்டே இருக்க வேண்டும், நகைச்சுவையை விட்டுவிடக் கூடாது, ஜுஜ்ஜிலிபி.

உங்கள் இளம் பிராயத்தில் படைப்பாளிகளைப் பார்ப்பதென்பது இப்போதுபோல அவ்வளவு எளிதானது அல்ல. இந்த வேறுபாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இப்போது சந்திப்பு எளிமையாகிவிட்டது. என்றாலும், பெரும்பாலானவர்கள் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிரத்தான் அந்தச் சந்திப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நம்மை உள்நோக்கிப் பார்ப்பதற்காகப் பயணித்த காலமெல்லாம் போய், தங்களைப் புறத்தில் பார்க்கத்தான் செல்கிறார்கள்.

பல துறைகள் சார்ந்த பரிச்சயமும் வாசிப்பும் கலை இலக்கிய ஆளுமைகளின் பழக்கமும் இருந்தும் வெகு எளிமையான மொழியும் உள்ளடக்கமும் உங்கள் கவிதைகளில் தென்படக் காரணம் என்ன?

யாருக்காக எழுதுகிறேன் என்ற தெளிவு என்னிடம் இருக்கிறது. தமிழ் படிக்காமல்போன தலைமுறைக் காகத்தான் எழுதுகிறேன். எங்கேயாவது கலை உணர்வின் ஒரு சின்ன மொக்கை அவனிடம் மலர்த்திவிட மாட்டோமா, மொழியின் ஒரு சொட்டுத் தேனையாவது அவனது நாக்கில் ருசிக்கத் தந்துவிட மாட்டோமா என்றுதான் எழுதுகிறேன். உத்திக்காகவோ வித்தைகாட்டவோ எழுதவில்லை. ஒருவனை மொழிக்குள் கொண்டுவரத்தான் இவ்வளவு பிரயத்தனம். தமிழே தெரியாதவனுக்கு எடுத்தவுடன் நகுலனும் மெளினியும் புதுமைப்பித்தனும் பிரம்மராஜனும் புரிந்துவிடுமா?

தாளம், லயம், எதுகை-மோனைகளையெல்லாம் கடந்து மரபார்ந்த அணுமுறைக்கு எதிராகச் செயல்படுவதைத்தான் நவீனக் கவிதைகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கையில், இவற்றைப் பாடலாக்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?

புதுக்கவிதைகளை முதலில் பாடியது திருலோக சீதாராம். நாரதகான சபாவின் நாட்டிய அரங்கத்துக்காக 1997, 2002-ல் சுஜாதா விஜயராகவன், புதுக்கவிதைகளை நாட்டியமாட ஏற்றாற்போல ராக அடிப்படையில் பல இசைக் கலைஞர்களைக் கொண்டு மெட்டமைத்தார். நான் மெட்டமைக்கத் தொடங்கியது 2007-லிருந்துதான். பல அழகான பழங்கவிதைகளை இசை நம் ஞாபகத்தில் தேக்கி வைக்க உதவியிருக்கிறது. இசை வடிவமானது நல்ல கவிதைகளை ஒரு தேவதைபோல ஏந்திவந்து நம்மிடம் சேர்த்துவிடும். நாம் பாதுகாக்க நினைக்கும் கவிதைகளை இசைக்குள் கொண்டுவந்துவிட்டால் காலத்துக்கும் அவை கானமாகக் காற்றில் உலவிக் கொண்டிருக்கும். அதனால்தான், நல்ல கவிதைகளை மெட்டமைக்கிறேன். இசைக்குச் சில கவிதைகள் இயைந்துவராதபோதும் அதற்குள் எங்கோ இயங்கும் அர்த்த இசையை வெளிக்கொண்டுவர முயல்கிறேன்.

