Last Updated : 02 Feb, 2020 08:03 AM

 

Published : 02 Feb 2020 08:03 AM
Last Updated : 02 Feb 2020 08:03 AM

புலம்பெயர் தமிழர்கள் விதைநெல் போன்றவர்கள்!- செல்வம் அருளானந்தம் பேட்டி

யாழ்ப்பாணம் அருகிலுள்ள சில்லாலை கிராமத்தில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்துவரும் செல்வம் அருளானந்தத்தின் ‘காலம்’ இதழ், உலகத் தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இருந்துவருகிறது. துயரார்ந்த தன் கடந்த காலத்தை அங்கதமான மொழியில் எழுதும் இவருடைய எழுத்து அபூர்வமானது. ‘கட்டிடக் காட்டுக்குள்’ கவிதைத் தொகுப்பும், அனுபவக் கதைகளின் தொகுப்பான ‘எழுதித் தீரா பக்கங்கள்’, ‘சொற்களில் சுழலும் உலகம்’ புத்தகங்களும் முக்கியமானவை. புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு, மிகக் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் கனவோடு இவர் கொண்டுவரும் ‘காலம்’ இதழுக்கு இது முப்பதாவது ஆண்டு. இந்தத் தருணத்தில் அவருடன் உரையாடியதிலிருந்து...

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் முதல் தலைமுறை நீங்கள். எப்போது இலங்கையிலிருந்து வெளியேறுகிறீர்கள்?

1980-களில் யுத்தம் காரணமாகத் தமிழர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். இலங்கை அரசு அதைத் திட்டமிட்டுச் செய்தது, வெளியே ஓடட்டும் எண்டு. அதைத் தொடர்ந்து மத்திய கிழக்குக்கோ ஐரோப்பாவுக்கோ போகத் தொடங்கிவிட்டார்கள். அப்படிப் போனதிலே நானும் ஒருவன். நான் முதலில் போனது பிரான்ஸுக்கு. அந்தக் காலத்திலே ஆயிரம் பேருக்கு உள்ளதான் பிரான்ஸில் இருந்திருக்கினம். பிரெஞ்சு மொழி, தொழில்நுட்ப அறிவு என எந்தத் தகுதியும் இல்லாமல் சென்று, அங்கே விழி பிதுங்கி நிண்டது ஒரு பெரிய அனுபவம். எந்தத் திசை எண்டு தெரியாமல், எங்கு போவம் எண்டு தெரியாமல் நின்றம். ரஷ்யாவிலே மூன்று நாள் நிண்டு, பெல்ஜியத்திலே இரண்டு நாள் நிண்டு போய்ச்சேர்ந்தோம். போய்ச் சேராமல் விட்டவர்கள் நிறைய பேர். முற்றுமுழுதாகத் தமிழர்களுடைய வாழ்க்கையிலே அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

பாரிஸில் நீங்கள் வாழ்க்கையைத் தொடரவில்லை, இல்லையா? கனடா சென்றுவிடுகிறீர்கள். என்ன காரணம்?

பாரிஸில் சுதந்திரமாக இருந்தோம் எண்டாலும் இட நெருக்கடி ஒரு பிரச்சினையாக இருந்தது. பத்துப் பதினைந்து ஆக்களோடு சேர்ந்துதான் அறை எடுக்க முடியும். இதைவிட நல்ல வாழ்க்கை அமையும் எண்டு பாரிஸிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு, அங்கிருந்து சுவிட்ஸர்லாந்துக்கு என எங்கெல்லாமோ அலைந்துவிட்டுத்தான் கடைசியில் கனடா சென்றனம். எப்படி களவா பாரிஸுக்கு வெளிக்கிட்டமோ, அதேபோல களவா கனடா வந்தோம். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது கனடாவில் ஒரு மேலான வாழ்க்கை இருக்கிறது என்பதால் அங்கே செல்லத் தொடங்கினம்.

எந்த வகையில் கனடா மேலான வாழ்க்கையைத் தருகிறது?

குடியேறிகளால் கட்டப்பட்ட நாடுதானே கனடா? பிரான்ஸில் நீங்கள் எத்தனை யுகங்கள் இருந்தாலும் நீங்கள் வெளிநாட்டுக்காரர்தான். கனடா அப்படி இல்லை; அது ஒரு பன்மைத்துவக் கலாச்சார நாடு. உங்களுக்குக் குடியுரிமை கிடைத்தால் நீங்கள் கனடாக்காரர்தான்.

