Published : 23 Feb 2020 09:26 AM
Last Updated : 23 Feb 2020 09:26 AM

வெண்ணிற நினைவுகள்: காதலின் பெயரால்...

உலகின் எந்தத் தேசத்திலும் காதலின் பெயரால் ஒரு ஆண் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டான் என்றோ, ஆசிட் அடிக்கப்பட்டான் என்றோ வரலாறே கிடையாது. எல்லாத் தேசங்களிலும் பெண்கள்தான் காதலின் பொருட்டு வன்முறைக்கு உள்ளாகிறார்கள்; ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்கள். தீக்காயங்கள் ஏற்படுத்திய வடுக்களுடன் வாழ்நாளைக் கழிக்கிறார்கள். ஆசிட் அடித்தவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத் தொடங்கிவிடுகிறான். ஆனால், பாதிப்புற்ற பெண்ணுக்கு வாழ்க்கை கிடையாது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நீதி கிடைத்திருக்கிறது?

‘என் காதலை மறுத்துவிட்டாள். அதனால், அவள் மீது ஆசிட் அடித்தேன்’ என்று ஒரு இளைஞன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். அவன் மனதில் ஒரு சொட்டுக் காதல் இருந்திருந்தால்கூட இப்படிச் செய்திருக்க மாட்டான். அவன் மனதில் இருந்தது வக்கிரம், குரூரம், பெண் மீதான வன்மம். அதுதான் இப்படியான கோரச் செயலைச் செய்யத் தூண்டுகிறது.

கடந்த 20 ஆண்டுகளில், வங்கதேசத்தில்தான் அதிகமாகப் பெண்கள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 3,512 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இதற்கு அடுத்த இடம் இந்தியாவுக்கு. ரேஷ்மா குரேஷி என்ற 16 வயதுப் பெண் பள்ளிக்குச் செல்லும் வழியில் சில ஆண்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆசிட் வீசித் தாக்கப்பட்டார். அவரது முகம் முற்றிலும் வெந்துபோனது. அதை மறைத்துக்கொள்ள விரும்பாமல் முகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தழும்புடன் அவர் வேலை தேட ஆரம்பித்தார். ஒருவரும் அவருக்கு வேலை தரவில்லை. உறவினர்கள் அவளை மிக மோசமாக நடத்தினார்கள். அவமதித்தார்கள். அது ஆசிட் வீசப்பட்டதை விடவும் அதிகமான வலியை ஏற்படுத்தியது என்கிறார் ரேஷ்மா. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடக்கிறது. அதில் சிலரே காவல் துறையில் புகார் தருகிறார்கள். நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை அளித்தபோதும் ஆண்கள் மனதில் பயம் ஏற்படவில்லை. பெண்கள் மனதில்தான் பயம் குடியேறியிருக்கிறது என்கிறார் ரேஷ்மா குரேஷி.

2012-ம் ஆண்டுக்கான சிறந்த மாநிலத் திரைப்படத்துக்கான தேசிய விருதுபெற்ற படம் ‘வழக்கு எண் 18/9’. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படம், ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணுக்கான நீதி குறித்துப் பேசுகிறது. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படைப்பாளிகளில் பாலாஜி சக்திவேல் முக்கியமானவர். அவரது ‘காதல்’, ‘கல்லூரி’ திரைப்படங்கள் தமிழ் சினிமாவுக்குப் புதிய அழகை உருவாக்கின.

படத்தின் தொடக்கக் காட்சியில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண், மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் அனுமதிக்கப்படுகிறார். போலீஸ் விசாரணையைத் தொடங்குகிறது. பாதி திறந்து மூடும் கண் இமைகளின் துடிப்பு வழியாகவே வேதனையான பெண்ணின் குரல் தன் அவலத்தை வெளிப்படுத்துகிறது. மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்தபடியே தலையில் அடித்துக்கொண்டு புலம்புகிறாள் பெண்ணின் தாய்.

