

ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன.
அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய மரம்’ புத்தகமும், இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்னவாக இருந்தது என்பதை ‘அழகிய நதி’ புத்தகமும் விரிவாக விவரிக்கின்றன.
அழகிய மரம்
பிரிட்டிஷார் வந்த பிறகுதான் நம் நாட்டில் கல்வி பரவலானது என்பதான பிரமையை பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே தொகுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விரட்டுகிறார் தரம்பால். ஐரோப்பிய நாடுகள் கல்வியில் வளர்ச்சி அடையாதபோதே இந்தியாவில் கல்வியும் கலைகளும் மட்டுமல்லாமல் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது என்பதை நிறுவுவதே தரம்பாலின் அடிப்படை நோக்கம்.
அவரை அந்தப் பணியில் இறக்கிவிட்டவர் மகாத்மா காந்தி. 1931 அக்டோபர் 20-ல் லண்டன் ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபயர்ஸில் உரையாற்றிய காந்தி, “இந்தியாவில் கடந்த 50-100 ஆண்டுகளாகக் கல்வி அழிந்துவருவதற்கு பிரிட்டிஷாரே காரணம்” என்று குற்றஞ்சாட்டினார். காந்தியால் பணிக்கப்பட்ட தரம்பால், பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கியிருக்கிறார். எல்லோரும் நினைப்பதற்கு மாறாக, நாட்டின் அனைத்து திசைகளிலும் கல்வி - பழங்குடிகள் உட்பட - அனைத்து சாதியினருக்கும் வழங்கப்பட்டிருப்பதும், விரும்பியவர்களுக்கு வெளியூர்களிலும் வெளி மாநிலங்களிலும்கூட கல்வி நிலையங்களில் உணவு, இருக்க இடம் தந்து கல்வி கற்பித்ததையும் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளிலிருந்தும்கூட மாணாக்கர்கள் இங்கே வந்து கல்வி கற்றுள்ளனர். கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கைதான் எல்லாப் பகுதிகளிலும் மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது. பெண்கள் வீடுகளிலேயே கல்வி பயின்றார்கள் என்ற அனுமானமும் தரவுகளில் இடம்பெற்றுள்ளது. வகுப்பறைகளுடன் கூடிய பள்ளிக்கூடம், அந்தந்தப் பாடங்களுக்கு ஆசிரியர், தலைமை ஆசிரியர், கல்விக்கான பாடத்திட்டம், பொதுத் தேர்வு முறை, சான்றிதழ் என்று கல்வியை பிரிட்டிஷார் முறைப்படுத்தியதும் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், பொறியியல் என்று கல்வி விரிவடைந்ததும் சாதாரணம் அல்ல. ஆனால், பிரிட்டிஷார் வருவதற்கு முன்பு இந்திய சமூகத்தில் கல்வி வளர்ச்சியே இல்லை என்பது கட்டுக்கதையே என்பதை நிறுவும் இந்நூல் அதன் அடிப்படையில், விவாதத்தைக் கட்டமைக்க உதவுகிறது.
அழகிய நதி
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரிட்டிஷார் வியந்து பொறாமைப்படும் அளவுக்கு இருந்ததை ‘அழகிய நதி’ விளக்குகிறது. வானவியல், பீஜ கணிதம், உலோகவியல், நோய்த்தடுப்பு சிகிச்சை முறைகள், அம்மை நோய்க்குச் சிகிச்சை முறை, காகிதத் தயாரிப்பு, இரும்பு, பித்தளை, செம்பு பயன்பாட்டில் உச்சம், உலகத் தரமான எஃகு தயாரிப்பு, விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறன், கோயில்கள் மற்றும் அணைகள் கட்டுமானத்தில் நிபுணத்துவம், நீர் மேலாண்மை என்று பல விஷயங்களை நுட்பமாக விவரிக்கிறார்.
பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம், வானவியல் பற்றிய குறிப்புகள், சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோளை இந்திய வானவியலாளர்கள் அறிந்திருப்பது, இருபடித் தேற்றம் (பைனாமியல் தியரம்), இந்து அல்ஜீப்ரா, மதராஸ் மாகாணத்தில் கட்டிடத்துக்கு உறுதியையும் வனப்பையும் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட சுண்ணச்சாந்து, இந்தியர்கள் சுயமாகக் காகிதம் தயாரித்த முறை, சணலைப் பயன்படுத்திய விதம், இலை - தழைகளை உரமாகப் பயன்படுத்தி விவசாயத்தில் கண்ட அமோக விளைச்சல், உலகின் எந்தப் பகுதியிலும் உருவாக்கியிராத விதைக் கலப்பைகள், ராமநாயக்கன் பேட்டையில் வெள்ளையர் வருவதற்கு முன்னரே இருந்த இரும்புப் பட்டறைகள், மத்திய இந்தியாவில் இரும்பு உற்பத்திசெய்த முறைகள், தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேனிரும்பு, மேற்கு இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், கிழக்கு இந்தியாவில் வெந்நீரைக் கொண்டு பனிக்கட்டிகளைத் தயாரித்த விந்தை என்று நம்மைக் கண்டு வியந்துள்ளனர் ஐரோப்பியர்கள். கிரேக்கம், லத்தீன், ரோமானிய மக்களோடு ஏற்பட்ட தொடர்பால் நவீன அறிவியல், தொழில்நுட்பங்கள், வானவியல், கணிதம் ஆகியவற்றைக் கற்றிருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, பிறகு மூல நூல்களைப் படித்துப் பார்த்தது இந்தியர்கள் இவற்றில் தனித் திறமையுடன் இருந்ததை உறுதிசெய்துள்ளனர். இந்த இரு புத்தகங்களும் நம்முடைய இரு நூற்றாண்டு வரலாற்றை வேறொரு கண் கொண்டு பார்க்க உதவுகின்றன.
அழகிய நதி & அழகிய மரம்
தரம்பால்
கிழக்குப் பதிப்பகம்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
மொத்த விலை: ரூ.900
தொடர்புக்கு: 044-4200 9603