Published : 28 Feb 2020 06:23 PM
Last Updated : 28 Feb 2020 06:23 PM

மொழிபெயர்ப்பு இரண்டாம் தாய் மனநிலையில்தான் அணுகப்படுகிறது: சாகித்ய அகாடமி விருதாளர் கே.வி.ஜெயஸ்ரீ நேர்காணல்

2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்புக்கான (தமிழ்) விருது 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்னும் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையில் இந்நாவல் எழுதப்பட்டது. வெளியான குறுகிய காலத்திலேயே பெருத்த வரவேற்பைப் பெற்ற நாவல், பல பதிப்புகளைக் கண்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டு உயிரோட்டத்துடன் மொழிபெயர்ப்பு செய்தவர் கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை கே.வி.ஜெயஸ்ரீ. அவர் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்கள், இலக்கியத் தருணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

ஓர் ஆசிரியராக இந்த விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?
நான் 16 வருடங்களாக ஆசிரியராக இருக்கிறேன். ஆனால் 22 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இரண்டு துறைகளையும் நான் இணைத்துக் கொள்வதில்லை. எழுத்துப் பணிகள் வீட்டில்தான் நடக்கும். அதிகாலையில் உட்கார்ந்து எழுதுவது, மாலையில் நெடுநேரம் மொழிபெயர்ப்பு என இருக்கும்.

மூல நாவலை ஒரு தமிழர்தான் எழுதியிருக்க வேண்டும் என்று எல்லோரும் கூறுகின்றனர். தமிழார்வம் கொண்ட யார் வேண்டுமானாலும் இதை எழுதியிருக்கலாம். நான் படித்த தமிழ் இலக்கியம் இந்த நாவலை உயிரோட்டத்துடன் எழுத உதவியது.

இன்றைய தலைமுறைக்கு வாசிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் மாணவர்களை வாசிக்கச் சொல்லி இருக்கிறீர்களா?
நான் படிக்கிறேன்; எழுதுகிறேன் என்பதை எனது மாணவர்களுக்குச் சொல்ல நெடுநாட்கள் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக புதிய பாடத்திட்டம் அறிமுகமான பிறகே மாணவர்களிடத்தில் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வருகிறேன்.

என் மாணவர்களுக்குப் பூமணியைத் தெரியும், பிரபஞ்சன், ஜெயமோகனைத் தெரியும். சிறந்த மாணவர்களுக்கு என்னுடைய புத்தகங்களையும் பரிசாக அளித்திருக்கிறேன். இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போதுதான் மாணவர்கள் 'வால்காவில் இருந்து கங்கை வரை' வாங்கிக் கொடுங்கள் என்று கேட்கிறார்கள். 'நகுலன் கவிதைகள்' கேட்கின்றனர்.

என்றாலும் இந்தத் தலைமுறையில் பெரும்பாலானோருக்கு வாசிப்பு என்பதே இல்லை. பாடம், பாட நோக்கு, தேர்வு என்றுதான் குழந்தைகள் செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

கணவருடன்

சமகாலத் தமிழ் இலக்கிய சூழல் எப்படி இருக்கிறது?
நன்றாக உள்ளது. நிறையப் பேர் எழுத ஆரம்பித்திருக்கின்றனர். எல்லா வகைமை இலக்கியங்களும் தோன்றுகின்றன. ஆனாலும் ஒரு வெறுமை இருந்துகொண்டே இருக்கிறது.

சமூக வலைதளங்களில் எழுதுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
நேரத்தைப் போக்குவதற்காக அவசர அவசரமாக எழுதுவது போன்று தோன்றுகிறது. பழங்காலத்தில் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும் வடிவம், இப்போது மீளாக்கம் செய்யப்பட்டு ஃபேஸ்புக் திண்ணையாக மாறியிருக்கிறது. ஆழமான உள்ளடக்கங்கள், கருத்துருக்கள் சமூக வலைதளங்களில் கிடைப்பதில்லை.

மலையாள நாவல்களை மொழிபெயர்ப்பதில் என்ன சாதக, பாதகங்களை எதிர்கொண்டிருக்கிறீர்கள்?
தாய்மொழி மலையாளம் என்றாலும் நான் படித்து, வளர்ந்தது தமிழோடுதான். அதனால் மொழிபெயர்ப்பில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் ஒரு முக்கியமான சிக்கல் ஏற்பட்டது. அது வட்டார மொழிகளைக் கையாள்வது.

