Published : 07 Mar 2020 08:03 AM
Last Updated : 07 Mar 2020 08:03 AM

360: பாலினப் பாகுபாட்டு மொழி

சர்வதேசப் பெண்கள் தினத்துக்கும் முன்னதாகப் பெண்ணியவாதிகள் சிலர் ஒன்றுசேர்ந்து ஆக்ஸ்ஃபோர்டு அகராதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அந்த அகராதியின் சில பொருள் விளக்கங்களும் எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களும் பாலினப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்றிருக்கின்றனர் அவர்கள்.

எடுத்துக்காட்டாக, ‘வுமன்’ (பெண்) என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களில் ஒன்று ‘வேலைக்காரி’ எனும் பொருளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ‘மேன்’ (ஆண்) என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள் விளக்கங்களுள் ஒன்றில் ‘துணிவு, உத்வேகம், உறுதி போன்றவற்றைக் கொண்டிருக்கும் நபர்’ என்று விளக்கப்பட்டிருக்கிறது.

பெண்ணியத்தின் எழுச்சிக்குப் பிறகு மொழிப் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில் இன்னும் அறிவுத் தளத்தில் மெலிதான வடிவில் பாலினப் பாகுபாட்டை மொழி தக்க வைத்திருப்பதன் அடையாளம் இது என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். அவர்களின் வேண்டுகோளை அவசியம் பரிசீலிப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு தெரிவித்திருக்கிறது.

நாகர்கோவிலில் புத்தகக்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் 4-வது புத்தகக்காட்சி நாகர்கோவிலில் உள்ள பயோனியர் முத்து மகாலில் பிப்ரவரி 27 தொடங்கியது. மார்ச் 8 வரை நடப்பதாக இருந்த புத்தகக்காட்சி, மார்ச் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களும் விற்பனையாளர்களும் பங்கேற்கும் இந்தப் புத்தகக்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.

தமிழ்க் கழனியில் முளைக்கும் மாணவர்கள்

தேனி பெரியகுளத்திலுள்ள விக்டோரியா நினைவு அரசுப் பள்ளி தங்களுடைய மாணவர்களின் பங்களிப்போடு ‘தமிழ்க் கழனி’ என்றொரு இதழ் கொண்டுவந்திருக்கிறது. கதை, கவிதை, ஓவியம், கட்டுரை என வெளியாகியிருக்கிறது. இந்தப் பள்ளி நூலகத்தில் சுமார் 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களின் முனைப்போடு இந்தப் பள்ளி எடுக்கும் முன்னெடுப்புகள் ஒரு நல்ல முன்னுதாரணம்.

வழிகாட்டுகிறது ‘சுதந்திரச் சிந்தனை’

நான்கு ஆண்டுகளாக ஆர்ப்பாட்டமில்லாமல் இலக்கியக் கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது ராஜபாளையத்திலுள்ள ‘சுதந்திரச் சிந்தனை’ அமைப்பு. எழுத்தாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். முன்னமே தலைப்பு கொடுத்து கட்டுரையாகத் தயார்செய்து வர வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. எழுத்தாளரின் உரைக்குப் பிறகு வாசகர்களோடு கலந்துரையாடல் நடக்கிறது.

பிறகு, அந்தக் கட்டுரையை அச்சிட்டு விநியோகிக்கவும் செய்கிறார்கள். அழைத்திருக்கும் விருந்தினர்களைக் கண்ணியமான முறையில் தங்க வைக்கிறார்கள். பயணச் செலவை ஏற்றுக்கொள்வதோடு கண்ணியமான தொகையையும் தருகிறார்கள்.

‘சுதந்திரச் சிந்தனை’யின் முன்னெடுப்புகள் ஒரு நல்ல முன்னுதாரணமாக மாறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நடந்த 28 ஆளுமைகளுடனான கலந்துரையாடலைப் புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘சுதந்திரச் சிந்தனை’ அமைப்புக்கு வாழ்த்துகள்!

யூமா வாசுகியைக் கொண்டாடுவோம்

கவிதை, ஓவியம், நாவல், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் என யூமா வாசுகி அவர் தொட்ட துறைகளிலெல்லாம் அர்ப்பணிப்போடு பங்களித்தவர்.

சிறார்களுக்கான 50-க்கும் மேற்பட்ட முக்கியமான உலக, இந்தியப் புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். யூமா வாசுகியைக் கொண்டாடும் விதமாக ஒரு முழு நாள் கருத்தரங்கை நாளை (மார்ச் 8) ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டிலுள்ள ராணா தங்கும் விடுதியில் ‘சிற்றில்’, ‘ஈரோடு இலக்கியச் சுற்றம்’ அமைப்பினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x