Published : 02 Feb 2020 08:05 AM
Last Updated : 02 Feb 2020 08:05 AM

வெண்ணிற நினைவுகள்: உறவுகள் தொடர்கதை!

எஸ்.ராமகிருஷ்ணன்

‘அவள் அப்படித்தான்’ 1978-ல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். ருத்ரய்யா இரண்டே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும், ‘கிராமத்து அத்தியாயம்’ சரியாக ஓடவில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் சினிமா பற்றிப் பேசியபடியே இருந்தார். புதிய முயற்சிகள் குறித்துக் கனவுகள் கண்டார். நான் இரண்டு முறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது தனது புதிய திரைப்படக் கனவு பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆனால், காலம் அதைச் சாத்தியப்படுத்தவில்லை.

‘அவள் அப்படித்தான்’ படத்தில் ஆவணப்படம் இயக்கும் அருணாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதாபாத்திரம் அதன் முன்பு வரை இடம்பெற்றதில்லை. ஆவணப்படம் என்றாலே அரசு விளம்பரப் படம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். முழு நீளத் திரைப்படங்கள் அளவுக்குத் தமிழில் ஆவணப்படங்கள் உருவாக்கப்படுவதில்லை. தேசிய விருது பெற்ற தமிழ் ஆவணப்படங்கள்கூடத் திரையரங்கில் திரையிடப்பட்டதில்லை. இன்றும் சராசரி சினிமா பார்வையாளனுக்கு ஆவணப்படங்கள் பரிச்சயமாகவே இல்லை. இந்தச் சூழலில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு படத்தின் கதாநாயகன் ஆவணப்பட இயக்குநர் என்பதும், அவன் பெண்களின் சுதந்திரம் குறித்த ஆவணப்படம் ஒன்றைத் தயாரிப்பதையும் சினிமாவில் காட்டியது துணிச்சலான முயற்சியே. தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு எடுத்துச்சென்ற படைப்பு என்றே இப்படத்தைச் சொல்ல வேண்டும்.

ரஜினி, கமல் என இரண்டு பெரும் கதாநாயகர்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் படத்தின் மையப்புள்ளி மஞ்சு என்ற பெண் கதாபாத்திரமே. மஞ்சுவின் வெளிப்படையான பேச்சும், தைரியமான செயல்களும் அவளைத் தனித்துவமிக்க பெண்ணாக அடையாளப்படுத்துகின்றன. தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் கவர்ச்சி பொம்மையாக டூயட் பாட மட்டுமே பயன்படுத்தப்பட்ட சூழலில், ருத்ரய்யா நவீன யுகத்தின் அடையாளமாக மஞ்சுவை உருவாக்கியிருக்கிறார். மஞ்சுவாக ஸ்ரீப்ரியா மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

ஆண்களை மஞ்சு வெறுப்பதற்கு அவளது தாயும், அவளுடன் உறவுகொண்ட ஆண்களுமே காரணம். அவளுக்கு உறவுகளில் நம்பிக்கையில்லை. தமிழ்ப் பெண் எவ்வளவு திறமைசாலியாக, அறிவாளியாக இருந்தாலும் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டும் என்று பண்பாடு கட்டாயப்படுத்துகிறது. அதை விலக்கித் தனித்து வாழ முற்பட்ட பெண்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்தார்கள் என்பதே கடந்த கால வரலாறு. ஔவையார் காலம் தொடங்கி நவீன யுகப் பெண் வரை திருமணம்தான் பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடியது.

ஆணின் உறவு சுமையாகிவிடும் என்று பயப்படுகிறாள் மஞ்சு. தானும் அம்மாவைப் போல ஏமாற்றப்பட்டுவிடுவோம் என்று ஜாக்கிரதை உணர்வு கொண்டிருக்கிறாள். அதுதான் அருண் மீதான எதிர்வினையாக ஆரம்பக் காட்சிகளில் வெளிப்படுகிறது. ஆண்களுடன் மட்டுமல்ல; அலுவலகத்தில் வேலைசெய்யும் பெண்களிடமும் அவள் நல்லுறவு கொள்வதில்லை. ஆனால், அருண் கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனதில் இருந்த ஆண் குறித்த பிம்பத்தை மாற்றுகிறான். இன்னொரு பக்கம் தியாகு நடந்துகொள்ளும் விதம், அவளுக்குள் இருந்த ஆண் வெறுப்பை மேலும் உறுதியாக்குகிறது. மஞ்சு, அருண், தியாகு மூவருக்குள் படம் சுழல்கிறது. அதிலும் அவர்களின் உரையாடல்தான் படத்தின் பலம்.

ருத்ரய்யாவின் நட்பு பற்றி கமல்ஹாசன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். “சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர் ருத்ரய்யா. அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாகச் செயல்படும் போராளியாகப் பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி.சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவுக்குச் சீக்கிரத்திலேயே நெருக்கமானார். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரிக் கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்குச் சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களுடைய படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்துபோகும். நாங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். ‘அவள் அப்படித்தான்’ அதன் விளைவே” என்கிறார்.

இந்தப் படத்தைக் கறுப்பு வெள்ளையில் நல்லுசாமி, ஞானசேகரன் இருவரும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் கதை அனந்து. திரைக்கதை எழுதியதில் வண்ணநிலவன், சோமசுந்தரேஸ்வர் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இளையராஜாவின் இசை மிகப் பெரிய பலம். குறிப்பாக, ஜேசுதாஸ் பாடிய ‘உறவுகள் தொடர்கதை’, கமல்ஹாசன் பாடிய ‘பன்னீர் புஷ்பங்களே’ இரண்டும் மறக்க முடியாத பாடல்கள்.

டைட்டில் காட்சியின் பின்புலத்தில் கமலின் குரலில் கதை விவாதம் கேட்கிறது, படத்தின் முடிவுக் காட்சியில் மெரினா ஐஸ் ஹவுஸின் எதிராக காரை நிறுத்தி மஞ்சு இறங்கிக்கொள்கிறாள், கார் வேகமெடுத்துச் செல்கிறது, மஞ்சுவின் உருவம் மெல்ல புள்ளியாய்த் தேய்கிறது. திரும்பவும், கமலின் குரல் ஒலிக்கிறது. இந்த முறை அவர் மஞ்சுவைப் பற்றிச் சொல்கிறார். “மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்துபோனாள். இந்தச் சாவைச் சகித்துக்கொள்ள மஞ்சுவால்தான் முடியவில்லை. அவள் பிறப்பாள், இறப்பாள்; இறப்பாள், பிறப்பாள். அவள் அப்படித்தான்!” அன்றைய தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடவில்லை. ஆனால், இன்று பார்க்கையில் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளும் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ் சினிமா வரலாற்றில் ருத்ரய்யாவின் இடம் என்றும் மாறாதது.

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x