Published : 22 Feb 2020 10:44 AM
Last Updated : 22 Feb 2020 10:44 AM

360: 300 சிறுகதைகள்

சென்னை புத்தகக்காட்சி கொண்டாட்டத்தை ஒட்டி புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம். தமுஎகச படைப்பாளிகளினுடைய சிறுகதைகளுக்கென பிரத்யேகமாக வந்திருக்கும் இணையதளம். தற்போது 300-க்கும் மேற்பட்ட கதைகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

சுட்டி: https://sirukadhai.com/

நாகர்கோவில், தூத்துக்குடியில் புத்தகக்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்தும் 4-வது புத்தகக்காட்சி நாகர்கோவிலில் உள்ள பயோனியர் முத்து மஹாலில் பிப்ரவரி 27 தொடங்கி மார்ச் 8 வரை நடக்கிறது. 40 அரங்குகளுடன் தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்களும் விற்பனையாளர்களும் பங்கேற்கிறார்கள்.

தூத்துக்குடியிலுள்ள ராமையா மஹாலில் பிப்ரவரி 28 அன்று தொடங்கும் புத்தகக்காட்சி மார்ச் 12 வரை நடக்கிறது. 10% தள்ளுபடியில் புத்தக வேட்டையாடலாம்.

90 வயது வாசகர்

கவிஞர் கண்டராதித்தன் தன்னை 15 வருடங்களாகத் தொடர்ந்து சந்திக்கும் 90 வயது வாசகர் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதிய குறிப்பு இது: சங்க இலக்கியம், கம்ப ராமாயணம், மகாபாரதம் குறித்தெல்லாம் பேச, நான் அவருக்குச் சமகால இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்தினேன்.

ஆரம்பத்தில் என்னிடமிருந்த நூல்களை வாசிக்கக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அவர் வாசிப்பு வேகத்துக்கு என்னிடம் நூல்கள் இல்லை என்பதால், நண்பர் காலபைரவன் குறித்தும், அவரிடம் இருக்கும் மிகச் சிறந்த நூல்கள் அடங்கிய நூலகம் குறித்தும் அறிமுகப்படுத்தினேன். நேற்று காலபைரவன் வீட்டின் படியில் அமர்ந்திருந்த குப்புசாமி ஆசிரியரைப் பார்த்ததும் நலம் விசாரித்தேன்.

“வீட்டுக்கு நடந்துசெல்ல முடியவில்லை, யாராவது வருவார்களா எனக் காத்திருக்கிறேன்” என்றார். “நான் அழைத்துச்செல்கிறேன்” என்றபடி, காலபைரவன் நூலகத்திலிருந்து அவர் பெற்றுச்செல்லும் நூல்களைப் பார்த்தேன். ‘பஷீர் நாவல்கள்’ முழுத் தொகுப்பும், காலித் ஹுசைனியின் ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ நாவலும் பையில் இருந்தது. காலபைரவன் நூலகத்தின் நிரந்தர வாசகர் அவர். “சார், உங்களுக்கு என்ன வயதாகிறது?” எனக் கேட்டேன். “கடந்த மாதம்தான் 90 முடிந்தது, 91 தொடக்கம்” என்றார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x