அதிகாரத்துவ எதிர்ப்பு: ரவிக்குமாரின் நூல் வரிசை

அதிகாரத்துவ எதிர்ப்பு: ரவிக்குமாரின் நூல் வரிசை
Updated on
1 min read

பி.எஸ்.கவின்

விழுப்புரம் மக்களவை உறுப்பினரும், ‘மணற்கேணி’ ஆய்விதழின் ஆசிரியருமான ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் காத்திரமான விவாதங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார். தொகுதி மக்கள் நலம் சார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, பொதுமக்களைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்தைக் குறித்தும், தொடர்புடைய அமைச்சர்களைச் சந்தித்து நேரடியாகவே கோரிக்கை மனுக்களை வழங்கி கவனத்தை ஈர்க்கிறார். தொகுதி வாக்காளர்கள் அவரை எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளும் வகையில் செயலி ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பொதுத் தளத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான முன்னுதாரணராகப் பணியாற்றிவரும் ரவிக்குமார், ஒரு எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தன்னுடைய அரசியல் கருத்துகளை அறிவுத்தளத்திலும் தொடர்ந்துவருகிறார் என்பது ஆச்சர்யம்.

‘அபராதிகளின் காலம்’ என்ற தலைப்பில் குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி அவர் எழுதிய குறுநூல் வெளிவந்த சில நாட்களிலேயே 5,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அந்நூலுக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, அதிகாரத்துவ எதிர்ப்பு நூல் வரிசையில் இதுவரை ஐந்து புத்தகங்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார். இவ்வரிசை நூல்களின் முதல் நூலான ‘அபராதிகளின் காலம்’, அஸ்ஸாமின் குடியுரிமைச் சிக்கலையும், இந்தியாவில் உள்ள அகதிகள் பிரச்சினைகளையும், குறிப்பாக ஈழத் தமிழ் அகதிகளைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறது.

இரண்டாவது நூலான ‘தொடுதிரை யுகத்தில் அம்பேத்கர்’ ஜனநாயகம், இரட்டை உறுப்பினர் தொகுதி முறை, அதிபர் ஆட்சி முறை, சாதி அடிப்படைவாதம், மதமாற்றம், விகிதாச்சாரத் தேர்தல் முறை, நீதித் துறை சுதந்திரம், நதிநீர்ச் சிக்கல் குறித்த அம்பேத்கரின் பார்வைகளைச் சமகாலப் பொருத்தப்பாட்டுடன் சுருக்கமாக விளக்குகிறது. ‘நீதி எனும் புதிர்ப்பாதை’ என்ற மூன்றாவது நூல், நீதித் துறையின் சுதந்திரம், பொது நல வழக்குகள், நீதித் துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு, சமூக நீதி, வழக்காடுமொழி பற்றி கேள்விகளை எழுப்புகிறது.

‘சனாதனமும் பயங்கரவாதமும்’ என்ற நான்காவது நூல், ரவிக்குமார் சமீபத்தில் ஆற்றிய சில உரைகளின் தொகுப்பு. சனாதனத்தின் எழுச்சி, அரசமைப்புச் சட்ட நாள், சிவில் சமூகமும் பயங்கரவாதமும், வகுப்புவாதப் பெரும்பான்மையும் அரசியல் பெரும்பான்மையும் ஆகியவற்றைப் பற்றி இந்த உரைகள் அமைந்துள்ளன. அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கும் தனது எழுத்துகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ‘தன்னிலையும் அதிகாரமும்’ என்ற தலைப்பில் மிஷேல் ஃபூக்கோ, எலியா கனெட்டி, எட்வர்ட் ஸெய்த் ஆகியோரின் குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் நேர்காணல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார் ரவிக்குமார்.

மக்கள் பிரதிநிதியாக மட்டுமின்றி எழுத்தாளராகவும் தீவிரமாக இயங்கிவருகிறார் ரவிக்குமார். அரசியலும் இலக்கியமும் இணையான பயணங்கள் என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது வெறும் அலங்கார வார்த்தைகள் இல்லை, உண்மை என்பதை இப்போது அவரது அரசியல் செயல்பாடுகளும் எழுத்துகளும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in