Published : 29 Feb 2020 08:00 AM
Last Updated : 29 Feb 2020 08:00 AM

இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும்

தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்
இரா.பிரபாகர்
கருத்து=பட்டறை வெளியீடு
திருநகர், மதுரை-6.
தொடர்புக்கு: 98422 65884
விலை: ரூ.250

இந்தியாவைத் தாண்டி கவனம் ஈர்க்கும் இசை ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வேறு நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் அவர்களைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மேலோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், அவர்களுடைய இசையைத் தீவிரமாக ஆய்வுசெய்து வெளிவந்திருக்கும் புத்தகங்கள் மிகக் குறைவு. இரா.பிரபாகர் எழுதி ‘கருத்து=பட்டறை’ வெளியீடாக வந்திருக்கும் ‘தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்’ புத்தகமானது இளையராஜா, ரஹ்மான் இருவரின் இசையையும் விரிவாகப் பேசுகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ் வெகுஜன இசையின் நெடிய வரலாற்றைக் கலாச்சாரக் கண் கொண்டும் பார்க்கிறது. நூலிலிருந்து...

இளையராஜா

வெகுஜனக் கலைகளில் ஒரு மக்கள் திரள் ஒரு குறிப்பிட்ட வகை ரசனைமுறைக்குப் பழக்கப்பட்ட பின்னர், அதை முற்றிலும் மறுதலித்துப் புதிதான ஒன்றுக்குத் தன் ரசனையை மாற்றிக்கொள்வதென்பது எளிதான ஒன்றல்ல. ஏற்கெனவே நூற்றுக்கணக்கான படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைக் கேட்டுப் பழகிய தமிழ்க் காதுகள் இளையராஜாவை இறுகப் பற்றிக்கொண்டமைக்கு அவரது புதிய பரிமாணங்களை, இசையின் தனித்தன்மைகளை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

தமிழ்த் திரைப்பட இசை வரலாற்றில் முதன்முறையாக எல்லா அர்த்தத்திலும் மண்ணின் மைந்தனாகக் கருதத் தக்கவராக இளையராஜா இருந்தார். மற்ற எல்லா இசையமைப்பாளருக்கும் இருந்த சாஸ்திரீய இசைப் பின்புலம் இல்லை என்பதைவிட, அதன் எதிர்வாகப் பார்க்கப்பட்ட நாட்டுப்புற இசையோடு பிறந்துவளர்ந்தவராக இளையராஜா இருந்தார். முற்றிலும் மாறுபட்ட மெட்டமைப்புக்கான உந்துதலை நாட்டுப்புற இசையிலிருந்து பெற்றது இளையராஜாவின் பலம் ஆயிற்று. இந்தியாவின் பன்மைத்துவப் பண்பாட்டில் தமிழகத்தின் தனித்த பண்பாட்டு ஊடாட்டங்களைப் புரிந்துகொண்டால்தான் இளையராஜாவின் மெட்டுகளின் தனித்துவத்தை மதிப்பிட முடியும்.

நாட்டுப்புற இசைக்கூறுகளைக் கையாண்ட விதத்தில் இளையராஜாவுக்கும் மற்றவர்களுக்கும் இருந்த அடிப்படையான வேறுபாடு, நாட்டுப்புற இசையைப் பார்த்த விதம்தான். பொதுவாக கேலிகிண்டல், நையாண்டித்தன்மையுள்ள, இரட்டை அர்த்தமுள்ள பாடல்கள், குறிப்பாக ‘சி கிளாஸ்’ என்று சொல்லத்தக்கப் பார்வையாளரை மனதில் கொண்டவையாக அமையும் பாடல்களே நாட்டுப்புற மெட்டுகளில் அமையும். அக்காலச் சமூகப் பொதுப்புத்தியைப் பிரதிபலிப்பதாகவே இதை எடுத்துக்கொள்ள முடியும். அத்தகைய சூழலில், இளையராஜாதான் முதன்முறையாக எல்லா வகையான சூழல்களுக்கும் நாட்டுப்புற மெட்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதைச் சாத்தியமாக்கினார்.

வெகுஜனத் திரைப்படத் துறையில் ஒருவர் செல்வாக்கு பெற்றவராக இருப்பதை மதிப்பிட சில வழிமுறைகள் உண்டு. முதலாவதாக, அவர் தன் கலைக்காகப் பெறும் ஊதியம். இரண்டாவதாக, பிரபலமான இயக்குநர்களும் நடிகர்களும் தங்கள் படங்களில் அவரை இணைத்துக்கொள்வதை வியாபாரரீதியாகவும் கலாபூர்வமாகவும் பலமாகக் கருத வேண்டும். மூன்றாவதாக, வெகுஜன ஊடகங்களில் அந்தக் கலைஞரைப் பற்றிய செய்திகள், கிசுகிசுக்கள், பேட்டிகள், புகைப்படங்கள் வெளிவந்துகொண்டே இருக்க வேண்டும். இவையெல்லாம் இளையராஜாவின் விஷயத்தில் முற்றிலும் பொருந்தக்கூடியனவாக இருந்தன. இதற்கு மேலும் கூடுதலாக, இளையராஜாவின் புகைப்படங்கள் திரைப்படச் சுவரொட்டிகளில் இடம்பிடித்தன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஓர் இசையமைப்பாளரின் உருவம் நாயக நடிகர்களோடு இடம் பெற்றது என்றால் அது இளையராஜாவுக்குப் பிறகுதான்.

ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியாவில் திரையிசை உருவாக்க முறைமையில் இருந்த மரபுகளை முழுமையாக மாற்றி அமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இந்தியாவில் இசையமைப்பாளர் என்ற பிம்பத்தையே மாற்றி அமைத்தார். வெற்றிலை குதப்பும் வாயுடன் ஜிப்பா அணிந்து, நெற்றியில் பட்டை, குங்குமமிட்டு ஹார்மோனியத்தில் கை வைத்திருக்கும் பிம்பத்தை மாற்றி கம்ப்யூட்டர்கள், கலவைச் சாதனங்கள் முன் அமர்ந்திருப்பவராக மாற்றினார். இசை உருவாக்கத்தைப் பொறுத்தவரை மெட்டமைப்பது, இசைச் சோடனை செய்வது, பாடகர்கள், கருவியிசைக் கலைஞர்களைக் கையாள்வது என அனைத்து விஷயங்களிலும் ரஹ்மான் புதிய அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசையில் பாடகர்கள், கருவியிசைக் கலைஞர்கள், ஒலிப் பொறியாளர்கள் என அனைவரையும் படைப்பின் பங்காளர்களாக அங்கீகரிப்பதன் மூலம் படைப்பு என்பது ஒரு வெளிப்படைத்தன்மையைப் பெறுகிறது. இசை உருவாக்கத்தில் ரஹ்மானின் இந்தத் தலைகீழ் அணுகுமுறை புதிய தொழில்நுட்பத்தாலேயே விளைந்தது. டிஜிட்டல் ஒலிப்பதிவு, எண்ணற்ற தடங்களில் இசையைப் பதிவுசெய்யும் வசதி போன்றவை ரஹ்மானின் பரிசோதனைகளுக்கான சாத்தியங்களை உருவாக்குகிறது. பாடகர் பாடுவதென்பது பக்கவாத்தியங்கள், ஊடிசை, இசைச் சோடனை ஆகிய எல்லாவற்றையும் முடிவுசெய்த பின் இறுதியாக நிகழ்வதாகும். ரஹ்மான் பாடலை முதலில் பாடச் செய்து, அதற்கான இசைப் பகுதிகளைப் படிப்படியாக நாள்கணக்கில் வாரக்கணக்கில் உருவாக்குகிறார். சென்னையில் ஆரம்பிக்கும் ஒரு பாடல் மும்பையிலும் லண்டனிலும் செப்பனிடப்படுகிறது. ஒரு தமிழ் இசையமைப்பாளனின் மெட்டுக்கு மஹாராஷ்டிரப் பாடகர் குரல் கொடுக்க, ஒரு அமெரிக்கக் கருவியிசைக் கலைஞர் கருவியிசைக்க, ஒரு இலங்கைப் பாடகி இடைக்குரல் வழங்க, இங்கிலாந்தின் ஒலிப் பொறியாளர் ஒலிக் கலவைசெய்யும் ஒரு படைப்பாக மாறுகிறது.

ஒலிப் பொறியியல் சரியான வளர்ச்சி பெறாத இந்தியச் சூழலில் ஓர் இசையமைப்பாளர் தானே அதைக் கற்றுத் தேர்வதன் மூலமாக மட்டுமே உலகத்தரத்தைப் பெறக்கூடியவராக இயங்க முடியும் என்பதை ரஹ்மான் வெளிப்படுத்தினார். இந்தியாவின் முன்னனித் தகவல் தொழில்நுட்ப இதழான ‘எக்ஸ்பிரஸ் கம்ப்யூட்டர்’, தொழில் நுட்பத்தை ரஹ்மான் பயன்படுத்தும் விதத்தை வியந்தது. “நான் ஏன் ஆப்பிள் மேக்கிண்டாஷ் உபயோகிக்கிறேன்? இசை மற்றும் படைப்புக் கலைகளை உருவாக்குவதற்கு அதுதான் சிறந்தது. மேக் எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது. அது ‘ஆட்டிட்யூட்’ உள்ள எந்திரம்” என்றார் ரஹ்மான். ஒரு இயந்திரத்துக்கு மனிதப் பண்புகளை ஏற்றிக் கூறுமளவுக்கு அவர் இருக்கிறார்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய இயக்குநர் கோவிந்த் நிகாலினி, “அடுத்த நூற்றாண்டின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் வெறும் மெட்டுகளை உருவாக்குபவர் அல்ல. அவர் முழுமையான இசையை உருவாக்குபவர். அவர் இசைத் துறையின் போக்குகளையும் வளர்ச்சிகளையும் தொடர்ந்து கவனித்துவருபவர்” என்கிறார்.இந்தியாவைத் தாண்டி கவனம் ஈர்க்கும் இசை ஆளுமைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வேறு நாட்டைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் அவர்களைப் பற்றி பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும். இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மேலோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், அவர்களுடைய இசையைத் தீவிரமாக ஆய்வுசெய்து வெளிவந்திருக்கும் புத்தகங்கள் மிகக் குறைவு. இரா.பிரபாகர் எழுதி ‘கருத்து=பட்டறை’ வெளியீடாக வந்திருக்கும் ‘தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்’ புத்தகமானது இளையராஜா, ரஹ்மான் இருவரின் இசையையும் விரிவாகப் பேசுகிறது. அது மட்டுமல்லாமல், தமிழ் வெகுஜன இசையின் நெடிய வரலாற்றைக் கலாச்சாரக் கண் கொண்டும் பார்க்கிறது.

நூலிலிருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x