Published : 15 Feb 2020 08:34 AM
Last Updated : 15 Feb 2020 08:34 AM

நூல்நோக்கு: புகழ் பெற்ற கடற்போர்கள்

புகழ் பெற்ற கடற்போர்கள்
வி.என்.சாமி
வில்லாபுரம்,
மதுரை - 625012.
தொடர்புக்கு: 96297 61984
விலை: ரூ.600

கடற்படை எப்போது தோன்றி வளர்ச்சி பெற்றது, இந்தியாவின் கடற்படை வரலாறு எப்படிப்பட்டது என்பதில் தொடங்கி போர்க் கப்பல், கடற்போர் பற்றிய பின்னணி என விரிவாக எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி. வரலாற்றில் முதல் கடற்போர் பற்றியும், தமிழக வரலாற்றில் கடற்போர் பற்றியும் எழுதியிருப்பதும், உலகின் புகழ் பெற்ற கடற்போர்களைப் பற்றிய தகவல்களும் சுவாரஸ்யம் கொண்டிருக்கின்றன.

**********************

மில்டன் வாழ்க்கை
சாமுவேல் சான்சன்
தமிழில்: வான்முகில்
மீனா கோபால் பதிப்பகம்
ஆதம்பாக்கம்,
சென்னை-88
தொடர்புக்கு:
044-22533667
விலை: ரூ.300

சாமுவேல் ஜான்சன், ஆங்கில இலக்கியத்துக்கு அகராதியியலாளராக மட்டுமின்றி வாழ்க்கை வரலாற்றாசிரியராகவும் பெரும் பங்களித்தவர். 52 கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜான்சனின் திட்டத்தில் 23 மட்டுமே நிறைவேறியது. ‘இழந்த சொர்க்க’த்தையும், ‘மீண்ட சொர்க்க’த்தையும் எழுதிய ஜான் மில்டனின் வாழ்க்கை வரலாறு அவற்றில் புகழ்பெற்றது. ஆங்கிலப் பேராசிரியரான வான்முகில், கிரந்த எழுத்துகள் தவிர்க்கப்பட்ட தனித்தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

*************************************

நேர்மையின் பயணம்
பா.கிருஷ்ணன்
கிழக்கு பதிப்பகம்
ராயப்பேட்டை, சென்னை–14.
தொடர்புக்கு:
044 – 42009603
விலை: ரூ.400

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. கரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாலகுருசாமி பின்னாட்களில் முக்கியமான கல்வியாளராகவும் அறிவியலாளராகவும் உருவெடுத்தவர். நாற்பது ஆண்டுகளாக ஊடகத் துறையில் பயணித்துவரும் பா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் பாலகுருசாமியின் முழுமையான சித்திரத்தை வழங்குகிறது.

***********************************************

வல்லினம் பரிசுக் கதைகள்
வல்லினம் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை-42.
தொடர்புக்கு:
90424 61472
விலை: ரூ.130

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பத்திரிகை ‘வல்லினம்’, கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தும் சிறுகதைப் போட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் இவை. குடும்ப அமைப்புகள், அதிகாரத் திணிப்புகளால் சிறைபட்டுக் கிடக்கும் வாழ்வைச் சுதந்திரமாக்க விரும்பும் மனிதர்கள் கதைகளின் நாயகர்களாக இருக்கிறார்கள். மலேசிய தமிழ் இலக்கியத்தின் புதிய முகங்கள் அந்த மண்ணிலிருந்து எதைப் பதிவுசெய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவுகிறது.

**********************************************

அயல் பெண்களின் கதைகள்
தமிழில்:
எம்.ரிஷான் ஷெரிப்
வம்சி புக்ஸ்
டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606601.
தொடர்புக்கு: 94458 70995
விலை: ரூ.160

சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் கதைகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் எம்.ரிஷான் ஷெரிப். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான குரல் இந்தக் கதைகளிலிருந்து வெளிப்படுவது குறித்து முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தத் தொகுப்பைக் கொண்டுவருவதன் நோக்கமாகவும் இருக்க முடியும். இப்படியான தொகுப்பு சாத்தியமாவது இதுதான் முதன்முறை.

************************************

நம் வெளியீடு

காயமே இது மெய்யடா
போப்பு
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.160

நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x