Published : 07 Mar 2020 08:36 am

Updated : 07 Mar 2020 08:36 am

 

Published : 07 Mar 2020 08:36 AM
Last Updated : 07 Mar 2020 08:36 AM

நூல் வெளி: போர் உன்னதமானது அல்ல

book-release

வறுமை, இயலாமை, சுயநலம், காதல், துரோகம், அதன் தொடர்ச்சியாய் எதிர்கொண்ட பாலியல் வக்கிரங்கள்; இவற்றால் ஒரு பெண்ணின் மனமும் உடலும் முழுவதும் சிதைக்கப்படுகிறது.

அங்கே நிலவிய போரின் கொடூரங்களாலும், போருக்குப் பிந்தைய சொந்த இன மக்களின் துரோகங்களாலும் அவளின் ஒட்டுமொத்தக் குடும்பமும் சிதைந்து சின்னாபின்னமான கதையை விவரிக்கிறது அருந்ததி எழுதிய ‘ஆண்பால் உலகு’ நாவல்.


“இருண்டு கிடந்தவற்றுக்கு எழுத்து வெளிச்சம் பாய்ச்சி முழுவதுமாகக் கற்பனை இல்லாமலேயே ஒரு படைப்பை வெளிக்கொணர்ந்தபோது இறக்கி வைத்தலின் ஆசுவாசத்தை உணர்ந்தேன்” என்கிறார் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளரான அருந்ததி.

இலங்கை யாழ்ப்பாணக் கடற்கரை கிராமமான நாவாந்துறையில் 3 மகன்கள், 2 மகள்களுடன் விளிம்புநிலை குடும்பத்தின் ஒரு விதவைத் தாய் எதிர்கொள்ளும் வழக்கமான வாழ்க்கைப் போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். மூத்தவர்களெல்லாம் திருமணத்தை சாக்காகக் கொண்டு பிரிந்துபோக, தனது சின்னக்கா, அவளுக்காகவே வாழ்ந்து கரைந்த அம்மா, அவர்கள் எதிர்கொண்ட அவமானங்கள், அவை எதையும் தடுக்க இயலாமல் தவித்த தம்பியின் புலம்பல்கள், இவற்றைதான் நாவல் நெடுகிலும் கேட்க முடிகிறது.

இலங்கைப் போர்ச் சூழலின் கொடூரங்கள் பற்றி ஷோபாசக்தி போன்றோர் நிறைய பதிவுசெய்துள்ளனர். இந்த நாவலிலும் குழந்தைப் பருவம்கூட கடந்திராத ஏழைச் சிறுவன் தன் வீட்டிலுள்ளவர்களின் பட்டினியைப் பொறுக்க முடியாமல் கோழியைத் திருடிவிடுகிறான்.

அவனை இழுத்துவந்து, ஊர் மைதானத்தில் நிர்வாணமாக்கி, கொடூரமான முறையில் அடித்துக் கொன்றுவிடுகின்றனர். இப்படி நீதியை நிலைநாட்டிய போராளிகளின் சாகசத்தைக் கண்ட அந்த ஊர் மக்கள் உறைந்துபோய், வாய்மூடி ஊமையாய்ப்போன சம்பவம் உட்பட சில கொடூரங்களை நாவலில் காண முடிகிறது.

சோறு ஊட்டி விடுதல் என்றொரு அவலமான சடங்கு இருந்துள்ளது. வறுமை உள்ளிட்ட சமூகக் காரணிகளால் ஊரறிய திருமணம் செய்து வைக்க முடியாத குடும்பங்களில் உள்ள பெண்ணை இரண்டாம் தார, மூன்றாம் தார, விவாகரத்து ஆன அல்லது ஆகாத ஆணுடன் சேர்ந்து சோறு சாப்பிட வைப்பார்கள்.

அவர்களைப் பொறுத்தமட்டில் அதுவே திருமணம். பிறகு, முதலிரவுக்காக அவர்களைத் தனி அறைக்குள் அனுப்பிவிடும் அதிர்ச்சி தரும் சமூக அவலம் பற்றி நாவல் பேசுகிறது. பொதுவாக இதுவரை, இலங்கை தமிழ்ச் சமூகத்தின் போர், வீரம், சாகசங்களை உன்னதமாக உயர்த்திப் பிடிக்கும் இலக்கியங்களே நிறைய வந்துள்ளன. இந்த நிலையில், ஆங்காங்கே இந்த உன்னதங்களை சுக்குநூறாக உடைத்தெறிகிறது ‘ஆண்பால் உலகு’.

யுத்தத்தின்போது ‘எங்கட பெண் போராளிகள்’ என்று இந்தியாவிலும் ஐரோப்பியாவிலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால், இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு, யுத்தத்துக்குப் பிறகு விடுதலையான அதே பெண் போராளிகளின் கற்பு பற்றி தெருத்தெருவாக பட்டிமன்றம் வைத்துப் பேசினார்கள்.

“போட்ட குண்டுகளின்ர நெருப்பில எரிஞ்சு எத்தினை பேர் செத்துப்போட்டதுகள்; இப்ப மிச்சமாய் இருக்கிற பொம்பிளைப் பிள்ளைகளும் நெருப்பில புகுந்து தங்கட கற்பை நிரூபிக்க வேணுமோ” என்ற வரிகள், எதிர்காலம் இழந்து நின்ற பல பெண்கள் பற்றிய கள யதார்த்தத்தைச் சொல்கிறது.

சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலிருந்து எந்த நாடுகளுக்குச் சென்றிருந்தாலும், எத்தனையோ நவீனங்களை அவர்களின் நடையில், உடையில், படிப்பில், வாழ்வில் தழுவியிருந்தாலும், சாதியச் சடங்குகளிலிருந்து மட்டும் அவர்கள் விடுபடவே இல்லை என்பதை நாவல் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளது.

போரின் ஆக்டோபஸ் கைகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் இந்தியாவுக்கோ ஐரோப்பாவுக்கோ தப்பிச் செல்ல என்ன வழியென்று தவித்த மக்களிடம், “விசா ஏற்பாடு செய்றேன், விமான டிக்கெட் ஏற்பாடு செய்றேன்” என்று கூறி காசு பார்த்த பின், நடுக்கடலில் தள்ளிவிட்டுச் சென்ற ஏராளமானவர்கள் பற்றியும் அருந்ததி பேசுகிறார். ‘இதுதான் நீங்கள் சொன்ன தமிழரா? இவையளுக்குத்தான் ஆளுறதுக்கு நாடு வேண்டுமா? என்றெல்லாம் கடைக்குட்டி கேட்க, நான் மௌனமாயிருந்தேன்’ என்ற நாவலின் நிறைவுப் பகுதி வரிகள் மனதை வதைக்கின்றன.

- வி.தேவதாசன்,
தொடர்புக்கு: devadasan.v@hindutamil.co.in

ஆண்பால் உலகு
அருந்ததி
கருப்புப் பிரதிகள் வெளியீடு
லாயிட்ஸ் சாலை, சென்னை-5.
தொடர்புக்கு: 94442 72500
விலை: ரூ.280வி.தேவதாசன்


நூல் வெளிபோர்வறுமைஇயலாமைசுயநலம்காதல்துரோகம்இலங்கையாழ்ப்பாணக் கடற்கரைஇலங்கைப் போர்போர்ச் சூழல்இலங்கை தமிழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x