விடுதலை என்பது...

விடுதலை என்பது...
Updated on
1 min read

உண்மை என்பது பாதையற்ற நிலம். நிறுவனங்கள், சடங்குகள், தத்துவ ஞானம், உளவியல் உத்திகள், மதங்கள், கோட்பாடுகளின் வழியே அங்கே வர இயலாது. உறவுகள் என்னும் கண்ணாடி வழியே, தனது மனதினுள் என்ன இருக்கிறது என்பதுபற்றிய புரிந்து கொள்ளலின் வழியே, அவதானிப்பின் வழியே இங்கே வர முடியும். அறிவுபூர்வமான அலசல்களின் வழியாகவோ உள்முகத் தேடல் வழியாகவோ வர இயலாது.

மதம், அரசியல், ஆகிய பாதுகாப்பு அரண்களை மனிதன் தனக்குள் கட்டமைத்துக்கொண்டிருக்கிறான். இவை குறியீடுகள், கருத்துக்கள், நம்பிக்கைகளாக வெளிப்படுகின்றன. இந்தப் படிமங்களின் சுமை மனிதனின் சிந்தனை, உறவுகள், அன்றாட வாழ்க்கை ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தப் படிமங்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. மனிதர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.

வாழ்வுகுறித்த கண்ணோட்டம் மனதில் நிலைபெற்றிருக்கும் கோட்பாடுகளால் வடிவமைக்கப்படுகிறது. பிரக்ஞையின் உள்ளடக்கமே மொத்த இருப்பையும் தீர்மானிக்கிறது. மரபிலிருந்தும் சூழலிலிருந்தும் பெறும் பெயர், வடிவம், மேலோட்டமான பண்பாடு ஆகியவையே தனித்தன்மை என்று கருதப்படுகிறது. மனிதனின் தனித்தன்மை இந்த மேம்போக்கான அம்சத்தில் இல்லை. தன் பிரக்ஞையின் உள்ளடக்கத்திலிருந்து பெறும் முழுமையான சுதந்திரத்தில் உள்ளது. இந்த உள்ளீடு அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது.

விடுதலை என்பது எதிர்வினை அல்ல. தேர்வு அல்ல. தேர்ந்தெடுக்கும் வசதி தனக்கு இருப்பதாலேயே தான் விடுதலை பெற்றிருக்கிறோம் என்பது மனிதனின் பாவனை. விடுதலை என்பது தூய அவதானிப்பு. திசைகள் அற்ற, தண்டனை அல்லது பரிசுகள்குறித்த எதிர்பார்ப்புகள் அற்ற அவதானிப்பு. விடுதலை என்பது நோக்கம் அற்றது. அது மனித பரிணாமத்தின் முடிவு அல்ல. அவன் எடுத்து வைத்த முதல் அடியிலேயே அது இருக்கிறது. தான் விடுதலை அற்றிருப்பதை ஒருவர் தன் அவதானிப்பின் மூலம் உணரத் தொடங்குகிறார். நமது அன்றாட வாழ்வு, அதன் செயல்பாடுகள் ஆகியவைகுறித்த தேர்வுகள் அற்ற விழிப்புணர்வின் மூலம் விடுதலையைக் கண்டறியலாம்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம் மே 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in