Published : 26 Jan 2020 08:45 AM
Last Updated : 26 Jan 2020 08:45 AM

பஷீர்: முதல் காதலின் மகத்துவம்!

ஷஹிதா

அடங்காத மகிழ்ச்சி உண்டாகும் தருணங்களில் கிளுகிளுத்துச் சிரித்தவாறு என் கணவரின் தோள்களில் சாய்ந்துகொள்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமைகளுக்கே உரிய அமைதியான மதியப் பொழுது அது. அருகில் அவர் ஒரு வாரப் பத்திரிகையில் மூழ்கியிருக்க, நானோ யூமா வாசுகியின் மொழியாக்கத்தில் பேராசிரியர் எம்.கே.ஸாநுவின் ‘பஷீர் தனிவழியிலோர் ஞானி’யில் திளைத்திருந்தேன்.

கொஞ்ச காலமாக அபூர்வ நிகழ்வாகிப்போன கிளுகிளுச் சிரிப்பு, தோள் சாய்தல் மீண்டும் கிட்டியதில் இவருக்கும் ஒரே ஆர்வம். அப்படி என்னதான் படிக்கிறாய் என்பதுபோலப் பார்த்தார். பஷீரை அவருக்கும் பிடிக்கும்; ‘பஷீர் மை ஃபர்ஸ்ட் லவ்’ என்று அவர் முன்னிலையிலே நான் தைரியமாகச் சொல்லிக்கொள்ளத் துணியும் அளவுக்கு.

பஷீர்! இந்த மனுஷன் எழுதியதைப் படித்தாலும் சிரிப்பு, அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் படித்தாலும் அதே. பஷீரின் இளவயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். தண்ணீர்ப் பாம்புக்குட்டி ஒன்றைப் பிடித்து நீர்நாகம் என்று அதற்குப் பெயர்சூட்டி சிஷ்யகோடிகள் பலரையும் பெற்ற கதை. வாசித்துக்காட்டினேன். பஷீரின் மிக அரிதான புகைப்படங்களும் ஓவியங்களும் கொண்ட இந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“இந்த வழுக்கைத் தலையிலும் கோடாலி மூக்கிலும் அப்படி என்னதான் இருக்கிறதோ?”

“அதென்ன அப்படிச் சொல்லிவிட்டாய்? இந்த முகத்தில்தான் எப்படியான லஹணத்து (அருள்) இருக்கிறது.”

முன்னர் சில சந்தர்ப்பங்களில் நான் இப்படி வாசிப்பில் பூரித்து, கிளுகிளுத்துச் சிரித்து, தோள் சாய்ந்து, “இதைப் படிக்கிறேன் கொஞ்சம் கேளுங்களேன்” என்று தொடங்கி, அசுவாரஸ்யமாய் அவர் தொலைக்காட்சியில் லயித்திருக்கவோ, வேறொரு வாராந்திரியில் ஆழ்ந்திருக்கவோ கண்டு, கலைகள் மீதும் கட்டினவள் மீதுமான அவருடைய அலட்சிய பாவத்தில் கொதித்துக் குமுறி கிளுகிளுச் சிரிப்பு, தோள் சாய்தல் எல்லாம் சில காலத்துக்குக் கனவுகளில் மட்டும் வந்துபோனதைப் பெரும் திகிலோடு நினைத்துப் பார்த்தேன். அப்படியான அசந்தர்ப்பங்கள் நேராதிருக்க மெனக்கெடுவதை மிகுந்த ஆனந்தத்தோடு அன்றைக்குத் தெரிந்துகொண்டேன். இப்படியெல்லாம் கணவரைப் பற்றி பொதுவெளியில் கேலிபேசலாமா என்றால், என் இன்னொரு ல... இல்லை வேண்டாம். அவர் தீர்க்காயுசோடு இருக்கட்டும். அ.முத்துலிங்கத்தைக் கேளுங்கள். அவர் தான் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் மிகச் சரியாகப் பயன்படுத்தி அவர் மனைவியின் இலக்கியம் மீதான் ஆர்வமின்மையைக் கேலிசெய்தவாறே இருப்பவர்.

பஷீர் மீதான பிரியம் பற்றியல்லவா பேச வந்தது? சுழித்துக்கொண்டோடும் நதியில் தக்கைப் படகொன்றில் பிரயாணிப்பதை ஒத்த இந்த வாழ்க்கையில் பாதித் தொலைவைக் கடந்துவிட்ட நிலையில், பல முறை தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டிருக்கிறேன். எப்படியானபோதும் வாழ்வின் மீதும் மனிதர்களின் மீதுமான நம்பிக்கையை இழக்க வேண்டியதில்லை என்பதை மீண்டும் மீளவும் வலியுறுத்தித் தந்துகொண்டிருப்பவர் பஷீர். கடுமையான மனச்சோர்வுகளின்போது பஷீரின் புத்தகங்கள் தந்த ஆறுதல்தான் அவர் மீதான மாறாத பிரேமையை உண்டாக்கியது. என்ன மாதிரியான சூழலையும் கொஞ்சம் குறும்போடு அணுகி, தமாஷாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையைக் கடத்த முடியும் என்கிற எண்ணத்தை விதைத்தவர்; எளிமையே நின்று வாழும் எனும் ஆழமான நம்பிக்கையையும். மொழியின் உச்சபட்சமான சாத்தியங்களைத் தொட்டு, கவித்துவத் தரிசனங்களைக் காட்டி மாயங்கள் பல செய்யும் எழுத்தாளர்களை வாசித்துப் பிரமித்தாலும் ஆன்மாவின் ஆவலை நிறைப்பவர் பஷீரே. ஓ, பஷீர்! நான் ஏன் உங்களை முன்னமேயே தெரிந்துகொள்ளவில்லை!