எழுத்தாளர்களுக்கு இங்கே ஆவணங்களாகப் புகைப் படங்களே மிகக் குறைவு. தமிழில் எழுத்தாளர்களைப் பற்றிய அதிகபட்சமான ஆவணப்படங்களை எடுத்தவர் நீங்கள். ஒரு ஆவணப்பட இயக்குநராக இங்கே எத்தகைய முன்னெடுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு மொழியில் இயங்கி அதன் பண்பாடு, கலாச்சாரத்துடன் எவ்வளவு முக்கியத்தோடு எழுத்தாளர் கள் செயல்படுகிறார்கள் என்பதைச் சமூகம் உணர வேண்டும். பெரிய வருமானம் ஏதும் இல்லாமல், மனித வாழ்வை இலக்கியமாக ஆவணப்படுத்தும் எழுத்தாளரை ஆவணப்படுத்துவதில்லை என்பது மிகப் பெரிய சமூக அவலம். எழுத்தாளருக்கான சமூக மதிப்பை உருவாக்க வேண்டும். பிறகு, இதெல்லாம் தானாக நடக்கும்.

உங்களது சமீபத்திய ‘விதானத்துச் சித்திரங்கள்’ தொகுப்பில் இசை அனுபவம் சார்ந்த படிமங்கள் உள்ளன. அந்தப் பின்னணியைச் சொல்லுங்கள்...

கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் சந்நிதியில் வாழ்ந்தவன் நான். கோயிலிலிருந்து கேட்கும் தேவாரத் திருவாசங்களோடுதான் காலை கண்விழிப்பே. பிறகு, சின்ன வயதில் என் இன்னொரு உறுப்புபோல ரேடியோ பெட்டி கூடவே இருக்கும். சிலோன் ரேடியோ வழியாகக் கேட்டுத் திளைத்த சினிமா பாடல்கள் ஏராளம். நிரம்பி நிரம்பி ஊறிய காதுகள் இன்றும் ஏங்கிக்கொண்டேதான் இருக்கின்றன. அப்போது ரசித்த பாடல்கள் இப்போதும் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. இசை தன்னியல்பாக எனக்குள் வந்துவிட்டது. எழுத்திலும் அது இயல்பாகப் படிந்துவிட்டது.

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், விமர்சகர், பாடகர் இப்படிப் பல அடையாளங்களில் எது உங்களுக்கு நெருக்கமாக உள்ளது?

கவிஞர்தான். அதிலிருந்துதான் மற்றதெல்லாம். அது ஏன் நெருக்கமாக இருக்கிறது என்றால், கவிதை எழுதும்போது கிடைக்கும் ஒருவிதப் பரவச நிலை. ஏனென்றால், நீங்கள் பெற்ற அல்லது உள்வாங்கிய உணர்ச்சியோ சம்பவமோ மறுபடி இன்னொரு விதமாக உருமாறுகிறது. மனதைப் பாதித்த ஒன்றுதான் படைப்பாகும், இல்லையா? அந்தத் தருணமும் அதைக் கவிதையாக்கும் நேரமும் அவ்வளவு முக்கியமானது! அதன் பிறகு, வாசகர்கள் அடையும் ஆனந்ததுக்காகவும், அவர்களுடைய உற்சாக மொழிக்காகவும்தான் எழுதுகிறோம்.

சாகித்ய அகாடமி உட்பட பல்வேறு விருதுக் குழுவில் இருந்துள்ளீர்கள். நீங்கள் பரிந்துரைக்கும் படைப்புகளை எவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

கடன் வாங்கிய சிந்தனைகளாக இல்லாமல் ஒரிஜினலான, நேர்மையான இலக்கியப் படைப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். படைப்பாளி எழுதிய பிற இலக்கியப் படைப்புகள், தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இலக்கியத்துக்காகச் செய்யும் காரியங்கள், எடுத்துக்கொண்ட விஷயத்துக்காகத் தன்னை விசுவாசமாக வரித்துக்கொண்ட விதம்... இவற்றையெல்லாம் நான் பார்ப்பேன். பிறகு, இப்போது என் இடப்பக்க நெஞ்சில் என் வலது உள்ளங்கையை வைத்திருக்கிறேன். அந்தக் கையைத் தட்டியபடி சொல்கிறேன்: ‘இங்க என்ன சொல்லுதோ அதத்தான் கேட்பேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x