மதுரையிலும் கலக்கும் ‘தி இந்து’ அரங்கு
மதுரை புத்தகத் திருவிழாவில் ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குக்கும் (எண்: எம்6) நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு ‘கடல்’, ‘மெல்லத் தமிழன் இனி’, ‘ நம் மக்கள் நம் சொத்து’, ‘வேலையைக் காதலி’ உள்ளிட்ட நூல்களையும் சிறப்பு மலர்கள் எல்லாவற்றையும் தள்ளுபடி விலையில் அள்ளிக்கொண்டு போகிறார்கள் நம் வாசகர்கள். ‘சயின்டிபிக் ஃபேக்ட்ஸ்’, ‘இந்து ஸ்பீக்ஸ் ஆன் மேனேஜ்மென்ட்’, ‘மகாத்மா காந்தி லாஸ்ட் 200 டேஸ்’, ‘ஹிமாலயாஸ் தி சேலஞ்ச்’ போன்ற ‘தி இந்து’ ஆங்கில வெளியீடுகளும் சக்கைப்போடு போடுகின்றன. இந்த அரங்கில் ‘தி இந்து’ ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களின் மாதச்சந்தா, ஆண்டுச்சந்தா போன்றவையும் முன்பதிவு செய்யப்படுகின்றன.
மதுரை புத்தக விழாவில் நிறைவும் - குறைவும்
அரங்கு அமைப்பும், காற்றோட்ட வசதியும் கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது. புதிய புத்தகங்கள் ஏராளமாக வந்துள்ளன. குடிநீர், கழிவறை வசதியும் திருப்திகரமாக உள்ளது.
முதலாமாண்டு புத்தக திருவிழாவில் ஹிட்லர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. கற்றலிலும் கேட்டல் நன்று என்ற வகையில், குழந்தைகள் மத்தியில் அது நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் குறும்படம் இல்லாதது பெரும் குறை.
