Published : 15 Feb 2020 08:36 AM
Last Updated : 15 Feb 2020 08:36 AM

360: காதலர் தினக் கொண்டாட்டம்

காதலர் தினக் கொண்டாட்டம்

அட்டைப்பட வடிவமைப்பில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் சந்தோஷ் நாராயணன், பதிவுத் திருமணம் செய்துகொண்டவர். அவர்களிடம் மணக்கோலத்தில் புகைப்படம் கிடையாதுபோல. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நண்பரின் திருமண விழாவில் மணக்கோலப் புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்கள். ‘காயாம்பூ முன்னிலையில் அம்மா அப்பா கல்யாணத்தை போட்டோ எடுத்தது அபிநந்தன். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்’ என்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார் சந்தோஷ் நாராயணன். சந்தோஷ்-ஷர்மிளா தம்பதியருக்குக் காதலர் தின வாழ்த்துகள்டோய்!

ஜப்பானில் கண்மணி

எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு ‘களரி’ விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஜப்பானிய தமிழ்ச் சங்கம். ஜப்பானில் தான் சுற்றித்திரிந்த இடங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார் கண்மணி குணசேகரன். அதில் ஜப்பானின் பாரம்பரிய உடையணிந்த பெண்களுடன் அசகுசா கோயிலில் எடுத்த இந்தப் புகைப்படம் சூப்பர் ஹிட்.

புதுக்கோட்டை, விருத்தாசலம், காரைக்குடியில் புத்தகக்காட்சி

தடயம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 2-வது புத்தகக்காட்சி விருத்தாசலம் மேலக்கோட்டை வீதியிலுள்ள ராஜராஜேஸ்வரி ஹாலில் பிப்ரவரி 14 தொடங்கி பிப்ரவரி 23 வரை நடக்கிறது. அரங்கு எண் 3-ல் ‘இந்து தமிழ்’ வெளியீடுகள் கிடைக்கும்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 4-வது புத்தகக்காட்சி புதுக்கோட்டையிலுள்ள நகர்மன்றத்தில் பிப்ரவரி 14 தொடங்கி
பிப்ரவரி 23 வரை நடக்கிறது.

காரைக்குடியிலுள்ள கம்பன் மணிமண்டபத்தில் பிப்ரவரி 7 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி பிப்ரவரி 16 வரை நடக்கிறது. அரங்கு எண் 1-ல் ‘இந்து தமிழ்’ வெளியீடுகள் கிடைக்கும்.

திருநெல்வேலியில் ஒரு புது முயற்சி

திருநெல்வேலியில் வெற்றிகரமாகப் புத்தகக்காட்சி நடந்து முடிந்திருக்கிறது. அங்கே பல புதிய முயற்சிகளை விழா ஏற்பாட்டாளர்கள் முன்னெடுத்திருந்தார்கள். அதில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது, தொடர் புத்தக வாசிப்பு. கல்லூரி மாணவர்களிடம் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட வாசிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கும் விதமாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தொடர் புத்தக வாசிப்பில் ஈடுபட்டனர்.

*****************************************************************

தமிழ் எழுத்தாளர்கள் ஏன் விமர்சனம் என்ற பெயரில் சக எழுத்தாளர்கள் மீது பாய்ந்து பிடுங்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடிவதில்லை. குப்பை, முட்டாள், அபத்தம், படித்துவிட்டு வா என்பது போன்ற சொற்பிரயோகங்கள் கடும் எரிச்சலூட்டுகின்றன. ஏதேதோ தனிப்பட்ட விவகாரங்களையும் கோபதாபங்களையும் விமர்சனம் என்ற பெயரில் இறக்கி வைப்பதுபோலத்தான் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு வந்து பாருங்கள். வாழ்வைத் தீர்மானிக்கும் விஷயங்களில்கூட அவ்வளவு கூர்மையாக, நாகரிகமாக, பேச வேண்டியதை மட்டும் பேசுகிறார்கள். ஒருபோதும் தனிப்பட்ட நபர்களை இழிவுபடுத்துவது அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. ‘மை லேர்ண்ட் ஃபிரண்ட்’ (கற்றறிந்த நண்பர்) என்று எதிர்த்தரப்பு வழக்குரைஞரை விளித்தே விவாதிப்பார்கள். கற்றறிந்த எழுத்தாளர் நண்பர்கள் கோர்ட் விசிட் அடிக்கவும், விவாதங்களைக் கவனிக்கவும் நான் ஏற்பாடுசெய்யத் தயார்.

- இரா.முருகவேள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x