Last Updated : 16 Feb, 2020 10:22 AM

 

Published : 16 Feb 2020 10:22 AM
Last Updated : 16 Feb 2020 10:22 AM

சாரு நிவேதிதாவால் பெருமாள்முருகனாக முடியவில்லை ஏன்?

சமீபத்தில் சாரு நிவேதிதா ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்: “விமர்சிக்கப்பட்டதாலும் அச்சுறுத்தப்பட்டதாலும்தானே பெருமாள்முருகன் இன்று சல்மான் ருஷ்டி அளவுக்குப் புகழ்பெற்றார்? வேறு என்ன காரணம்? ஒரு சுரணையுள்ள சமூகத்தில் என்னுடைய ‘காமரூப கதைகள்’ நாவலைத் தடைசெய்திருப்பார்கள். அதன் மூலம் நான் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெருமாள்முருகனைப் போல் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பேன். அப்படிப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட நாவல் அது!” இதே பொருள் பொதிந்த கூற்றுகளை அவருடைய எழுத்து சார்ந்து பேச நேர்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களில் சாரு வெளிப்படுத்தியிருக்கிறார். உண்மையில், ஏன் பெருமாள்முருகனைப் போல, சல்மான் ருஷ்டியைப் போல சாருவின் நாவல்களுக்கு எதிராக சமூகம் வெகுண்டெழவில்லை?

வட்டாரம், சாதிய வாழ்க்கையின் அவலங்களைப் பதிவுசெய்வது பெருமாள்முருகனுடைய பெரும்பாலான படைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. எனவே, அவற்றில் திட்டவட்டமான நிலமும் சாதியும் வந்துவிடுவது தவிர்க்க முடியாததாகிறது. பிராமணரல்லாத, தலித்தல்லாத ஆதிக்க சாதிகளுடன்தான் அவருடைய படைப்புகள் உரையாடுகின்றன. பெருமாள்முருகனைப் பெரும் சர்ச்சைக்குள் தள்ளிய ‘மாதொருபாகன்’ நாவலின் களம், அவர் வாழும் சமூகத்துக்கு உள்ளே நிகழ்வதாக இருக்கிறது. அதனால்தான், அந்தச் சர்ச்சையின்போது பெருமாள்முருகனின் சாதி தவிர்க்க முடியாத அங்கமானது. ஆக, ‘மாதொருபாகன்’ பிரச்சினையின்போது உள்ளேயிருந்து விமர்சிப்பவராக பெருமாள்முருகன் பார்க்கப்பட்டார். அதாவது, அவர் யாருடன் உரையாடல் நிகழ்த்த விரும்பினாரோ அந்தச் சமூகத்தினரிடமிருந்தே எதிர்ப்பைப் பெறுபவராக இருந்தார்.

சமூக எதிர்ப்பு எப்போது சாத்தியம்?

ஒரு சமூகம் எப்போது எதிர்வினையாற்றும் என்றால், அந்தச் சமூகத்துக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ அது தன்னை அடையாளம் காணும்போதுதான். தனக்குத் தொடர்பில்லாத அல்லது தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாத இடத்தில் எதிர்வினைக்கான சாத்தியம் உருவாக வாய்ப்பே இல்லை, இல்லையா?

பெருமாள்முருகனும் சல்மான் ருஷ்டியும் ஏன் அச்சுறுத்தப்பட்டார்கள் என்பதற்கு, அவர்கள் இருவரும் எந்தச் சமூகத்தால் அச்சுறுத்தலுக்கு ஆளானார்களோ அந்தச் சமூகம் அவர்களுடைய எழுத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொண்டது என்பதுதான் முதன்மையான காரணமாக இருக்க முடியும். யு.ஆர்.அனந்தமூர்த்திக்கும் அதுதான் நேர்ந்தது. பிராமணரான அவருடைய ‘சம்ஸ்காரா’ நாவலானது பிராமண சமூகத்தைக் கடுமையாக விமர்சித்தது. எனவே, பிராமண சமூகம் அவரை எதிர்த்தது; இன்னொருபுறம் விவாதித்தது. இதுபோன்ற எதிர்ப்புகளுக்கான சமீபத்திய உதாரணமாக டி.எம்.கிருஷ்ணாவை எடுத்துக்கொள்ளலாம். பிராமண சமூகத்தைச் சேர்ந்த அவர், பிராமணர்களின் கலை வடிவமாகப் பார்க்கப்படும் கர்னாடக சங்கீதத்தின் வழியாகவே அவர் பிராமணியத்துக்கு எதிரான உரையாடலை முன்வைத்தார். அவர் உரையாட விரும்பிய சமூகத்தவராக பிராமணர்கள் இருந்தார்கள். அதுதான், டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராக பிராமணர்கள் திரளவும் விவாதிக்கவும் காரணமானது.

