நாடக உலா: ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் - புதியதோர் அனுபவம்

நாடக உலா: ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் - புதியதோர் அனுபவம்
Updated on
2 min read

லதா

மஹாலக்ஷ்மி லேடீஸ் நாடகக் குழுவினர் (எம்எல்டிஜி), தங்களுடைய 30-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், புதியதோர் அனுபவத்தை (நாடகம் என்று அதைக் கூற மனம் ஒப்பவில்லை) ‘பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்’ என்ற தலைப்பில், சென்னை மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கத்தில் அளித்தது

இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று எம்எல்டிஜி சில படைப்புகளை வெற்றிகரமாக வழங்கிவிட்டு திரும்பியுள்ளனர். மீண்டும் நாளையும் (ஜன. 27), நாளை மறுநாளும் (ஜன. 28) மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தில் ‘பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர்’ நாடகத்தை அரங்கேற்ற உள்ளது. அனுமதி இலவசம்.

ஆம். பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரை சிறுவனாக, இளைஞராக, வயது முதிர்ந்தவராக மேடையில் தோன்ற வைத்து நம்மை ஒரு பரவச நிலைக்கே அழைத்துச் செல்கிறார் இந்த நாடகத்தை எழுதி - இயக்கியுள்ள பாம்பே ஞானம்.

இந்த நாடகத்தைப் பற்றி சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தா மஹராஜ், “இந்த நாடகத்தில் எவருமே நடிக்கவில்லை. அந்தந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகின்றனர். அந்த அனுபவம் மிகவும் அற்புதம்” என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

பெண்கள் மட்டுமே அடங்கிய இந்தக் குழுவில், நேர்த்தியான ஒப்பனையின் மூலம் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவி, காளி மாதா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் இன்னும் பல கதாபாத்திரங்களை தத்ரூபமாக நம் கண்முன்னே நிறுத்தியதற்கு ஒப்பனைக் கலைஞர்கள் கண்ணன், ஸ்வாமி இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பதிவு செய்யப்பட்ட வசனங்களை ஒலிபெருக்கச் செய்து அதற்கேற்ப வாயசைத்து, தங்கள் உடல்மொழியாலும், முக பாவங்களாலும் கதாபாத்திரமாகவே மாறி தட்சிணேஸ்வரத்தில் ஒரு குடிமகனாக நடக்கும் சம்பவங்களுக்கு அந்தக் கலைஞர்கள் நம்மை ஒரு சாட்சியாகவே மாற்றிவிடுகிறார்கள்.

சிறுவயதில் பரமஹம்ஸரை கதாதர் என்றும், செல்லமாக கதாயி என்றும் ஊர் மக்கள் அழைக்கிறார்கள். கதாயியாக காலக்ஷேபம் செய்து அசத்திய சிறுமியே நாடகத்தில் மீண்டும் குழந்தை சாரதா தேவியாக மாறி வலம் வந்தது, நாடகம் முடிந்து கலைஞர்கள் அறிமுகத்தில் தெரிய வந்தபோது அரங்கத்தில் பலருக்கு இன்ப அதிர்ச்சி!

இதேபோல, நாடகத்தில் வேறு சில கலைஞர்களும் இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று மாறுபட்ட ஒப்பனை மற்றும் உடை அலங்கரத்துடனும் வந்தது, அறிமுக படலத்தின்போது மற்றொரு ஆச்சரியம்!

ஸ்வாமி விவேகானந்தர் ஒரு சிறுமிக்கு பரமஹம்ஸரின் கதையை விவரிக்க ஆனந்த அனுபவம் மலர்கிறது. களத்தில் ஒருவராக நம்மையும் மாறச் செய்கிறது அந்த ஆனந்த விவரிப்பு.

இளவயது மற்றும் வயது முதிர்ந்த பகவானாகவும் மிகவும் சிறப்பான பங்களிப்பை மெச்சத் தகும் வகையில் அளித்தார் வர்ஷா. தன்னை முழு மூச்சுடன் அர்ப்பணித்து பகவான் ஸ்ரீ ரமணராகவும், ஷீரடி ஸாய் பாபாவாகவும் மேடையில் வர்ஷா தோன்றி நடித்ததை இங்கே நாம் கண்டிப்பாக நினைவுகூர வேண்டும்.

காட்சிக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையை திவாகர் சுப்ரமணியன் அமைத்திருந்தது நாடகத்துக்கு இன்னும் பக்க பலம்.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களைதேர்வு செய்வதில் தனி திறன் படைத்தவர் என்பதை இந்த நாடகத்திலும் பாம்பே ஞானம் நிரூபித்திருக்கிறார். மோகன் பாபுவின்அரங்க அமைப்பு, முக்கியமாக மலை உச்சியில் மாதா காளியின் திரு உருவச் சிலையும், இறுதிக் காட்சியில் பகவானின் திரு உருவச் சிலையும் கண்களுக்கு ஒரு பக்தி விருந்தாகவே அமைந்தது.

மொத்தத்தில் ஆன்மிக அனுபவம் வேண்டுவோர் அவசியம் காண வேண்டிய நாடகம் இதுவாகும்.

வாசகர்களுக்கு கூடுதலாக இன்னொரு செய்தி: பரமஹம்ஸரைப் பற்றியும், அவரது பொன்மொழிகள், சொற்பொழிவுகள் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள, நீங்கள் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புத்தகாலயத்துக்குச் செல்லலாம். அங்கு விலை மதிப்பில்லா ஆன்மிக புத்தகங்களை மிகவும் மலிவான விலையில் அளித்து பக்தி சேவை செய்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in