Published : 16 Aug 2015 11:29 AM
Last Updated : 16 Aug 2015 11:29 AM

தமிழர் வாழ்க்கையில் புத்தகத்துக்கு இடமில்லை: க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல்

தமிழில் அழகும் தரமும் வாய்ந்த புத்தகங்கள் என்றால் முதலில் வாசகர்களின் நினைவுக்கு வரும் பெயர் ‘க்ரியா’ பதிப்பகம்தான். ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’ பிரெஞ்சு நாவலின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பை ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிட்டது தமிழ் வாசகர்களின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் மொழிசார்ந்து நடந்த முக்கியமான ஒரு சில நிகழ்வுகளில் ஒன்று. க்ரியா ராமகிருஷ்ணனின் நேர்காணலிலிருந்து…

இலக்கியம் சார்ந்துதான் முதலில் க்ரியா நூல்களை வெளியிட்டது இல்லையா?

இலக்கியம் சார்ந்துதான் நான் பதிப்பகப் பணிக்கே வந்தேன். ஆனால் தொடங்கி ஒரு ஆண்டிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது, பதிப்புத் துறை என்பது இலக்கியம் மட்டும் அல்ல, இலக்கியத்தை உள்ளடக்கிய கருத்துலகத்தைச் சார்ந்தது என்று. அதற்காக நான் என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன். 1985-ம் ஆண்டுவரை மொழி சார்ந்து பட்டறிவின் அடிப்படையில்தான் செயல்பட்டுவந்தோம். மொழி சார்ந்து பிரச்சினைகள் இருப்பது அப்போது தெரிந்தது. பிரச்சினைகளை வகைப்படுத்துவதற்கோ புரிந்துகொள்வதற்கோ கோட்பாட்டுரீதியான அறிவு என்னிடம் இல்லை. ஒரு கையெழுத்துப் பிரதியைச் சரிசெய்யும்போது, வாசகரின் பார்வையில் மொழி தெளிவாக இருக்கிறதா, வாக்கியங்கள் சீராக இருக்கின்றனவா என்பதில்தான் என் கவனம் சென்றது.

க்ரியாவின் புத்தகத் தரத்துக்கு யாரை உங்கள் முன்னோடியாகச் சொல்வீர்கள்.

தமிழில் திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் ‘வாசகர் வட்டம்’ பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் தமிழ்ப் பதிப்புத் துறைக்கே முன்மாதிரி என்று சொல்வேன். ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘போதையின் பாதையில்’ போன்ற புனைவல்லாத நூல்கள் எனக்குப் பெரிய உத்வேகமாக இருந்தன.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதிக விலை கொடுத்துப் புத்தகங்கள் வாங்க வேண்டுமா?

மூன்றாம் உலக நாட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்குப் பட்டுப் புடவை வாங்குவது தேவையாக இருக்கிறது. 38 ரூபாய்க்கு காபி தேவையாக இருக்கிறது. புத்தகம் என்று வந்தால் மட்டும் நமது நாடு ஏழை நாடு என்ற ஞாபகம் வருகிறது. புத்தகத்தில் ஆர்வமுள்ள வாசகர்களில் சிலரே புத்தகம் வாங்க வசதி இல்லாதவர்கள். பெரும்பாலானோருக்கு புத்தகம் வாங்க வசதி நிச்சயம் இருக்கிறது. புத்தகம் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறவில்லை; இதுதான் பிரச்சினை.

க்ரியா அகராதி உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

விவசாயம், தத்துவம், மருத்துவம் எனப் பல துறைகளில் புத்தகங்களை வெளியிட்ட அனுபவம் மொழியைப் பற்றிய கூருணர்வை அதிகமாக்கியது. எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நானும் நண்பர் கி.நாராயணனும் குறித்துவைத்துக்கொண்டோம். இந்தப்பிரச்சினைகளையெல்லாம் வைத்து டாக்டர்

இ. அண்ணாமலையைச் சந்தித்தபோதுதான் அவர் நமக்கு இப்போதைய தேவை தற்காலத் தமிழ் அகராதி என்று சொன்னார். மொழி என்பது எப்படித் தொடர்ச்சியான ஓட்டம் என்பதையும், நாம் வாழும் காலத்தின் மொழிக்கும் நமக்கு முன்பு இருந்த மொழிக்கும் இடையிலான தொடர்புகளையும் வித்தியாசங்களையும் எடுத்துக்காட்டினார்.

