Published : 25 Jan 2020 08:43 AM
Last Updated : 25 Jan 2020 08:43 AM

அரசியல் அறிய அரிய நூல்: ஹெரால்டு லாஸ்கியின் ‘அரசியலின் இலக்கணம்’

பொதுவாக, அரசியல் குறித்த பேச்சு என்பது தேர்தல்களை ஒட்டிய பேச்சாகவே இருப்பதைப் பார்க்கலாம். கிரிக்கெட் மேட்சில் யார் வெல்வார்கள், எந்தப் படம் நன்றாக ஓடும் என்பது போன்று, எந்தக் கட்சி தேர்தலில் வெற்றி பெரும் என்பதை முன்னிட்டே அரசியல் விவாதிக்கப்படுவது பரவலாக இருக்கிறது. சற்றே சிந்தித்துப் பார்த்தால், அரசியல் என்பது ‘அரசு இயல்’ என்பதும், அரசு என்பது எப்படிச் செயல்படுகிறது, எப்படிச் செயல்பட வேண்டும் என்ற தர்க்கமே அரசியல் என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் காங்கிரஸ், ‘அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை’, ‘காந்தியின் அகிம்சை’ முதலிய தத்துவங்களை அறிமுகம்செய்தது. ‘இடதுசாரிகள் பொதுவுடமை’, ‘தொழிலாளர் வர்க்கப் புரட்சி’, ‘பாட்டாளி வர்க்க ஆட்சி’ ஆகிய எண்ணங்களை அறிமுகம்செய்தார்கள். திராவிட இயக்கம், பெரியார் பணிகள் ஊடாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்ககாலப் பிரச்சாரங்களிலும் ‘தனிமனிதர்களின் உரிமைகள்’, ‘சமநீதி’, ‘பிரதிநிதித்துவ மக்களாட்சி’ ஆகிய நவீன சுதந்திரச் சிந்தனைகளை வெகுஜனப் பரப்பில் அறிமுகம்செய்து பரவலான அரசியல் சிந்தனைக்கு வித்திட்டது.

இவையெல்லாம் நிகழ்ந்திருந்தபோதும் சிந்தனைப் பரப்பில் நவீன அரசு, இறையாண்மையின் உருமாற்றம் போன்ற கருத்துகள் தொடர்ந்து விரிவாக உள்வாங்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை. குறிப்பாக, சுதந்திரச் சிந்தனை, பொதுவுடமைச் சிந்தனை இரண்டுக்கும் இடையே சமநீதி, சோஷலிஸம் உள்ளிட்ட முற்போக்கான கொள்கை வடிவங்களைச் சிந்தித்த பல முக்கியமான அரசியல் சிந்தனையாளர்களைக் குறித்த முறையான அறிமுகம் நிகழவில்லை. அவர்களுள் முதன்மையானவர் ஹெரால்டு லாஸ்கி (1893-1950).

அரசியல் சிந்தனையாளராக உருவாகி, கல்விப்புலத்தில் பணியாற்றி, பின்னர் நேரடி அரசியலில் பங்கேற்று, இங்கிலாந்து தொழிற்கட்சியின் தலைவராகி, பிரதமர் அட்லியின் ஆலோசகராக விளங்கிய லாஸ்கியின் அரசு குறித்த சிந்தனைகள் நவீன அரசியலுக்குக் கோவையான, தெளிவான விளக்கத்தை அளிப்பவை எனலாம்.