ஒரு போலீஸ்காரன் அவளிடம், “உன் மக யாரையாவது லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்தினாளா?” என்று கேட்கிறான். அப்படித்தான் வழக்கை அவர்கள் கொண்டுசெல்லப் போகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பது, அந்த முதல் கேள்வியிலேயே தெரிந்துவிடுகிறது. இதை அறியாமல் பெண்ணின் தாய் வேதனையோடு, “அப்படியில்லை” என்கிறாள். போலீஸ்காரன் அடுத்த கேள்வியாக, “உன் மக வேலைக்குப் போன இடத்துல அப்படி இப்படி ஏதாவது தப்பா நடந்துகொண்டாளா?” எனக் கேட்கிறான். அவர்கள் ஜோடிக்கப்போகிறார்கள் என்பதற்கான அடையாளமாகவே இக்கேள்விகள் இடம்பெறுகின்றன.

ஆசிட் அடிக்கப்பட்டதற்கு ஏதாவது வேறு காரணம் இருக்கக்கூடும் என போலீஸ்காரர்கள் அவளிடம் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். இது காவல் துறையின் கேள்வி மட்டுமல்ல, நம் பண்பாட்டில் ஒரு பெண் பாதிக்கப்பட்டால் இப்படி ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்றே பொதுப்புத்திக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ‘சும்மா பொண்ணு மேல யாராவது ஆசிட் அடிப்பாங்களா?’ என்று நினைக்கும் அளவுக்கு மனதில் இந்த எண்ணம் வேர் விட்டிருக்கிறது. ஆனால், தன்னைக் கண்டுகொள்ளவில்லை என்ற ஒரே விஷயத்துக்காக ஆசிட் வீச்சுக்குப் பலியாகிய பெண்கள் எப்படி இவர்களுக்குப் புரிய வைப்பார்கள், அவள் பெண் என்பதால்தான் பாதிப்புக்குள்ளாகிறாள் என்பதை!

தள்ளுவண்டி உணவுக் கடையும், அதில் வேலை பார்க்கும் இளைஞனும், பிளாட்பார வாழ்க்கையும் மிக இயல்பாகப் படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. படத்தின் முடிவில் சற்றே சினிமாத்தனம் வெளிப்பட்டாலும் படமாக்கப்பட்ட விதமும் கதாபாத்திரங்களின் யதார்த்தமான வாழ்க்கையும் இப்படத்தை முக்கியமான தமிழ்த் திரைப்படமாக்குகிறது. படத்தில் இருவேறு கதைகள் உள்ளன. இரண்டையும் பொருத்தமாக இணைத்து மிக அழகான திரைக்கதையை எழுதியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். விஜய் மில்டனின் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீ, ஊர்மிளா இருவரின் நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளன. பின்னணி இசை இல்லாத பாடல்கள் படத்தின் தனிச்சிறப்பு.

தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான ‘சபாக்’ திரைப்படம், ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான லக்ஷ்மி அகர்வால் என்ற பெண்ணைப் பற்றிப் பேசுகிறது. இந்தப் படத்தில் மாலதி என்ற பெண் தனது ஆசிட் வீச்சில் முகத்தை இழந்த பிறகு தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைக்காகப் போராடுகிறார். ஆசிட் தாக்குதலில் ஈடுபடுகிறவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும், அமில விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காகவும் குரல்கொடுக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதன்மையானது ஆசிட் தாக்குதல். இதைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் உருவாக்கப்பட வேண்டும். அதோடு, இந்த வழக்கில் உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி வர்மா குழு பரிந்துரைத்துள்ளது. இன்று ஊடகங்களின் பெரும் கவனத்துக்கு உள்ளான ‘சபாக்’ திரைப்படம் பேசும் விஷயத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘வழக்கு எண் 18/9’ பேசியிருக்கிறது.

கேளிக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில், உண்மையின் வெளிச்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இதுபோன்ற படங்களை நாம் வரவேற்க வேண்டும். கொண்டாட வேண்டும். அதுவே தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்தும்.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: wrierramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x