Published : 16 Feb 2020 10:24 AM
Last Updated : 16 Feb 2020 10:24 AM

வெண்ணிற நினைவுகள்: கிராமத்தின் குரல்

எஸ்.ராமகிருஷ்ணன்

கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை அவரது மகள் தாரணியின் இயக்கத்தில் சமீபமாகக் கண்டேன். மிகச் சிறப்பாக நாடகமாக்கியிருந்தார்கள். 40 ஆண்டுகள் கடந்த பிறகும் நாடகத்தில் இடம்பெற்ற வசனங்களும் நிகழ்ச்சிகளும் அப்படியே இன்றைய சூழலுக்குப் பொருந்துவதாக இருந்தன. அந்த நாடகத்தை கோமல் இயக்கத்தில் மதுரையில் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தை 1981-ல் இயக்குநர் கே.பாலசந்தர் திரைப்படமாக்கினார். படத்தின் பலமாக கோமலின் அற்புதமான வசனங்கள். நாட்டுநடப்பை, சாதிய அரசியலை சாட்டையடியாக விமர்சித்திருப்பார்.

தண்ணீர் பிரச்சினை என்பதைப் பெண்களின் பிரச்சினையாக மாற்றிவிட்டது பண்பாட்டு மோசடி. தண்ணீர் கொண்டுவர வேண்டியது பெண்களின் வேலை. ஆண்கள் தண்ணீர்ப் பானை சுமப்பது அவமானம் என்ற மனநிலை இன்றும் கிராமத்தில் இருக்கிறது. பெருநகரிலும் தண்ணீர் லாரியின் பின்னே ஓடுபவர்களில் 90% பெண்களே.

‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் இடம்பெற்ற அத்திப்பட்டி கிராமம் ஒரு குறியீடாகவே மாறியுள்ளது. அரசு அலுவலர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அத்திப்பட்டிக்கு மாற்ற வேண்டுமா என இன்றைக்கும் கேட்கிறார்கள். கரிசல் நிலத்தின் கதையை இதுவரை சினிமாவில் அழுத்தமாக யாரும் சொன்னதில்லை. கரிசல் ஆயிரம் கதைகளின் விளைநிலம். கி.ராஜநாராயணனும் கு.அழகிரிசாமியும் பூமணியும் தொடங்கி வைத்த கரிசல் இலக்கியத்தை நாங்கள் முன்னெடுத்துப்போகிறோம் என்பதே நிஜம். படத்தின் தொடக்கக் காட்சியில், கொதிக்கும் வெயிலில் இடுப்பிலும் தலையிலும் பானைகள் ஏந்தித் தண்ணீர் கொண்டுவரும் சரிதா, பனைமரத்தின் நிழலில் ஒதுங்கி கால்சூட்டைத் தணித்துக்கொள்வார். அக்காட்சியை மறக்கவே முடியாது. அதுதான் கரிசலின் வாழ்க்கை.

தமிழகத்தின் வேறு எந்த ஊரையும்விட சென்னையில்தான் தண்ணீர் விற்பனை மிக அதிகமாக உள்ளது. சென்னையின் நீர் ஆதாரங்களாக இருந்த குளங்கள், ஏரிகள் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. ‘லேக் வியூ’ ஏரியாதான் உள்ளது. அந்தப் பகுதியிலிருந்த ஏரி காணாமல்போய்விட்டது. தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை, நீர் வணிகம் குறித்து சினிமா பேசியது குறைவே.

‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் காட்டப்பட்டும் அத்திப்பட்டி போன்ற கிராமங்கள் இன்றும் இருக்கின்றன. வெளியூரிலிருந்து அத்திப்பட்டிக்கு வரும் வெள்ளைச்சாமி, தான் கொண்டுவந்த உணவைச் சாப்பிடுவான். விக்கல் வரும். குடிக்கத் தண்ணீர் கேட்கும்போது, ‘இந்த ஊரில் அடுத்தவன் பெண்டாட்டியைக் கேட்டாக்கூடத் தப்பில்லை. ஆனால், குடிக்கத் தண்ணீர் கேட்கிறது தப்பு’ என்று ஊர்மக்கள் சொல்வார்கள். இதைவிட அழுத்தமாகக் குடிநீர் பிரச்சினையைச் சொல்லிவிட முடியாது.

படத்தில் தண்ணீர் வேண்டி அத்திப்பட்டி மக்கள் மந்திரியிடம் தரும் மனு எப்படி மந்திரியின் பிஏ, கலெக்டர், தாசில்தார் எனக் கைமாறி, குப்பைத் தொட்டிக்குப்போகிறது என்பதைக் கேலியாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இது வெறும் கேலியில்லை; அரசு அதிகாரம் எளிய மக்களின் கோரிக்கைகளை எப்படிக் கையாள்கிறது என்பதற்குச் சிறந்த உதாரணம்.

