Published : 14 Mar 2020 09:11 AM
Last Updated : 14 Mar 2020 09:11 AM

முடிவெடுக்கும் திறனை அலசும் ‘சுயாதீனம்’ நாடகம்

‘செல்லம் கலாலயம்’ குழுவினரின் ‘சுயாதீனம்’ நாடகம் சென்னை அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கில் இன்று மாலை நடக்கிறது.

ந.முத்துசாமி வழிகாட்டுதலுடன் தனது எழுத்தாற்றலை மேம்படுத்திக் கொண்டவர் செல்லா செல்லம். இவர், ‘செல்லம் கலாலயம்’ என்ற நாடகக் குழுவை நடத்தி, நவீன நாடகங்களை அரங்கேற்றிவருகிறார். சிலம்பம், குத்துவரிசை, ஆட்டக் கலை, யோகா, நாடகம், தெருக்கூத்து போன்ற கலைவடிவங்களும் இங்கு கற்றுத் தரப்படுகின்றன.

‘‘சக மனிதனின் மனநிலையை சொல்லித்தருவதுதான் கலை. மனநிலையைப் படிக்க, கவனிக்க கலைதான் தேவையாக இருக்கிறது. மனிதனை கலை பக்குவப்படுத்துகிறது, சக மனிதன் பற்றிய புரிதலைக் கொடுக்கிறது’’ என்கிறார் செல்லா செல்லம்.

என்னவாக ஆகப் போகிறேன், என்ன படிக்கணும் என்பதற்கு பலரிடம் அறிவுரை கேட்கலாம். ஆனால், அதில் எதை தேர்வு செய்வது என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். அதற்கான விளைவுகளை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் அக மனத்திடம் உரையாடித்தான் அதை அறிந்துகொள்ள வேண்டும். அந்த உரையாடல்தான் ‘சுயாதீனம்’ நாடகம் ஆகியிருக்கிறது.

உறவினர்களின் நிர்ப்பந்தத்தால் பொறியாளன் ஆக்கப்பட்ட ஒருவன், தான் ஓர் எழுத்தாளனாக வரவேண்டும் என்னும் கனவு பற்றி தன் மனத்துடன் நடத்தும் உரையாடலாக நாடகம் எழுதப்பட்டுள்ளது. முடிவு எடுப்பதில் எல்லோருக்கும் ஏற்படும் உளவியல் ரீதியான சிக்கலை, நான்கு பாத்திரங்களின் உரையாடல் வழியாக அலசுகிறது நாடகம். செல்லா செல்லம் எழுதி இயக்கி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் அலியான்ஸ் பிரான்செஸ் அரங்கத்தில் இந்த நாடகம் இன்று (14-ம் தேதி) சனிக்கிழமை மாலை 5 மற்றும் 7 மணிக்கு நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x