தெரிந்த நாவல் - தெரியாத செய்தி | நிழல்களைப் பற்றி

தெரிந்த நாவல் - தெரியாத செய்தி | நிழல்களைப் பற்றி
Updated on
1 min read

இது பிரசுரமாகும் என் முதல் நாவல்.

நண்பன் கிருஷ்ணன் நம்பியுடன் ஒருமுறை இலக்கியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், “நீங்கள் இன்னொரு நாவலை எழுதுங்கள்” என்றார்.

நான், “இன்னொரு நாவலா? இதற்குமுன் ஒரு நாவல் எழுதியதாக எனக்கு ஞாபகமில்லையே!” என்று பதில் கூறினது இதை எழுதுகையில் நினைவிற்கு வருகிறது.

“சரி, வாய்தவறிச் சொல்லிவிட்டேன். ஒரு நாவலை உடனடியாக எழுதுங்கள்.”

இதன் பிறகு சற்று ஆலோசித்துவிட்டு, “உங்களைப் பற்றியே எழுதுங்கள்” என்றார். பிறகு அவர் நாகர்கோவில் போய்ச் சேர்ந்தார்.

இந்தச் சமயத்தில் அவர் ‘நீலக்கடல்’ கதைத்தொகுதி வந்தது. அதில் பலர் கவனத்தைக் கவர்ந்த- நான் கதை முழுவதையும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்- ‘எனக்கு ஒரு வேலை வேண்டும்’ என்ற கதையில் அவர் சூசகமாகக் குறிப்பிட்டிருந்த தகப்பன்-பிள்ளை உறவைத் தொடர்ந்து ஒரு பரிசீலனை செய்தால் என்ன என்ற என் அபூதமான மன உணர்வின் ஒரு விகாதாம்சமான பிரதிபலிப்பு ‘நிழல்கள்’. எனவே, இந்த நாவலின் ஜனனத்திற்கு ஒரு வகையில் காரணகர்த்தா நண்பர் நம்பி. இந்தச் சமயத்தில் இதை ரேகைப்படுத்துவது என்பது என்னைப் பற்றியவரை ஒரு நிர்ப்பந்தமான விஷயம்.

இன்னுமொரு கேள்வி: இந்த நாவலின் மையம் என்ன?

பதில்: மனம்தான் மதத்தைவிட முக்கியம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இந்தியன் என்ற வகையில் ஒரு மையத்தை நினைவுகூர்கையில் மற்ற எல்லா மையங்களும் வெறும் நிழல்கள்.

இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை அவசியமா?

கொஞ்ச காலமாக எனக்கு நண்பர் சுந்தர ராமசாமி யுடன் இலக்கியச் சர்ச்சை செய்வது என்பது ஒரு லாபகரமானதும் உவப்பையூட்டுவதுமான விஷயமாகவும் இருந்துவருகிறது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 42 மைல்: பஸ் பிரயாணத்தில் இரண்டரை மணி கழிக்க வேண்டும். பலமுறை அவருடன் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்றே சென்றிருக்கிறேன். இந்த அனுபவத்தினால் இந்த நாவலைப் பற்றி அவர் என்ன சொல்லுவார் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்ற முற்றிலும் சுயநலத்தினால் தூண்டப்பட்டு அவரை முகவுரை எழுதித்தரக் கேட்டுக்கொண்டேன். அவர் மனம் இசைந்து முகவுரை தந்ததற்கு என் நன்றி.

இந்த நாவலை நல்ல முறையில் வெளியிட முன்வந்த தமிழ்ப் புத்தகாலயத்திற்கு நான் என் வந்தனத்தைக் கூறுவதும் எனக்கு மிகவும் உவப்பான விஷயம்.

“மிகக் குறைந்த பக்கங்களில் ஒரு நாவல்; அதற்கு ஒரு முன்னுரை; அந்த முன்னுரைக்கு ஒரு முன்னுரை. ஏன் இந்தச் சேஷ்டை? " என்று ஒரு குரல் பின்நின்று ஒலிப்பதால் இந்தப் பீடிகையை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

(நகுலன் தனது முதல் நாவலான ‘நிழல்கள்’ நாவலுக்கு 1965-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதியிட்டு எழுதியிருக்கும் முன்னுரை).

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in