Published : 01 Mar 2020 10:52 AM
Last Updated : 01 Mar 2020 10:52 AM

வெண்ணிற நினைவுகள்- உண்மையின் அழகு

ஒரு தமிழ்ப் படத்தின் தொடக்கத்தில் அந்தப் படத்தின் கதையை உருவாக்க எந்தெந்தப் புத்தகங்களெல்லாம் துணையாக இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்ட ஒரே படம் ‘சிவகங்கை சீமை’. படத்தின் டைட்டில் காட்சியில் ‘சிவகங்கை சரித்திரக் கும்மியும் அம்மானையும்’, ‘திருநெல்வேலி மானுவல்’, ‘ராமநாதபுரம் மானுவல்’, ‘மேஜர் வெல்ஷின் நாட்குறிப்பு’, ‘சென்னை வரலாறு’, கால்டுவெலின் ‘திருநெல்வேலி சரித்திரம்’, ‘மருதிருவர்’ பாரி நிலைய வெளியீடு ஆகிய புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

‘சிவகங்கை சீமை’, 1959-ல் வெளிவந்த திரைப்படமாகும். கே.சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவிஞர் கண்ணதாசன் கதை, வசனம், பாடல்களை எழுதித் தயாரித்திருக்கிறார். படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி. தமிழில் வெளியான சரித்திரப் படங்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றில் வரலாற்றுப் பிரக்ஞை துளிகூட கிடையாது. அந்தக் காலகட்டத்தை உண்மையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லாமல் படமாக்கியிருப்பார்கள். ஆனால், ‘சிவகங்கை சீமை’ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நாட்டார் வழக்காற்று மரபில் உள்ள ‘மருதிருவர்’ கதைகளையும் உண்மையான சரித்திர நிகழ்வுகளையும் அழகாக ஒருங்கிணைந்து கண்ணதாசன் திரைக்கதை எழுதியிருக்கிறார்.

அத்தோடு, படமாக்கப்பட்ட நிலப்பரப்பும் அரண்மனைகளும் கற்கோட்டைகளும் ஆடை அணிகலன்களும் யுத்தக் காட்சியும் மிகவும் நம்பும்படியாக இருக்கின்றன. இந்தப் படத்தின் பல காட்சிகளில் மருதரசர்கள் மேல் சட்டை அணியாமல் பட்டு வேஷ்டி மேல் துண்டுடன் காட்சியளிக்கிறார்கள். முத்தழகுவின் அண்ணனாக வரும் பி.எஸ்.வீரப்பா மேல் சட்டை இல்லாத உடலோடுதான் படம் முழுவதும் காட்சியளிக்கிறார். பெரிய மருதுவாக நடித்துள்ள பகவதி மிக இயல்பாக, அமைதியாக, கம்பீரமாகத் தோன்றுகிறார். சின்ன மருதுவின் கண்களில் துடிப்பும் வீரமும் வெளிப்படுகிறது. படத்தில் காட்டப்படும் பெண்களும் கண்டாங்கி சேலை கட்டி, கனகாம்பரம் முல்லை மல்லிகை சூடி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

அன்றைய சிவகங்கைச் சீமை என்பது தெக்கூர், ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள்தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்தவர். அதனால், அவர் சிவகங்கைச் சீமையின் வரலாற்றை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்குவது சவால். அதன் திரைக்கதையை எழுதுவதற்கு நிறைய படிக்கவும் ஆய்வுசெய்யவும் வேண்டும். நான் அறிந்தவரை, தமிழின் எந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் நூலகம் கிடையாது. அந்தக் காலத்தில் இருந்த பெரிய ஸ்டுடியோக்களிலும்கூட ரெபரன்ஸ் நூலகம் இருந்ததாகக் கேள்விப்பட்டதில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வரலாற்றுப் படங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதன் கதையை எழுதுவதற்கு உதவியாகப் புத்தகங்கள் வாங்குவதற்கோ, ஆவணக் காப்பகத்துக்குச் சென்று மூல ஆவணங்களைக் காண்பதற்கோ, வரலாற்றுச் சின்னங்களைக் காண்பதற்கோ பத்து ரூபாய்கூட சினிமாவில் செலவழிக்க மாட்டார்கள்.