சாரு நிவேதிதா யாருடன் உரையாடுகிறார்?

இப்போது சாருவிடம் வருவோம். அவருடைய கூற்றில் வரும் சுரணையுள்ள சமூகம் எது? இதே கேள்வியை நாம் வேறு விதமாகக் கேட்டுக்கொள்வோம்: சாருவின் எழுத்துகள் எந்தச் சமூகத்துடன் உரையாட விரும்புகின்றன அல்லது சாருவின் எழுத்துகளோடு எந்தச் சமூகம் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்?

சாரு, எழுத்துக்கு வெளியேயும் உள்ளேயும் தன்னை யாராக அடையாளப்படுத்திக்கொள்கிறார் என்று கேள்வி எழுப்பினால், அது விடை காண முடியாத ஒரு இடத்துக்கு இட்டுச்செல்லும். அவர் திட்டவட்டமாக எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடும் தன்னை எழுத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, அவரிடம் உள்வட்ட உரையாடல் கிடையாது. மாறாக, அடையாளமழித்தல் எனும் உத்தியைத் தேர்ந்தெடுத்தார். சாரு தன்னுடைய ‘ஸீரோ டிகிரி’ நாவலை எந்த அத்தியாயத்திலிருந்து வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பார். ‘ராஸலீலா’ நாவலின் முதல் பகுதி தவிர்த்து, பிற பெரும்பாலான படைப்புகள் இப்படியான சிதறுண்ட உத்தியையே கொண்டிருக்கின்றன. அது ஒரு வகையில் கதை என்பதை அழிப்பதோடு, அடையாளத்தையும் அழித்து விடுகிறது; பொதுத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது. ‘நான்லீனியர்’, ‘பின்நவீனத்துவம்’, ‘ஆட்டோஃபிக்‌ஷன்’ போன்ற உத்திகளை சாரு கையாளும்போது, அங்கே அடையாளமழித்தலை நிகழ்த்திவிடுகிறார். ‘சாரு நிவேதிதா’ என்ற புனைபெயர் தேர்வைக்கூட அவரது அடையாள மழித்தலுக்கான செயலாக வாசிக்க இடம் உண்டு.

அடையாளமழிக்கப்பட்ட கதாபாத்திரங்கள்

சாருவின் படைப்புகளில் வரும் இத்தகைய அடையாளமழிக்கப்பட்ட கதாபாத்திரங்கள் சமூகப் பாத்திரங்களாக இல்லாமல் தனிமனிதர்களாக இருக்கிறார்கள். அதாவது, சாருவின் பாத்திரங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஐரோப்பாவில் விட்டாலும், ஆப்பிரிக்காவில் விட்டாலும் அவர்களால் அந்த நிலத்தில் உயிர்பெற்றுவிட முடியும். அவர்கள் எல்லோருக்குமானதான பொதுவான தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான தன்மையைக் கொண்டிருக்கும் இந்தப் பாத்திரங்களோடு ஒரு வாசகர் தனிநபராக அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, சமூகநபராக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. தனிநபர்களாக அடையாளப்படுத்துதல்தான் சாத்தியம் எனும்போது, பெருந்திரளான சமூக எதிர்ப்பு எப்படிச் சாத்தியமாகும்?