செவந்தி என்ற கதாபாத்திரத்தில் சரிதா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் வானிலிருந்து அவர் மூக்கின் மீது ஒரு துளி மழை விழுகிறது. மழை அந்த மக்களை எவ்வளவு சந்தோஷப்பட வைக்கிறது என்பதற்கு சரிதா முகத்தில் வெளிப்படும் ஆனந்தமே சாட்சி. மழை பெய்யப்போகிறது என்று ஊரே சந்தோஷமாக ஆடிப்பாடுகிறது. ஆனால், மழை மேகம் கடந்துபோய்விடுகிறது. ‘நாட்டுப்பூக்கள்’ என்ற கவிதைத் தொகுதியில் சுயம்புலிங்கம் மழை கொண்டுபோகும் மேகம் பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதோ மேகங்கள் மழையைக் கொண்டுபோகிறது/ நம்முடைய குளங்கள் வறண்டுவிட்டன/ நம்முடைய பயிர்கள் வாடிவிட்டன/ விடாதே மேகங்களை மடக்கு/ பணிய வை. இதுதான் கரிசலின் மனநிலை. இந்த மனநிலையைக் காட்சி ரூபமாக ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தில் சித்தரித்துள்ளார்கள்.

படத்தில் அத்திப்பட்டி மக்களுக்காக தேனூத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவருகிறான் வெள்ளைச்சாமி, அப்போது ஒரு இளைஞன், “குடிக்கத் தண்ணி கிடைச்சா மட்டும் போதுமா? முகம் கழுவத் தண்ணி வேணுமே” எனக் கேட்கிறான். இதைக் கேட்ட பெரியவர் “முகம் கழுவுற ஆடம்பரத்துக்கெல்லாம் நம்ம ஊர்ல தண்ணி கிடையாது” என்பார். அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் இந்த நிலையை எதிர்கொள்ளப்போகிறது என்பதே நிஜம். தண்ணீர்ப் பிரச்சினையை மட்டும் இப்படம் பேசவில்லை. தீண்டாமையின் அடையாளமாகவுள்ள இரட்டைக் குவளை முறை, மதமாற்றம், சாதிய வேற்றுமை, மூடநம்பிக்கை, விவசாயிகள் கமிஷன் கடைக்காரர்களால் சுரண்டப்படுவது எனக் கிராம வாழ்வின் முக்கியப் பிரச்சினைகள் யாவையும் தொட்டுப் பேசுகிறது.

குடிநீர் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் ஓட்டு போட மாட்டோம் என்று தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள் ஊர் மக்கள். அப்போது ஒருவர் மட்டும் தேர்தல் நாளில் பூத்துக்குள் சென்றுவருகிறார். ஊர் மக்கள் அவரைக் கோவித்துக் கொள்கிறார்கள். அவரோ, “உள்ளே போய் மூணு குவளை நல்ல தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன்” என்கிறார். இதைவிட நிதர்சனமாகத் தண்ணீர் பிரச்சினையைக் காட்டிவிட முடியாது. முடிவில் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க ஊர் மக்களே ஒன்றுகூடி கால்வாய் வெட்டுவதாகத் தீர்மானிக்கிறார்கள். உதவுவதற்கு ஓடிவராத சட்டமும் அதிகாரமும் முறையான அனுமதி பெறாமல் மக்கள் கால்வாய் வெட்டக் கூடாது என்று தடுப்பதற்காக ஓடோடி வருகிறது. இனி, இந்த மண்ணில் வாழ முடியாது என மக்கள் ஊரைவிட்டுப் போகிறார்கள். ஆனால், மண்ணை விட்டுப்போக மனம் இல்லாமல், ஏரிக்கரைக்கு வந்து, ‘மழை வந்துவிடுமா’ என வானை ஏறிட்டபடியே நிற்கிறாள் செவந்தி. அந்தக் காத்திருப்பு முடிவில்லாதது. அது செவந்தியின் காத்திருப்பு மட்டுமில்லை!

‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படம் மிகக் குறைந்த பொருட்செலவில் எளிமையாக, அசலாக, தென்மாவட்ட கிராம வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளது. கூரைவீடுகள், புழுதி படிந்த வீதிகள், வறண்ட கரிசல் நிலம், ஒற்றையாடையுடன் உலவும் மனிதர்கள் என மிக யதார்த்தமாகப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் சினிமா செல்ல வேண்டிய பாதை இதுவே.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: writerramki@gmail.comஒ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x