

பிரிட்டிஷிடமிருந்து இந்தியாவுக்குச் சுதந்திரம் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணித்த தலைவர்களும், சமூகப் போராளிகளும் சுதந்திரத்திற்குப் பிறகுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதில் முக்கியமானது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகள். அத்தகைய கொடுமைகளிலிருந்து அம்மக்களை விடுவிக்கப் புறப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் வினோபா காந்தி பாதையில் பயணித்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள்.
தனது வாழ்நாள் முழுவதும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். ’உழுபவர்களுக்கே நிலம்’ என்று தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர். தொடர்ந்து நின்று கொண்டிருப்பவர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாள் மதுரையில் சவுந்திரம்மாள் நடத்தி வந்த இலவச இல்லத்தில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி பயின்றார். அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதன்பின்னர் வினோபா பாவேயின் சர்வோதய அமைப்பில் இணைந்து, பூதான இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கணவருடன் இணைந்து சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்றார். 1950 களிலிருந்தே முதலே நிலமற்ற ஏழைகளுக்காக தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.
நாகப்பட்டினத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் 1968-ல் விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த 44 பெண்கள், குழந்தைகள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் கிருஷ்ணம்மாளை நிலைகுலையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நிலமற்ற விவசாயிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிலக்கிழார்களிடமிருந்து, பண்ணையார்களிடமிருந்து நிலங்களைப் பெற்றுத் தருவதையே தனது லட்சியமாக ஏற்றுக் கொண்டார்.
கிருஷ்ணம்மாளின் இப்பயணத்திற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அவருக்கு உற்ற துணையாய் இருந்து உதவினார் ஜெகந்நாதன்.
கிராமம், கிராமமாகச் சென்று தாழ்த்தப்பட்ட, ஏழை விவசாயிகளின் நலன்களுக்காகத் தொண்டாற்றிய அரசின் திட்டங்கள், தன் லாப்டி அமைப்பு நிதி மூலமாக 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்தார்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், ஏழைப் பெண்களுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல், மதுவிலக்குப் பிரச்சாரம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் தற்போதும் ஈடுபட்டு வருகிறார்.
தனது சமூகப் பணிகளுக்காக பத்ம ஸ்ரீ, ஜம்லால் பஜாஜ் விருது, பகவான் மகாவீர் விருது, ஸ்வீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசான ரைட் லைவ்லிஹுட் உள்ளிட்ட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு சர்வதேச விருதுகளையும்கிருஷ்ணம்மாள் பெற்றுள்ளார்.
90 வயதைக் கடந்த தள்ளாத நிலையிலும் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தாழ்த்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் சமூக நலனுக்காக வருடம் முழுவதும் பணியாற்றி வருகிறார்.
இந்த ஒப்பற்ற பயணத்தில் அவர் எதிர் கொண்ட ஆபத்துகளும், காயங்களும் ஏராளமானவை. அத்தகைய கிருஷ்ணம்மாள் ஜெகந்தாதனின் ஓய்வறியா கால்களின் பயணத்தையே நிலமடந்தைக்கு... என்ற புத்தகம் நமக்குக் கூறுகிறது. கிருஷ்ணம்மாள் தன் வரலாறை ஒரு நதியின் போக்கில் சொல்லிச் செல்கிறார்.
குறிப்பாக மறந்துவிட்ட இந்தத் தலைமுறைக்கு...
சென்னை புத்தகக் காட்சியில் தடாகம் அரங்கு எண் 266-ல் இந்நூல் கிடைக்கும்.
நிலமடந்தைக்கு ( கிருஷ்ணம்மாள் ஜெகந்தநாதன் இயக்க வரலாறு )
நரோலா
வெளியீடு: தடாகம்
விலை: ரூ.100
முகவரி: தடாகம்,
112, திருவள்ளுவர் சாலை,
திருவான்மியூர்,
சென்னை- 41.
தொடர்புக்கு: 91 - 8939967179