நீங்கள் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தபோது குடியுரிமைச் சிக்கல்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கனடாவில் குடியுரிமை என்பது பெரிய பிரச்சினை இல்லை. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுவது இன்றும்கூடச் சிரமமான காரியம். ஆனாலும், அங்கே இருக்கும் சமூகப் பாதுகாப்பு காரணமாக ஆக்கள் இருக்கினம். உங்களுக்கு அங்கே வேலை கிடைக்கும் வரை ஒரு சிறிய தொகையை அரசாங்கம் தந்துகொண்டிருக்கும். ஒரு மனுஷனும் உணவில்லாமச் சாகக் கூடாது எண்டு ஒரு மனிதாபிமான அடிப்படையில் அத்திட்டம் இருக்கிறது.

கனட அரசு தனது குடிமக்களையும் அகதியையும் எப்படி நடத்துகிறது?

யாருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. நீங்கள் நினைத்தால் மந்திரியாக வரலாம். நீங்கள் நினைத்தால் ஒரு ஸ்தாபனத்திண்ட அதிகாரியாக வரலாம். உலகத்துக்கு ஒரு முன்னுதாரண நாடாக கனடா இருக்கிறது. அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் பாகுபாடு கிடையாது. உண்மையில், அகதிகளுக்குக் கூடச் செய்கினம். கனடாவில் இருக்கும்போது அகதியாக உணர்ந்ததில்லை.

பொருளாதாரத் தேவையை ஆரம்ப நாட்களில் எப்படிப் பூர்த்திசெய்தீர்கள்? உங்கள் நாற்பதாண்டு புலம்பெயர் வாழ்வில் என்னென்ன வேலைகளைக் கடந்துவந்திருக்கிறீர்கள்?

நான் பாரிஸ் போனவுடன் பாரிஸில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் துப்புரவுப் பணி கிடைத்தது. அங்குள்ள மக்களால் கைவிடப்பட்ட சாதாரண வேலைகளே கிடைக்கும். துப்புரவுப் பணி, இல்லாட்டால் சமையல் பணி... பிரெஞ்சு கற்றுக்கொண்ட பிறகு, ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் பெரிய ஜூஸ் மிஷினைப் பராமரிக்கும் வேலை கிடைத்தது. கனடாவில் நீங்கள் ஒரு ரெஸ்டாரன்டில் வேலைக்குச் சேர்கிறீர்கள் எண்டால், கொஞ்ச நாளில் நீங்கள் சமையல்காரனாக மாறுவீர்கள். பிறகு, மேனேஜராக வருவீர்கள். ஆங்கில அறிவோடு இருந்தால் பல்வேறு வேலைகளைச் செய்யலாம். நான் ஒரு ரெஸ்டாரன்டிலே மேனேஜராக இருந்தேன். பிறகு, ஹெல்த்கேர் சம்பந்தமாகப் படித்து, அது சம்பந்தமான வேலையில் சேர்ந்தேன். கெட்டிக்காரப் பெடியன்களெல்லாம் பெரிய பெரிய வேலைகளில் இருக்கிறார்கள்.

சுமார் நான்கு லட்சம் தமிழர்களால் கனடாவில் எப்படியான பொருளாதாரம் உருவாகியிருக்கிறது?

தமிழர்களால் பலமான பொருளாதாரம் உருவாகி இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளும் அங்கே இருக்கின்றன. படிக்கலாம், வேலை செய்யலாம், இரண்டு வேலை செய்யலாம். ரியல் எஸ்டேட், சொந்தமாக ரெஸ்டாரன்ட் என்று பெரிய அளவில் முன்னேறியிருக்கிறார்கள். எனது அடுத்த தலைமுறை நான் கற்பனை செய்ய முடியாத இடத்துக்குச் சென்றிருக்கிறார்கள். லொயர்ஸ், டாக்டர்ஸ், பத்திரிகைத் துறைகளில், தொழில்நுட்பத் துறைகளில் இருக்கிறார்கள். ஒரு யுனிவர்சிடி கிடைக்கேயில்ல எண்டுதானே யுத்தம் ஆரம்பிச்சது; இப்போது எல்லா யுனிவர்சிடியிலயும் எங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள்.

மிதமான தட்பவெப்பம் நிலவும் ஒரு நாட்டிலிருந்து குளிர்ப் பிரதேசத்துக்குப் புலம்பெயர்ந்திருக்கிறீர்கள். அங்கே கழித்த ஆரம்ப நாட்களை நினைவுகூர முடியுமா?