தமிழைப் போல அங்கும் வட்டார வழக்குகள் இருக்கின்றன. கன்னூர் மலையாளமும் கோழிக்கோடு மலையாளமும் திருச்சூர் வட்டார மொழியும் வெவ்வேறாக இருக்கும். அதை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மூலக் கதையை எழுதிய எழுத்தாளருடனே உட்கார்ந்து பேசுவேன். நண்பர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். வாசிப்புக்கு நெருடல் இல்லாத வகையில், உயிரோட்டத்துடன் மொழிபெயர்ப்பை மேற்கொள்வேன். என்றாலும் வட்டார மொழியின் தனித்தன்மையை முழுமையாகக் கொண்டு வரமுடியாது.

சொந்த ஆக்கத்துக்குக் கிடைக்கும் வரவேற்பும் பாராட்டும் மொழிபெயர்ப்புக்குக் கிடைக்கிறதா?
இல்லை. இரண்டாம் தாய் மனப்பான்மையுடன்தான் மொழிபெயர்ப்பு அணுகப்படுகிறது. உலகளாவிய அளவில் இதே நிலைதான் இருக்கிறது. மொழிபெயர்ப்புக்கு இரண்டாவது இடம்தான் என்றாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன்.

பொதுவாக தாய்மொழியில் மட்டுமே படிப்பது இலக்கியத்தில் வறட்சியை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் மொழிபெயர்ப்பின் மூலமாகவே கலாச்சாரம், தொன்மை, பண்பாட்டுப் பகிர்வுகள் நடந்தேறுகின்றன.

நீங்கள் சொந்தமாக ஏன் எழுதுவதில்லை?
இப்போதைக்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை. எதையும் நம்மால் வலியத் திணிக்க முடியாது அல்லவா? அந்த மனநிலை வரும்போது வரட்டும். மொழிபெயர்ப்பே எனக்கு வசதியாகவும் பரிச்சயமானதாகவும் இருக்கிறது.

பெண்கள் சாகித்ய அகாடமி விருது பெறுவது குறைவாகவே இருக்கிறதே?
ஆண் மைய சமூகத்தில் இது இயல்புதான். ஒரு பெண் வீட்டை விட்டுப் பொதுவெளிக்கு வருவதே சவாலாக இருக்கிறது. ஏகப்பட்ட தடைகளைத் தாண்டித்தான் அவள் வெளியே வரவேண்டியுள்ளது. உதாரணத்துக்கு எழுத்தாளர்கள் கூட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு நாங்கள் குடும்பமாகச் சென்று ஏற்பாடுகளைக் கவனித்திருக்கிறோம். ஆனால் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் வீட்டுப் பெண்களே அங்கு வரமாட்டார்கள்.

எழுதுவது பிடிக்காத, கவிதை பிடிக்காத கணவனுக்காக மாறிய பெண்களும் இருக்கிறார்கள். பொதுவெளிக்கும், எழுத்துக்கும் குறைவான பெண்களே வரும் சூழலில், அவர்களில் சிறந்தவர்களைத் தேடிப்பிடிப்பது சவாலாக மாறிவிடுகிறது.

இளம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?
தொடர்ந்து வாசிக்க வேண்டும். அது இல்லாமல் திடீரென எழுதவோ, மொழிபெயர்க்கவோ முடியாது. 4-ம் வகுப்பில் இருந்து, கையில் என்ன கிடைத்தாலும் படிப்பேன். அந்த வாசிப்புதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்புக்கு வருபவர்களுக்கு ஏதேனும் 2 மொழிகளாவது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். எழுத்தாளர் எதை நினைத்து அந்தப் படைப்பை உருவாக்கினாரோ, அதை உணர்வு சிதையாமல், அடுத்த மொழிக்குக் கடத்த வேண்டும். நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு எழுதுவதோ, படைப்பின் சில பகுதிகள் புரியவில்லை என்று அதை வெட்டிக் குறைப்பதோ, மாற்றுவதோ கூடாது.

மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளரின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். மூலப் படைப்பைத் தாண்டி சொந்தக் கருத்துகளைப் புகுத்த மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் கிடையாது. இதைக் கருத்தில் கொண்டால், மொழிபெயர்ப்பு அதன் தன்மையில் இருந்து மாறாது என்கிறார் கே.வி.ஜெயஸ்ரீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x