Published : 14 Mar 2020 08:50 am

Updated : 14 Mar 2020 08:50 am

 

Published : 14 Mar 2020 08:50 AM
Last Updated : 14 Mar 2020 08:50 AM

360: கவிஞர் பிரம்மராஜனின் புதிய மொழிபெயர்ப்பு நூல்

new-translation-bibliography

தமிழ் இலக்கியச் சூழலுக்கு மிகக் காத்திரமான பங்களிப்பு செய்துகொண்டிருக்கும் கவிஞர் பிரம்மராஜனின் புதிய மொழிபெயர்ப்பு நூல் வெளியாகியிருக்கிறது.


20-ம் நூற்றாண்டின் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் என்று காப்ரியல் கார்சியா மார்க்கேஸால் போற்றப்பட்ட பாப்லோ நெருதாவின் ‘கேள்விகளின் புத்தகம்’ என்ற கவிதைத் தொகுப்பையும், அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். கவிதைகளுக்கென பிரத்யேகமாக வந்துகொண்டிருக்கும் ‘சொற்கள்’ காலாண்டிதழ், இந்தப் புத்தகம் வழியாக பதிப்பகத்தையும் பெற்றெடுத்திருக்கிறது.

தொடர்புக்கு: 95666 51567.

அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு... எஸ்.வி.ஆர். வழி தமிழுக்கு வரும் யானிஸ் வருஃபக்கீஸ்

அர்ப்பணிப்பு, அசுர உழைப்பில் எஸ்.வி.ராஜதுரையை அடித்துக்கொள்ளவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வயது எண்பது, எப்போதும் நீடிக்கும் சுவாசக் கோளாறு, கண் பார்வைக் குறைபாடு இவற்றோடு சமீப காலத்தில் வேறு சில சங்கடங்களும் சேர்ந்துகொண்டு நிறையவே அவரைப் படுத்துகின்றன. ஆனாலும், எஸ்.வி.ஆர். சளைக்காமல் வாசிக்கிறார்; வாசிக்கும் அரிதான நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் அபாரமான பணியையும் அயராது தொடர்கிறார்.

பொருளியல் அறிஞரும் கிரேக்க முன்னாள் நிதியமைச்சருமான யானிஸ் வருஃபக்கீஸின் உலகப் புகழ் பெற்ற நூலான ‘டாக்கிங் டூ மை டாட்டர் அபௌட் எகானமி’யை சமீபத்தில் மொழிபெயர்த்து முடித்திருக்கிறார். “உலகப் பொருளாதார வரலாற்றை இவ்வளவு எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும், அதேசமயம் ஆழமாகவும் யாராலும் சொல்லியிருக்க முடியாது” என்று சொல்கிறார். ‘என் மகளிடம் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுகிறேன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள புத்தகத்தை க்ரியா பதிப்பகம் வெளியிடுகிறது.

லட்சம் கைகளில் அம்பேத்கர்

‘லட்சியப் பெரியார் லட்சம் கைகளில்’ என்ற இலக்குடன் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை ரூ.10 விலையில் அச்சிட்டு விற்பனை செய்துவந்தது ‘நன்செய்’ பிரசுரம். அந்த வரிசையில், அம்பேத்கரின் ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ புத்தகத்தை ரூ.20 விலைக்கு இப்போது கொண்டுவந்திருக்கிறார்கள். நூல் தேவைக்கு: 97893 81010.

குணா கவியழகனுக்கு கி.பி.அரவிந்தன் இலக்கியப் பரிசு

தமிழின் முக்கியமான சிற்றிதழ்களுள் ஒன்றான ‘காக்கைச் சிறகினிலே’, கி.பி.அரவிந்தன் பெயரில் இலக்கியப் பரிசு வழங்கிவருகிறது. குணா கவியழகன் எழுதிய ‘அப்பால் ஒரு நிலம்’ நாவலானது கி.பி.அரவிந்தனின் ஐந்தாம் ஆண்டு நினைவு இலக்கியப் பரிசுக்குத் தேர்வாகியிருக்கிறது. சயந்தனின் ‘ஆதிரை’, தமிழ்க் கவியின் ‘ஊழிக்காலம்’, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஷோபா சக்தியின் ‘பாக்ஸ்: கதைப் புத்தகம்’, தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’, ஸர்மிளா ஸெய்யத்தின் ‘உம்மத்’ ஆகிய நாவல்களும் சிறப்புத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

வடபழனியில் புத்தகக்காட்சி

‘புலம்’ பதிப்பகமும், ‘இன்ஃபோ மீடியா’வும் இணைந்து சென்னை வடபழனியில் முதன்முறையாக கோடைகாலப் புத்தகக்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அம்பிகா எம்பையர் எதிரிலுள்ள கோல்டன் கணேஷா திருமண மண்டபத்தில் மார்ச் 15-30 வரை புத்தகக்காட்சி நடைபெறுகிறது. 10-50% வரை சிறப்புத் தள்ளுபடி.கவிஞர்பிரம்மராஜன்புதிய மொழிபெயர்ப்பு நூல்தமிழ் இலக்கியம்மகத்தான கவிஞர்லட்சம் கைகள்அயராத உழைப்புஅர்ப்பணிப்புபுத்தகக்காட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x