Published : 14 Mar 2020 08:09 AM
Last Updated : 14 Mar 2020 08:09 AM

நூல் வெளி: காவிரிப் படுகையின் நில அரசியல்

வீரா

காவிரிப் படுகையில் நில உடைமையாளர்களின் ஆதிக்கம் எவ்வாறு தகர்ந்தது என்பதைப் பற்றிய பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சனின் ஆழமான ஆய்வுப் புத்தகம்தான் ‘தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான உணவுத் தேவையில் காவிரிப் படுகையின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.

காவிரிப் படுகையின் உணவு உற்பத்தியில் காலங்காலமாக நமக்காக உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் நிலையையும், நிலமற்ற விவசாயிகளின் குத்தகை முறைகளையும், இவர்கள் மீதான நிலப்பிரபுக்களின் உழைப்புச் சுரண்டலையும் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது இந்நூல்.

நியாயமற்ற கூலி, முறையற்ற நில வாடகை, சுரண்டப்பட்ட உழைப்பு இவற்றின் விளைவுகளும், அரசியல் சமூகத் தளங்களில் நடந்த தவிர்க்க இயலா வரலாற்று மாற்றங்களும் காவிரிப் படுகையில் எவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தியது என்பதையும் இந்நுால் முழுமையாக விளக்குகிறது.

காலனியாதிக்கக் காலத்திலிருந்தே இந்தச் சுரண்டல் முறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் தொடங்கின. அந்தப் போராட்டங்களின் போக்கு இடதுசாரிகளின் அரசியல் பங்களிப்பின் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுத் தீவிரமடைந்தது. பிறகு, தமிழகத்தை ஆளத் தொடங்கிய திராவிடக் கட்சிகள் இயற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்களின் வாயிலாகக் காவிரிப் படுகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

இவையெல்லாம் அடிப்படைப் பிரச்சினைகளான கூலி உயர்வு, நில வாடகையில் ஏற்பட்ட சில மாற்றங்கள், நிலமற்றவர்களுக்குக் கொஞ்சம் நிலம் என்பன போன்ற சீர்திருத்த நடவடிக்கையாக மட்டுமே சுருங்கிய வடிவில் பார்க்கப்பட்டது. நிலப்பிரபுத்துவம் என்ற பெரும் சமூக அவலத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கவில்லை என்றே இதுவரை பேசப்பட்டுவந்தது.

இந்நிலையில், நிலப்பிரபுத்துவத்தின் தன்மைகள் சிதைவுற்று, குத்தகைதாரர்களின் கைகளுக்கு நிலங்கள் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய யதார்த்தத்தை உள்வாங்கி, இரண்டுக்குமான இடைவெளியைத் தன் ஆய்வுப் பொருளாகக் கொண்டு விரிவான பார்வையை முன்வைத்துள்ளார் ஜெயரஞ்சன்.

போராட்டங்களும் நிலச்சீர்திருத்தச் சட்டங்களும் மட்டுமன்றி அதிகார மாற்றங்கள், பிராமணிய எதிர்ப்பு இயக்கத்தின் பங்களிப்பு, நகரங்கள் நோக்கிய பிராமணச் சமூகத்தின் இடப்பெயர்வு, லாஃப்டி போன்ற சர்வோதயா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், குத்தகைதாரர்களின் சாதிய மேலாண்மை போன்றவையெல்லாம் நிலப்பிரபுத்துவத்தை எப்படி வீழ்த்தியது என்பதையெல்லாம் நுட்பமாக இந்நூலில் அலசுகிறார்.

இவரது ஆய்வில் மிக அக்கறையாகக் கவனப்படுத்தியுள்ள ஒரு விஷயம் சாதியம். காவிரிப் படுகையின் உற்பத்தி உறவுகளில் நிலமற்ற குத்தகைதாரர்களின் பங்களிப்புக்கு இணையாகச் சற்றும் குறைவில்லாத பங்களிப்பு விவசாயத் தொழிலாளர்களுடையது. அவர்களில் பெரும்பான்மை யானவர்கள் தலித் மக்களே.

படுகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒப்பீட்டளவில் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கே அதிக நன்மைகளைத் தந்துள்ளதை ஜெயரஞ்சன் பதிவுசெய்கிறார். திராவிடக் கட்சிகளின் ஆதரவானது, தலித்துகளின் பக்கம் இன்னும் அதிகச் சாய்வுகொண்டிருந்தால் காவிரிப் படுகையில் தலித்துகளும் தங்களுக்கான நில உடைமையை இன்னும் கூடுதலாகப் பெற்றிருப்பார்கள் என்பதை மிக நேர்மையாகப் பதிவுசெய்கிறார்.

எவ்வளவு தீவிரமான போராட்டங்களும் சட்ட அமலாக்கங்களும் நன்மை செய்துவிட முடியாதபடி மிகச் சிக்கலான இடத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் நிலை உள்ளது என்பதை நம் சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பத்தியாக நிறைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கிறது.

பன்மைத்துவம் கொண்ட சிக்கலான நம் சமூகத்தையும், அதனுள் செயல்படும் அரசியலையும் மிகக் கூர்மையாக அலசும் இந்நூல், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான வரலாற்று ஆவணம் எனலாம். நாம் கடந்துவந்த பாதையை அறிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும்கூட.

- வீரா, தொடர்புக்கு: veerawritings@gmail.comவீராதமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை

ஜெ.ஜெயரஞ்சன்

மின்னம்பலம் வெளியீடு

தொடர்புக்கு: 94451 23164

விலை: ரூ.180

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x