சோழர் கால வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க முற்பட்ட இயக்குநர் ஒருவருடன் ஒரு படத்தில் பணியாற்றினேன். அவருக்குத் தமிழ்நாட்டில் எது பாண்டியர் ஆண்ட பகுதி, எது சோழர்கள் ஆண்ட பகுதி என்றுகூட தெரியவில்லை. படத்தின் யுத்தக் காட்சியில் பெரிய பெரிய பீரங்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். சோழர் காலத்தில் ஏது பீரங்கிகள் என்று கேட்டதில் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் வந்தது. அவர், “சினிமா எடுப்பதற்கு எதற்கு வரலாறு? நாம் காட்டுவதுதான் வரலாறு. சோழர் காலத்தில் பீரங்கி இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று சண்டை போட்டார். “அய்யா, நான் முப்பது ஆண்டுகளாக வரலாற்றைப் படித்திருக்கிறேன். அப்படி எதுவும் இல்லையே?” என்றேன். அன்றே அவர் படத்திலிருந்து என்னை விலக்கிவிட்டார். அடுத்த 2 மாதங்களில் படமே நின்றுபோனது. படம் எடுப்பவருக்கே வரலாற்றுப் பிரக்ஞை இல்லாதபோது படத்தில் எப்படி உருவாகும் சொல்லுங்கள்!

ஆனால், ‘சிவகங்கை சீமை’ படத்தைப் பார்க்கும்போது எவ்வளவு நுட்பமாகச் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து உருவாக்கியிருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. படத்தின் ஒரு காட்சியில் கொலையாளி ஒருவனின் குறுவாள் ஒன்றை முத்தழகு கண்டுபிடித்து அது யாருடையது எனத் தேடுகிறான். அந்தக் குறுவாளின் வடிவமும் அதன் உறையும் மறவர் சீமையில் பயன்படுத்தப்பட்ட குறுவாளைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் வரும் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரி ஆங்கிலத்தில்தான் உரையாடுகிறார். துபாஷி ஒருவர்தான் அதை மொழிபெயர்த்துச் சொல்கிறார். குறிப்பாக, மேஜர் வெல்ஷுக்கும் மருது சகோதர்களுக்கும் இடையில் இருந்த நட்பும் அன்பும் மிக அழகாகப் படத்தில் காட்டப்படுகிறது. இதை வெல்ஷ் தனது நாட்குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார். பெயர் பொறித்த புலிநகம், கங்கணம், முத்துமாலை, கழுத்துச் சரம், கடுக்கன், கைக்காப்பு என அணிகலன்களைக்கூட சரித்திரபூர்வமாகவே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒப்பற்ற உடல் வலிமை கொண்ட பெரிய மருது, நாணயத்தை விரல்களால் வளைக்கக்கூடிய வலிமை கொண்டவர் என்ற தகவலை நாணயம் ஒன்றை முத்தழகு வளைத்துக்காட்டுவதாக மாற்றியிருக்கிறார்கள். அதிலும்கூட ஆற்காடு நாணயங்கள் என்றால் ஆறேழு வளைத்திருப்பேன் என முத்தழகு கூறுகிறான். ஆற்காடு அன்று ஆங்கிலேயருக்குத் துணையாக இருந்தது என்பதைக் கண்டிப்பதற்காகவே இந்த வசனம் இடம்பெற்றுள்ளது.

இன்னொரு காட்சியில் வீட்டில் முத்தழகுக்கு அவனது அண்ணி, வெள்ளைப் பணியாரம் பரிமாறுகிறாள். அது அந்த மண்ணுக்கே உரித்தான உணவு. வெண்கலக் கும்பாவில்தான் சாப்பிடுகிறார்கள். இன்னொரு காட்சியில் சத்திரத்துக்கு வருகிற வழிப்போக்கனுக்குப் பழைய சோறும் வெஞ்சனமும் இருக்கிறது, சாப்பிடுங்கள் என ஒருவர் உபசரிக்கிறார். வெஞ்சனம் என்ற சொல் நகரவாசிகளுக்குத் தெரியாது. வெஞ்சனம் என்பது சோற்றோடு தொட்டுக்கொள்ளும் தொடுகறிகள். “இன்னைக்கு என்ன வெஞ்சனம் வச்சே?” என்று கேட்பதே மக்கள் வழக்கு. சரித்திர உண்மைகளை மக்கள் மனதில் பதியச்செய்வதற்காக ‘சிவகங்கை சீமை’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் யதார்த்தமான உருவாக்கமே காலம் கடந்து இன்றும் பெருமைக்குரிய தமிழ்ப் படமாகக் கொண்டாடச்செய்கிறது!

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x