360: அழகிய பெரியவனுடன் ஒரு நாள்

360: அழகிய பெரியவனுடன் ஒரு நாள்
Updated on
2 min read

ஒடுக்கப்பட்ட மக்களின் சிக்கல்களை முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவரும் அழகிய பெரியவனுக்கு நாளை (மார்ச் 1) வேலூர் செயின்ட் மேரிஸ் கல்வியியல் கல்லூரியில் முழு நாள் அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவருடைய படைப்புகள் சார்ந்த உரையாக மட்டுமல்லாமல் கவிதை வாசிப்பு, பவா செல்லதுரையின் கதை சொல்லல், அழகிய பெரியவனுடன் உரையாடல் என்பதாக நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோமல் அன்பரசனுக்கு ஆய்வரங்கம்

தமிழகத்தின் பாரம்பரியமான தமிழ்க் கல்வி மையங்களில் ஒன்றான தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரியானது மூத்த பத்திரிகையாளரான கோமல் அன்பரசனைக் கௌரவித்துள்ளது. அவர் எழுதிய எட்டு புத்தகங்களுக்கான முழு நாள் ஆய்வரங்கை நேற்று (பிப்ரவரி 28) நடத்தியிருக்கிறது.

தூத்துக்குடி, நாகர்கோவிலில் புத்தகக்காட்சி

தூத்துக்குடி ராமையா மகாலில் பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 12 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் 4-வது புத்தகக்காட்சி நாகர்கோவிலில் உள்ள பயோனியர் முத்து மகாலில் பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 8 வரை நடக்கிறது.

தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களும் விற்பனையாளர்களும் பங்கேற்கும் இந்தப் புத்தகக்காட்சியில் அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.

ரூ.1.5 லட்சம் சிறு தொகைதான்!

‘புது எழுத்து’ இலக்கிய இதழின் ஆசிரியரும், சவுளூர் அரசுப் பள்ளி ஆசிரியருமான சுகவன முருகன் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் தன்னுடைய ஊக்க ஊதிய நிலுவைத் தொகையில் ரூ.1,50,001-ஐ சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

“நம் தமிழில் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் பெட்டகம் ரோஜா முத்தையா நூலகம். ஆனால், நிதிப் பற்றாக்குறையால் அது தள்ளாடுகிறது. என்னால் இயன்றது இவ்வளவுதான். வாய்ப்பிருந்தால் இன்னமும் பெரும் தொகையைக் கொடுத்திருப்பேன்” என்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in