

ஏகாதிபத்தியத்தையும் நாஜிஸத்தையும் வீழ்த்தி சோவியத் ரஷ்யாவில் சோஷலிஸக் குடியரசைச் செதுக்கியவர் ஸ்டாலின். என்றாலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. இத்தகைய விமர்சனங்கள் குருச்சேவ் குழுவினரின் திருத்தல்வாதமே என்றும், ஸ்டாலினைப் பற்றி அறிந்துகொள்ள அவரது எழுத்துகளையே படியுங்கள் என்றும் பரிந்துரைக்கிறது ‘அலைகள்’ பதிப்பகம்.
தமிழில் முதன்முதலாக ஸ்டாலின் எழுத்துகள் முழுமையையும் 15 தொகுதிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. முதல் தொகுதி, 1901-1907 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. டிப்லிஸ் நகரத்தை மையப்படுத்தி நடத்தப்பட்ட புரட்சிகரச் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. ரஷ்யப் புரட்சிக்கான அடித்தளங்கள் உருவான காலக்கட்டம் இது.
- புவி
ஜே.வி.ஸ்டாலின் படைப்புகள்
தொகுதி- 1
தமிழில்: மணியம்
அலைகள் வெளியீட்டகம்
ராமாபுரம், சென்னை-89
தொடர்புக்கு: 98417 75112
விலை: ரூ.450
அடியாரின் வரலாறு
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ எழுதிய சமீபத்திய நூல். ‘இடைக்கால தென்னகக் கோயில்களில் பணிப்பெண்கள்’ என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம்.
ஆணுக்கு நிகராக தேவரடியார்கள் பெற்ற சன்மானம், கோயில்களுக்கு அவர்கள் வழங்கிய நன்கொடைகள், அவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போரட்டம் உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்களைக் கல்வெட்டு ஆதாரங்களுடன் இந்நூலில் விவரித்துள்ளார். தேவரடியார் முறையின் தோற்றம் தொடங்கி 1947-ல் முத்துலட்சுமி ரெட்டியின் முயற்சியில் கொண்டுவரப்பட்ட ‘தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ வரையிலான வரலாறு, விரிவான சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
- செ.இளவேனில்
கல்வெட்டுகளில் தேவதாசி
எஸ்.சாந்தினிபீ
விஜயா பதிப்பகம்
ராஜ வீதி,
கோயம்புத்தூர்-641001.
தொடர்புக்கு:
0422-2382614
விலை: ரூ.100
எல்லோருக்குமான உரையாடல்
அன்பின் மை தொட்டு எழுதும் ச.மாடசாமி, ஆங்கில மொழியில் வாசித்திருக்கும் குழந்தைகளுக்கான கதைகளைத் தமது பேரக் குழந்தைகளுக்குச் சொன்ன அனுபவத்தின் ருசியோடு இந்நூலில் சொல்கிறார். குரைக்கச் சொன்னால் வெவ்வேறு விலங்குகளின் ஒலிக் குறிப்பை எழுப்பும் நாய்க்குட்டி, பல் டாக்டர் சுண்டெலி, சட்டை பொத்தான் இழந்ததால் யாருமே வாங்காதுபோவதில் வருத்தமுறும் கரடி பொம்மை என்று பல விலங்குகள் சுவாரஸ்யமாக உரையாடுகின்றன.
போட்டி, பொறாமை, கர்வம் போன்றவற்றைக் குழந்தைகள் கடந்துபோவதில் எப்படி பெரியவர்கள் குறுக்கிட்டுக் குழப்புகிறோம் என்பதை ரசமான கதைகளை முன்வைத்துப் பேசுகிறார். நமது பார்வையை விசாலப்படுத்தவும், அணுகுமுறைகளை மறுவாசிக்கவும், வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கவும் மாற்றும் புத்தக வரிசையில் இந்நூல் நிச்சயம் இடம் பெறும்.
- எஸ்.வி.வேணுகோபாலன்
வித்தியாசம்தான் அழகு
ச.மாடசாமி
அகரம் அறக்கட்டளை வெளியீடு
தி.நகர், சென்னை-17.
தொடர்புக்கு:
044-43506361
விலை ரூ.100