பனி எண்டால் அப்போது தெரியாது. விமானம் மாறுவதற்காக ரஷ்யாவில் ஒரு இடத்தில் நிக்கினம். பனி கொட்டியது. இது என்ன எண்டு நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். கனடாவுக்கு நான் வந்தது ஒரு ஓகஸ்ட் மாதம். செப்டம்பரில் கொட்டத் தொடங்கிய பனி மார்ச் மட்டும் இருக்கும். சாமானக் கொண்டு நீங்கள் நடக்க இயலாது. கைகள் சிவந்துபோகும். ஒருமுறை, பஸ்ஸில் சர்ச்சுக்குக் கிளம்பினன். பஸ்ஸில் ஏறினதும் அது சூடாக இருக்கும். பஸ்ஸிலிருந்து இறங்கினதும் கோயிலுக்குப் போகும் முன் செத்துடுவன் எண்டு நினைத்தனன். அவ்வளவு குளிர். அதெல்லாம் சரியான புதிய அனுபவம். பனியில் நிலவு பட்டு வீதியெல்லாம் வெள்ளையாய் இருக்கும். தற்செயலாய்க் கவனம் தவறினீர்கள் எண்டால் விழுந்துவிடுவீர்கள். அப்படியெல்லாம் விழுந்து, எழுந்து, தவழ்ந்து நாங்கள் நிலைபெற்றிருக்கினம்.

புலம்பெயர்ந்ததால் தமிழர்களின் உலகப் பார்வை எப்படி மாறியிருக்கிறது? கலாச்சாரம் தொடர்பான விழுமியங்கள் என்னவாக மாறியிருக்கின்றன?

கலாச்சாரம் எண்டால் அது யாழ்ப்பாணத்தை விடவும் கனடாவில் மோசமாய்ப் போயிட்டது. இங்கே பணம் இருக்கிறது. இன்னும் பெரிதாகச் சடங்குகள் நடத்துகிறார்கள். வெள்ளை ஆக்களை, கறுப்பினப் பெண்களைக் கல்யாணம் செய்கிறது முன்பு இருந்தது. இப்போது நிறைய ஆக்கள் இங்கே வந்த பிறகு, பழைய மாதிரி பேசிச்செய்யும் பழக்கம் வந்துவிட்டது. நிறைய கோயில்கள் வந்துவிட்டன. கோயில்கள் வந்ததும் ஐயர்மார்களைக் கூப்பிட்டுச் சடங்குகளை விரிவாக்குவாங்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை, சீனப் பெண்ணை முடிப்பதற்குப் பதிலாக, சாதி பார்க்காமல் ஏதேனும் தமிழ்ப் பெண்ணைச் செய்தால் நல்லது எண்ட மனநிலையும் இருக்கிறது. பொதுப்பார்வையிலே பிற்போக்குத்தனங்கள் கூடியதாகத்தான் இருக்கிறது. இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்த பிள்ளைகளிடம் வேறு விதமான மாற்றங்கள் வந்திருக்கின்றன. அவர்கள் கனடிய வாழ்வை வெளியிலும், யாழ்ப்பாண வாழ்வை உள்ளுக்குள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வெவ்வேறு தேசங்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களினுடைய உணர்வு எப்படி இருக்கிறது? இன்றும் தமிழர் என்ற அடையாளத்தோடு ஒன்றுபட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

புலம்பெயர் தமிழர்கள் விதைநெல் போன்றவர்கள். தமிழர்கள் எல்லோரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்று நம்புகிறன். பல்வேறு விஷயங்களில் அந்த ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. சென்னை புத்தகக் காட்சியில் நிறைய புலம்பெயர் தமிழர்கள் வந்து நிண்டனர். புலம்பெயர் தமிழர்கள் தரும் நெருக்கடிகள் இலங்கை அரசுக்குத் தலையிடியாகத்தான் இருக்கிறது. புலம்பெயர் தமிழர்களெல்லாம் ஒரே உணர்வோடு இருப்பது மொத்த தமிழ் இனத்துக்கும் பலமாகத்தான் இருக்கும்.

இலக்கியத்தோடு உங்களுக்குப் பரிச்சயம் ஏற்படுவதற்கான முகாந்திரம் எங்கே தொடங்குகிறது? ‘காலம்’ பத்திரிகை தொடங்கிய கதையையும் சொல்லுங்களேன்...

என்னுடைய அம்மா ஒரு பெரிய வாசகி. சின்ன வயதில் பெரும்பாலும் ஜனரஞ்சகமாகவே வாசித்து இருந்தனன். பிரான்ஸ் சென்ற பிறகுதான் சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன் எல்லாம். கனடா சென்று சில ஆண்டுகள் கழித்து, என் அம்மம்மா சாகக் கிடக்கையிலே அவரைப் பார்க்க வந்தனன். இங்கே அண்ணா சாலையில் ஒரு ஹோட்டலில் இருந்தேன். ஒரு இலங்கை நண்பர் என்னை சி.மோகனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் அச்சகம் வைத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் ‘காலம்’ பத்திரிகையைக் கொண்டுவரத் திட்டமிட்டேன்.