லாஸ்கியின் முக்கியமான நூல்களில் ஒன்று ‘அரசியலின் இலக்கணம்’. அதன் தலைப்பே சுட்டுவதுபோல நவீன அரசியலில் அரசு என்பது என்ன, குடிநபர்களின் உரிமைகள் என்ன, சமநீதி என்பது என்ன, சர்வதேச உறவுகளின் முக்கியத்துவம் என்ன என்பன போன்ற பல அம்சங்களை விரிவாக விவாதிக்கும் முக்கியமான நூல். இதுபோன்ற அம்சங்களை நாம் ஏற்கெனவே அறிவோமே என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால், சற்றே ஆழமாகச் சிந்தித்தால் அரசு என்பதன் அதிகாரம், சட்டம் என்பதன் முக்கியத்துவம், சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் நீதிமன்றங்கள், சட்டம் இயற்றும், ஆட்சிசெய்யும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியவர்களுக்கு இடையிலான உறவுகள் அவ்வளவு எளிமையானவை அல்ல என்பது புலனாகும். இவற்றைக் குறித்த சிந்தனைகள் பல சமயங்களில் புரிந்துகொள்ள சிக்கலான தத்துவப் பிரச்சினைகளாகும். உதாரணமாக, அரசு இயற்றும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தால் என்ன நடக்கும் என்பது போன்ற கேள்விகள் உண்மையில் அதிகாரம் எவ்வாறு நிலைபெறுகிறது என்பது குறித்த நுட்பமான கேள்விகளுக்கு இட்டுச்செல்லும்.

லாஸ்கியினுடைய நூலின் சிறப்பு நாம் ஏற்கெனவே அறிந்தவைதான் என்று நினைக்கும் காரியார்த்தமான நடைமுறைகளையும், அவற்றை சாத்தியமாக்கிய சிக்கலான தத்துவப் பின்புலத்தையும் ஒருங்கிணைத்து எளிமையாக, தெளிவாக நவீன அரசியலின் அடிப்படைகளை அலசும் பாணியில் அமைந்துள்ளதுதான். அவருடைய தனிப்பட்ட சிந்தனைகளின் தடயங்களும் நூல் முழுவதும் விரவியுள்ளன. உதாரணமாக, பொருளாதார நிறுவனங்கள் குறித்த இயலில் வழிவழியாக வரும் சொத்துரிமை குறித்து அவர் கூறும் கருத்துகள் முக்கியமானவை. அதை எல்லைக்கு உட்படுத்துவது குறித்து மிக ஆரோக்கியமான சிந்தனைகளை முன்வைக்கிறார்.

லாஸ்கியின் சிந்தனைகள் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவர்கள் பலர் மீது தாக்கம் செலுத்தின. இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு ஒரு உதாரணம் என்றால், தமிழகத்தில் அறிஞர் அண்ணா லாஸ்கியின் சிந்தனைகளை பலமுறை தன் உரைகளில், எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு முக்கியமான ஒரு நூல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பதை வாசகர்கள் நற்பேறாகக் கருத வேண்டும். அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி அணியினருக்கு வகுப்புகள், பயிற்சி முகாம்கள் நடத்தும்போது இந்த நூலை விவாதங்களை முன்னெடுக்கப் பயன்படுத்த வேண்டும். ஊடகங்களும் தங்கள் அரசியல் செய்தியாளர்களைப் பயிற்றுவிக்க இந்த நூலைப் பயன்படுத்தலாம்.

பதினோரு இயல்களில் 840 பக்கங்கள் விரியும் இந்த நூலைத் தம் அயராத உழைப்பில் தமிழ்ப்படுத்தியுள்ள பேராசிரியர் பூரணச்சந்திரன் பாராட்டுக்கு உரியவர் என்றால், அதைப் பதிப்பித்துள்ள ‘எதிர்’ வெளியீடும் நம் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் உரியது. இந்த நூலாக்கத்துக்கு மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தின் ‘நேஷனல் டிரான்ஸ்லேஷன் மிஷன்’ ஆதரவு அளித்துள்ளதும் மிகவும் பொருத்தமானது.

இந்த அரிய நூலைத் தமிழ் வாசகர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழில் அரசியல் சொல்லாடலை மேம்படுத்த வேண்டும் என்பதே நல்லோரின் அவாவாக இருக்க முடியும்.அரசியலின் இலக்கணம்

ஹெரால்டு ஜே.லாஸ்கி

தமிழில்: க.பூரணசந்திரன்

எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.

விலை: ரூ.570

99425 11302

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x