360: வைரலான வாசகி

360: வைரலான வாசகி
Updated on
1 min read

துயர்மிகு நினைவுகள்

ஈழப்போர் தொடர்பாக சுமார் 35 ஆண்டு காலமாக வரைந்த ஓவியர் புகழேந்தியின் 102 ஓவியங்கள் இப்போது ‘போர் முகங்கள்’ என்ற பெயரில் ‘தோழமை’ வெளியீடாக நூலாக்கம் பெற்றிருக்கின்றன.

இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட முறை தனிநபர் ஓவியக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், மலேசியா, சிங்கப்பூர் என 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. “வெளிநாடுகளில் இந்த ஓவியங்களையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். நம்முடன் ஆர்வத்தோடு உரையாடுகிறார்கள். தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துவந்து அவர்கள் கேட்கும் மிகப் பெரிய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் சொல்கிறார்கள். அயல் நாட்டினரிடம் ஈழப்போர் தொடர்பான அறிதலும் புரிதலும் இருப்பதால் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது” என்றார் புகழேந்தி. ஒரு குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்து, ஒரு குறிப்பிட்ட போராட்டம் சார்ந்து இவ்வளவு ஓவியங்களைத் தொடர்ந்து வரைவது ஓர் அபூர்வமான நிகழ்வுதான். இன்குலாப், காசி ஆனந்தனின் கவிதை வரிகளோடு துயர்மிகு நினைவுகளைத் தாங்கி நிற்கின்றன புகழேந்தியின் ஓவியங்கள். தொடர்புக்கு: 94443 02967

வியாசரின் முழு விருந்து

கிஸாரி மோகன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து வியாசரின் மூல பாரதத்தை முழுமையாக தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் அருட்செல்வப் பேரரசன். ‘முழு மஹாபாரதம்’ என்ற இணையதளத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். கோவையில் பிப்ரவரி 1 அன்று அவருக்கு விழா எடுத்துக் கௌரவித்தது ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயாகோகா சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் டி.பாலசுந்தரம், பி.ஏ.கிருஷ்ணன், ஜெயமோகன், ஜா.ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தார்கள். வியாசரின் முழு விருந்தையும் வாசிக்க:

https://mahabharatham.arasan.info/

தமிழுக்கு வருகின்றன மார்க்ஸிய செவ்வியல் நூல்கள்

கிறிஸ்டோபர் காட்வெல், தாரிக் அலி, எரிக் ஹாப்ஸ்பாம், லூயி அல்தூசர் உள்ளிட்டவர்கள் எழுதிய 15 மார்க்ஸிய செவ்வியல் நூல்களை, ந.முத்துமோகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு சுமார் 4,000 பக்கங்களில் வெளியிடவிருக்கிறது ‘என்சிபிஹெச்’ பதிப்பகம். ரூ.5,000 மதிப்புள்ள இந்த நூல்கள் முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.3,000 விலைக்குக் கிடைக்கும். நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் அனைத்து கிளைகளிலும், புத்தகக்காட்சி அரங்குகளிலும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வைரலான வாசகி

பரவசத்தோடு புத்தகத்தை எடுத்துப் பார்க்கும் இந்த சேரன்மகாதேவி பாட்டியின் புகைப்படம், சென்ற வாரம் முழுவதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தது. 76 வயது நிரம்பிய கணபதியம்மாளுக்குப் புத்தக வாசிப்பு ரொம்பப் பிடிக்குமாம். செய்தித்தாளில் புத்தகக்காட்சி நடப்பது குறித்த செய்தி அறிந்து, பாளையங்கோட்டைக்கு நடையைக் கட்டிவிட்டார். பாட்டியின் வாசிப்பு ஆர்வத்தைப் பாராட்டும் விதமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று விழா மேடையில் கெளரவப்படுத்தினார்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in