உள்ளடக்கரீதியாக சாரு கையாளும் விஷயங்களுக்குள் செல்வதற்காக அவருடைய பிரதான பேசுபொருளான காமத்தை எடுத்துக்கொள்வோம். தமிழ்ச் சமூகத்தில் காமம் சார்ந்த விஷயங்களுக்கு இருக்கும் தடைகளைப் பற்றியும், அது உருவாக்கும் மன இறுக்கம் பற்றியும், அதிலிருந்து விடுபடுவது குறித்து தமிழ்ச் சமூகம் விவாதிக்க வேண்டும் என்பது பற்றியும் அவருடைய படைப்புகள் அக்கறை கொள்கின்றன. படைப்புகளுக்கு வெளியே இலக்கியக் கூட்டங்களிலும் பொதுவெளிகளிலும் இதே கருத்தை முன்வைப்பவராக சாரு இருக்கிறார். அவருடைய சமீபத்திய உரையில்கூட, தனது படைப்புகள் பேசும் சமூகம் சாத்தியமாகிவிட்டால் தான் எழுதுவதையே விட்டு விடுவேன் என்று பேசினார். தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் உருவாக்கும் இறுக்கத்துக்குப் பிரதான காரணமாக மதம், சாதி அல்லது குடும்பம் எனும் அமைப்பு இருக்கிறது. தனிநபர் தளத்தில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் இந்த அமைப்புகளுக்குள் வரும்போதுதான் இறுக்கம் கொண்டுவிடுகிறது. இறுக்கத்துக்குக் காரணமான இந்த மதம், சாதி, குடும்ப அமைப்புகளின் சிக்கலான இடத்துக்குள் அடையாளமற்று இருக்கும் சாருவின் பாத்திரங்களால் செல்ல முடிவதில்லை.

வெளித்தள்ளும் அணுகுமுறை

சாரு குறிப்பிடும் அந்தச் சுரணையுள்ள சமூகம் என்பது சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகம் என்பதாகப் பார்க்க முடியுமா? அதாவது, சாருவினுடைய எழுத்துகளோடு ஒரு வாசகர் தன்னை தமிழராக அடையாளப் படுத்திக்கொள்ள முடியுமா? சென்னைப் புத்தகக்காட்சியை ஒட்டிய ஒரு மணி நேர உரையில், தமிழ்ச் சமூகம் மீதான சில குற்றச்சாட்டுகளை சாரு முன்வைத்தார். ‘தமிழ்ச் சமூகமே ஒரு மென்டல் அசைலம்’, ‘சினிமா மனோபாவத்தில் பத்திரிகையாளர்கள், வாசகர்களெல்லாம் அநாகரிகமாக என்னை அணுகுகிறார்கள்’, ‘எழுத்தாளருக்குக் கிடைக்கும் ராயல்டியைவிட இஸ்திரி போடும் தொழிலாளி அதிகமாகச் சம்பாதிக்கிறார்’, ‘சென்னைப் புத்தகக்காட்சியில் நான் வாங்குவதற்கு ஒரு புத்தகம்கூட இல்லை’, ‘கஜுராகோ குறித்தெல்லாம் எழுதுவதற்கான சமூகம் இது அல்ல’ – இந்தக் கூற்றுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமூகத்தினரை வெளித்தள்ளுவதாக இருக்கிறது அல்லது அந்தச் சமூகங்களுக்கு வெளியே சாரு தன்னை இருத்திக் கொள்வதாக இருக்கிறது.

தங்களை முற்றிலுமாக ‘தனிநபர்’களாகப் பாவித்துக் கொள்பவர்களும், சமூகக் குழுமங்களோடு உரையாடுவதற்கு ஏதுமில்லை என்று நினைப்பவர்களுமே சாருவோடு அடையாளப்படுத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு எனலாம். இங்கிருந்து அவருடைய எழுத்தை அணுகினால் அது தமிழ்நாட்டின் எந்த ஒரு சமூகத்தையும் சீண்டிப்பார்க்காத இடத்திலிருந்து உரையாடுகிறது என்ற இடத்துக்கும் நாம் வரலாம், இல்லையா?

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x