பெருநகரங்கள் மூச்சுத் திணறுவது ஏன்? - விளக்குகிறது மாசுபட்ட சுதந்திரக் காற்று

பெருநகரங்கள் மூச்சுத் திணறுவது ஏன்? - விளக்குகிறது மாசுபட்ட சுதந்திரக் காற்று
Updated on
3 min read

'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்டுள்ள மாசுபட்ட சுதந்திரக் காற்று புத்தகம், சமகாலத்தில் நாம் எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சூழலியல் பிரச்சினையை அலசுகிறது. 37 பக்கங்களே கொண்ட இச்சிறிய புத்தகம், காற்று மாசு குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய புத்தகமாகும்.

வெறும் பிரச்சினைகளை மட்டும் சொல்லிக்கொண்டே போகாமல், காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் தீர்வுகளாக முன்வைக்கின்றது. நாம் அதிகம் அறியாத தகவல்களுடனும் தரவுகளுடனும் உடனடியாக தீர்க்க வேண்டிய காற்று மாசின் தீவிரத்தை ஆராயும் இப்புத்தகம், உயிர் வாழ்வதற்கான வழிகளை முன்வைக்கிறது. சூழலியல் எழுத்தாளர்கள், ஜீயோ டாமின், பொறியாளர் சுந்தர்ராஜன், பிரபாகரன் ஆகியோரின் கட்டுரைகளின் தொகுப்புகளாக உள்ள இந்தப் புத்தகம், டெல்லி, சென்னை ஆகிய பெருநககரங்களின் காற்று மாசின் தீவிரத்தை உணர்த்துகிறது.

உலகிலேயே காற்று மாசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கை விட டெல்லி நகரத்தின் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. டெல்லியையே மிஞ்சும் வகையில் சென்னை நகரத்தின் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு காற்றின் தரம் அபாயகரமான நிலையில் இருந்த நாட்கள் அதிகம் என்பதை தரவுகளுடன் இப்புத்தகம் எடுத்துரைக்கிறது.

காற்று மாசினால் ஆண்டுக்கு 6 லட்சம் பேர் உயிரிழக்கும் தேசமான இந்தியாவில் அதனைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் முன்வைக்கப்படும் தீர்வுகளும் சொற்பமான அளவிலேயே உள்ளது என அரசு நிர்வாகம், ஆட்சியாளர்கள், திட்டங்களை வகுப்பவர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அலட்சியத்தை வரிசையாக கூறுகிறது இப்புத்தகம். பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைகளையும் உத்தரவுகளையும் கண்டுகொள்ளாத மத்திய அரசாங்கம், டெல்லி அரசாங்கத்தை விமர்சனத்துக்குள்ளாக்குகிறது.

காற்று மாசால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளாக இப்புத்தகத்தில் உள்ள பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சாதாரண கண் எரிச்சலில் தொடங்கி, நுரையீரல் புற்றுநோய் என மரணம் வரை நீள்வதற்கு வழிவகுக்கிறது காற்று மாசு. குழந்தைகளையும் முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது. அதிலும், பள்ளி செல்லும் குழந்தைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்காமல் நச்சுக் காற்றை சுவாசிப்பதைப் படிக்கும் போது காற்று மாசின் தீவிரத்தை நாம் உணர்ந்துகொள்ள முடியும். காற்று மாசு குழந்தைகளைக் கருவிலேயே பாதிக்கிறது என அதிர்ச்சித்தரத்தக்க தரவுகளுடன் அதனை நிரூபிக்கிறது. முகமூடி காற்று மாசிலிருந்து தப்பிக்க ஒரு தீர்வல்ல என்கிறது.

டெல்லி காற்று மாசுக்கான காரணங்களையும் அதனை மட்டுப்படுத்த அரசாங்கம், தனிமனிதர்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் மிகவும் ஆக்கபூர்வமான தீர்வுகளாக இப்புத்தகம் நம் பார்வைக்குக் கொண்டு வருகிறது. வாகனப்புகை, குப்பைகளை எரிப்பது, கட்டுமானப் பணிகள், தீபாவளிப் பட்டாசுகள், அனல்மின் நிலையங்களால் வெளியேறும் நச்சுப் புகை என டெல்லி காற்று மாசுக்குப் பல முக்கிய காரணங்கள் உள்ள போதிலும், டெல்லி அரசாங்கமும், மத்திய அரசும் எளிதாக, வைக்கோலை எரிக்கும் பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மீது பழியைத் தூக்கிப் போடுவதை கேள்வி எழுப்புகிறது. விவசாயிகள் மட்டும் டெல்லி காற்று கெடுவதற்கு காரணம் அல்ல, அது அந்நகரத்தின் நீண்ட கால பிரச்சினை என தரவுகளின் வழி உண்மை நிலையை கூறுகிறது.