நான் முதன்முதலாக வாசித்த பஷீரின் நாவல் ‘இளம்பிராயத்துத் தோழி’தான். அது ஒரு புத்தகக்காட்சி சமயம். சென்னைப் புத்தகத் திருவிழா பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுவது குறித்து மிகுந்த ஆட்சேபணைகள் உள்ளவர்களில் நான் முதன்மையானவள். பின்னே? ஊர்க்காட்டில் வசிக்கும் என் போன்றவர்கள், பொங்கல் சமயத்தில் ரயில், பஸ் டிக்கெட்டுகள் எடுக்கப் படும் பாடுகள் பற்றி எந்த ஒரு கவலையுமற்ற ‘பபாசி’ என்ன நல்ல ‘பபாசி’? திரும்புவதற்கான பிரயாணச் சீட்டில்லாமல் எப்பேர்ப்பட்ட காரணத்துக்காகவும் பிரயாணம் மேற்கொள்ள மாட்டேன் என்கிற தீர்க்கமான கொள்கையுடைவள் நான். அப்போதோ புத்தகக்காட்சிக்குப் போக அனுமதி மட்டும் கிடைத்தால் போதும், நபிலான இரண்டு நோன்புகள் பிடிக்கிறேனடா அல்லாஹ் என்று நேர்ந்துகொண்டிருந்த நிலையில், திரும்பிவருவதற்கான டிக்கெட் உறுதி ஆகாதது பற்றி பெரிதாக யோசனைகள் இன்றிக் கிளம்பிவிட்டேன்.

புத்தகக்காட்சிக்குச் சென்றுசேர்ந்து புத்தகங்களும் வாங்கியாகிற்று. இரண்டு கட்டைப் பை நிறைய புத்தகங்கள். என் கைப்பையில் திணித்துக்கொள்ளும் அளவே ஆன என் பொருட்கள் சகிதம் ரயில்வே விஜிலன்ஸில் அதிகாரியாக இருக்கும் என் பள்ளித் தோழனைப் பார்க்கப்போனேன். “இங்கே பார் கன்ஃபார்ம் ஆகாத டிக்கெட். நான் இன்றிரவு ஊர் போய் ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவர் எனக்கு தலாக் சொன்னாலும் சொல்லிவிடுவாரடா” என்று கொஞ்சமாய் அச்சுறுத்தினேன்.

“ஏசி கோச், லோயர் பர்த் என்கிற உன்னுடைய அல்டாப்பெல்லாம் இன்று செல்லாது. நின்றுகொண்டு போக வேண்டி வரும் சரிதானா? பொங்கல் சமயத்தில் அதற்கு மேல் ஒன்றும் முடியாது” என்றான். “ஆஹா. நீ ரயிலைப் பிடித்துக்கொள்ள மட்டும் அனுமதி பெற்றுத்தா, கடைசிப் பெட்டியைப் பிடித்துக்கொண்டு ரயிலின் பின்னாலேயே ஒரு சத்தமில்லாமல் ஓடிப்போவேன் பார் நான்!”

பரிசோதகரிடம், “சார் பாருங்கள், என் தங்கைதான். டிக்கெட் கன்ஃபர்ம் ஆகவில்லை. பயப்படுகிறாள். மச்சான் கோபிப்பார்” என்றான். “அடடா, அதற்கென்ன சார்? என் இருக்கை இருக்கிறதே, அமர்ந்துகொள்ளட்டும்” என்றார். ஆஆஆஆ! எத்தனை சிறிய இருக்கை, எத்தனை கொழுத்த நான்! எவ்வளவு பாவம் டிக்கெட் பரிசோதகர்கள்! குறுகிய அந்த இருக்கையில் அமர்ந்து ‘இளம்பிராயத்துத் தோழி’யை வெளியில் எடுத்தேன். எதிரில் தரையில் அமர்ந்தபடி பொங்கல் கொண்டாட ஊர்களுக்குப் பிரயாணமாகும் எத்தனைப் பேர், ரயில்வே விஜிலன்ஸில் நண்பர்கள் இல்லாத அபாக்கியவாதிகள்.

சிறிதே நேரம்தான் எனக்கு மட்டும் இருக்கை கிடைத்தது பற்றிய குற்றவுணர்வையும், என்னை மறந்து நான் சிரிப்பதையும், இறுதியில் சுகறா இறக்கும் காட்சியில் கன்னங்களில் நீர் வழிய நான் படிப்பதைப் பார்த்துக்கொண்டு எதிரில் அமர்ந்தபடி சிலர் இருக்கக்கூடும் என்ற நினைப்பையும் உணர்வில் இருத்த முடிந்தது. இரவு முழுக்க அமர்ந்தே பிரயாணித்தேன். இன்னொரு புத்தகத்தை நான் எடுக்கவுமில்லை. மஜீதின், சுகறாவின் துயரம் தவிர வேறெந்தத் துயரமும் அன்றிரவு எனதில்லாமல் செய்தார் பஷீர். சூழல் மறந்து கிளுகிளுத்துச் சிரித்து மகிழ்த்தும் நகைச்சுவை உணர்வுகொண்டவனை, சாய்ந்துகொள்ளத் தோளும் தருபவனைவிடவும் வேறு எவனைப் பெண்களால் சிநேகித்துவிட முடியும்? பஷீரைப் பற்றி, ‘மை ஃபர்ஸ்ட் லவ்’ என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்லிவிட இயலும்?

- ஷஹிதா, ‘ஆயிரம் சூரியப் போரொளி’ நாவலின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: shahikavi@gmail.com

ஜனவரி 21: பஷீர் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x