Published : 31 Jan 2020 12:51 PM
Last Updated : 31 Jan 2020 12:51 PM

ஜன. 31: நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி- க.நா.சு. பிறந்த நாள்

க.நா.சு என்று அழைக்கப்படும் எழுத்தாளர் க.நா.சுப்பிரமணியன் 1912 ஜனவரி 31 அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் பிறந்தார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு என எழுதிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி. இலக்கியம், கலை, அவை குறித்த தீவிரமான விமர்சனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சிற்றிதழ்களை தொடங்கினார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். க.நா.சு. தமிழின் முக்கியமான கதைகளை ஆங்கிலத்திலும் நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவல்களையும் இன்னும் பல ஆங்கிலக் கதைகளையும் தமிழிலும் மொழிபெயர்த்தவர்.

மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

க.நா.சுவின் முதல் நாவல் ‘பசி’.‘பொய்த்தேவு’ என்ற நாவல் மிகவும் புகழ்பெற்றது. ‘இலக்கியத்திற்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கிய விமர்சனக் கட்டுரை நூலுக்காக 1986-ல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கிய க.நா.சு தனது 76-வது வயதில் (1988) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x