அதே காலகட்டத்தில் கனடாவில் புத்தகக்காட்சியையும் நடத்தினீர்கள் இல்லையா?

ஆமாம். திலிப்குமாரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்குப் பணம் அனுப்பினால் புத்தகங்களை அனுப்பித்தருவார். சின்ன இடம் எடுத்து, கொஞ்சம் தமிழ்ப் புத்தகங்கள் வைத்துப் புத்தகக் கண்காட்சி செய்தேன். தமிழ்நாட்டிலிருந்து, இலங்கையிலிருந்து யார் வந்தாலும் கூட்டம் வைத்தோம். 2000-க்குப் பிறகு, ஆப்பிரிக்காவிலிருந்து அ.முத்துலிங்கம் கனடா வந்தார். நண்பர்கள் இணைந்து ‘இலக்கியத் தோட்டம்’ ஆரம்பித்தோம். அது சார்ந்து இங்கே வரும் எழுத்தாளர்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. முழுவதுமாக இலக்கியத்துக்குள் விழுந்திட்டன்.

நீங்கள் அதிகம் எழுதும் எழுத்தாளர் இல்லை. அதுபோக, நெருக்கடியான சூழல் வேறு. இதற்கிடையில் இலக்கியப் பத்திரிகை நடத்துவதற்கு எது உந்துசக்தியாக இருக்கிறது?

அது எனக்குத் தெரியல்லே. விடாமல் செய்கிறன். ஆனால், என்னதான் என்னைக் கொண்டுபோகிறது எண்டு தெரியல்லே. வரமா, சாபமா தெரியல்லே? ‘காலம்’ பத்திரிகைக்கு முன்பாக நிறைய இதழ்கள் தீவிரமாக வந்துகொண்டிருந்தன; புலம்பெயர் அடையாளத்தோடு. தமிழ் எண்டால் அது ஒன்றுதான் என்பதே என்னுடைய எண்ணம். தமிழ்நாடு, இலங்கை, புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் தமிழர்கள் எழுதும் எழுத்துகளையெல்லாம் ஒன்றாகக் கொண்டுவரும் எண்ணம்தான் எனக்கு இருந்தது. தமிழைப் பொதுவாகப் பார்ப்பதுதான் என்னுடைய அடிப்படை நோக்கம்.

கடந்த காலத்தை மறக்க விரும்புவதாக உங்களுடைய நண்பர்களும் உறவினர்களும் சொல்வதாக எழுதியிருக்கிறீர்கள். ஈழ இலக்கியத்தில் பெரும்பாலானவை கடந்த காலத்தைப் பேசுவதாகத்தான் இருக்கின்றன...

யாழ்ப்பாணத்திலே சென்று, “அண்ணன் இந்த முள்ளிவாய்க்காலிலே” எண்டால், “அந்தக் கதைய விடு, வேற கதையைக் கதை” என்பார்கள். ஆனால், மனத்திலே அந்தப் பாடு இருந்துகொண்டிருக்கிறது. காலம் முழுக்க நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டிய பெரிய துயரம் நடந்துவிட்டது. எங்கள் கண்ணுக்கு முன்னால் ஆக்கள் செத்துப்போனது, இயக்கத்துக்குப் போனதைப் பார்த்திருக்கிறோம். ஊரே இல்லாமல்போயிருக்கிறது. சிலர், “ஏன் திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைக் கதைக்கிறீர்கள்?” என்பார்கள். திரும்பத் திரும்பக் கதைப்பதை விடலாம்தான்; ஈழத் தமிழர்களுக்கு ஒரு நல்வாழ்க்கை கிடைத்தது எண்டால். எங்கள் வரலாற்றைக் கதைக்காவிட்டால், எங்கள் பிள்ளைகளிடம் சொல்லாவிட்டால் நாங்கள் வெட்கங்கெட்ட இனமாயல்லப்போவம்.

இலங்கையில் வாழும் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் தங்களுடைய கடந்த காலச் சுமையிலிருந்து எப்போது மீள முடியும் என்று நினைக்கிறீர்கள்?

ஏதாவது விடிவு கிடைக்க வேண்டும். காலப்போக்கில் மறக்கலாம். காலம் துயரங்களை மறக்கச்செய்யும்தானே? ஆனால், திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை எண்டு நினைக்கிறன். ஒரு பழமொழி உண்டு: ‘பஞ்சம் போவும், பஞ்சத்தில் பட்ட பாடு போவாது.’

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x