டெல்லி அரசு நடைமுறைப்படுத்திய கார்களுக்கான ஒற்றை-இரட்டை எண் திட்டம் தோல்வியில் முடிந்தது. காரணம் மக்கள் அரசாங்கத்தை ஏமாற்றி, அனைத்து நாட்களும் கார்களைப் பயன்படுத்தி, காற்று மாசு இன்னும் மோசமாவதற்கு வழிவகுத்தனர். இவற்றை விடுத்து, அரசாங்கமும், மக்களும் பின்பற்றுவதற்கு சாத்தியமாக உள்ள தீர்வுகளை இப்புத்தகம் முன்வைக்கிறது.

குறிப்பாக, பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், சாலையின் தரத்தை மேம்படுத்துதல், அனல்மின் நிலையங்களின் பயன்பாட்டைக் குறைப்பது, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்தல், குப்பைகளை எரிக்காமல் மறு சுழற்சிக்கு உட்படுத்துதல், விவசாயக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுதல், முறையான நகர திட்டமிடுதல், பசுமைப் பூங்காக்களை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை தீர்வுகளாக முன்வைக்கின்றது.

வைக்கோலை எரிக்கும் விவசாயிகளின் குத்தகை நிலத்தைப் பிடுங்குவது, அபராதம் விதிப்பது என, விவசாயிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. டெல்லி காற்று மாசுக்குக் குறைந்தபட்சக் காரணமாக இருக்கும் விவசாயிகளைத் தண்டித்து விட்டு, காற்று மாசுக்கு அதிக அளவில் பங்கு வகிக்கும் மேல்தட்டு மக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை இந்தப் புத்தகம் கூறும் இடம் மிக முக்கியமானது.

காற்று மாசு, சூழலியல், உடல்நலப் பிரச்சினை மட்டுமல்ல. அது வர்க்கப் பிரச்சினையும் கூட என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. சென்னையிலும் வடசென்னை பகுதிகளான, மணலி, வேளச்சேரி, கொடுங்கையூர் போன்ற பகுதிகளிலேயே காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குச் செல்வதையும், அங்குள்ள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதையும் நாம் அறியலாம். வடசென்னை பொருளாதார, சமூக ரீதியாக பின் தங்கியவர்கள் வசிக்கும் இடம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சென்னையின் காற்று மாசு குறித்தும் இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. கடந்த 2019, நவம்பர் - டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட காற்று மாசுக்கான காரணம் டெல்லியின் காற்று மாசு அல்ல என விளக்கும் இப்புத்தகம், அதற்கான காரணங்களையும் விளக்குகிறது. சென்னையில் எண்ணூர், வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்களை விரைவில் மூடிவிட்டு, புதுப்பிக்கக்கூடிய எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்கிறது.

தவிர, காலநிலை நெருக்கடியால் ஏற்படும் அதீத கால நிலை நிகழ்வுகளால் நச்சுக் காற்று தேங்கும் ஆபத்து சென்னைக்கு உள்ளது என மிகப்பெரும் எச்சரிக்கைச் செய்தியைச் சொல்கிறது. சென்னையின் 38 இடங்களில் தொடர் கண்காணிப்பு நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும், மாசைக் கட்டுப்படுத்த அதிக நிதி ஒதுக்க வேண்டும், மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்டவற்றையும் பரிந்துரைக்கிறது.

தவிர்த்து, தீபாவளியின்போது பட்டாசு வெடித்தல், போகிப் பண்டிகையின் போது பழையனவற்றை எரிப்பதை மக்கள் கொண்டாட்டங்களாக கருதாமல் அவற்றைக் கைவிட வேண்டும், குறைந்த தொலைவுக்குச் செல்லும் போது நடந்தோ அல்லது மிதிவண்டியைப் பயன்படுத்தியோ செல்ல வேண்டும் என மக்களுக்குப் பரிந்துரைக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

மாசுபட்ட சுதந்திரக் காற்று

சென்னை புத்தகத் திருவிழாவில், பூவுலகின் நண்பர்கள் அரங்கில் (492&493) கிடைக்கும்.

பூவுலகின் நண்பர்கள் வெளியீடு:

விலை: ரூ.70

முகவரி:

பூவுலகின் நண்பர்கள்

பழைய எண் 29/2, புதிய எண் 6/2,

12-வது அவென்யூ, வைகை காலனி,

அசோக் நகர், சென்னை -83

தொலைபேசி - 09094990900

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in