‘நெல்லில் இருந்து அரிசி’ என்று எழுதுவது மிகவும் சகஜமாகிவிட்டது. ‘நெல்லிலிருந்து அரிசி’ என்பதே சரி. ஒரு சொல்லின் வகையை இலக்கணரீதியாகத் தெரிந்துகொண்டால்தான் அதைத் திறமையாகக் கையாள முடியும். அகராதி, மொழியைப் பற்றிய உணர்வைக் கூர்மையாக்குகிறது. அதன் மூலம் நாம் எழுதுவதைத் துல்லியமாகவும் குழப்பமில்லாமலும் எழுத முடியும்.

தமிழ் அகராதி என்பது தமிழில் மென்பொருள்கள் உருவாக்குவதற்கும் உதவியாக இருக்கும் இல்லையா?

ஆமாம். எடுத்துக்காட்டாக, இன்று புத்தகங்களுக்காக அச்சுக்கோக்கக் கணினியைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் வரி முடிவில் ஒரு சொல்லுக்கான இடம் போதுமான அளவு இல்லாதபோது, அந்தச் சொல்லை எப்படிப் பிரிக்க வேண்டும் என்பது கணினிக்குத் தெரியாது. கையால் அச்சுக்கோக்கும் முறையில் அச்சுக்கோப்பவருக்குச் சொற்களைப் பிரிக்கும் முறை அவர் தொழில்முறை அறிவின் பகுதியாக இருந்தது. சொற்களைப் பிரிப்பதற்கான மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த வசதி உருவாக்கப்பட்டு ஒரு அகராதி வடிவத்தில் அச்சுக்கோக்கும் மென்பொருளின் ஒரு பகுதியாக இருக்கிறது.

ஒரு சொல்லின் வடிவம், அது எந்த இலக்கண வகையைச் சேர்ந்தது, அந்தச் சொல்லை எப்படி எழுத வேண்டும் என்பது போன்ற தகவல்கள் இருந்தால்தான் தமிழுக்கான இந்தக் குறிப்பிட்ட மென்பொருளை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வரி முடிவில் ‘நண்பர்களால்’ என்ற சொல் வந்து, ஆனால் அந்த வரியில் ‘நண்ப’ என்ற எழுத்துகளுக்கு மட்டுமே இடம் இருந்தால், அந்த மூன்று எழுத்துகளையும் கணிப்பொறி அடுத்த வரிக்குத் தள்ளி, அவற்றுக்கான இடத்தை அந்த வரியிலேயே நிரவிவிடும். இதனால் ஒவ்வொரு வரியிலும் இடைவெளி சீராக இருக்காது; பார்வைக்கும் அழகாக இருக்காது. 100 பக்கங்களில் முடிய வேண்டிய பிரதி, இந்தச் சீரற்ற இடைவெளிகளால் 120 அல்லது 125 பக்கங்களாக நீண்டுவிடும். இது தேவையில்லாமல் தயாரிப்புச் செலவுகளை-காகிதம், மை, நேரம், உழைப்பு போன்றவற்றை-20% முதல் 25% வரை கூட்டிவிடும். இதை ஒரு துறை முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால் எவ்வளவு வீண் செலவு ஏற்படுகிறது என்பது தெரியும். முறையாக உருவாக்கப்பட்ட அகராதியால்தான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருளை உருவாக்க உதவ முடியும்.

புனைவுகளைப் பொறுத்தவரை ‘எடிட்டிங்’ செயல்முறை எப்படிப் பிரதியை மேம்படுத்துகிறது?

புனைவில் முக்கியமான பிரச்சினை, எழுதப்படும் விஷயம் சார்ந்து வாசகரைவிட ஆசிரியருக்கு அதிகம் தெரிந்திருக்கும். வாசகரின் பார்வை என்னவென்று தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை. எடிட்டர் என்பவர் முதல் வாசகராகச் செயல்படுபவர். கதையில் மிகப் பிரமாதமாக வருவதற்கு வாய்ப்புள்ள இடம் ஒன்று இருக்கலாம். ஆனால் அதை எழுத்தாளர் மிகவும் குறைவாக எழுதியிருப்பார். எடிட்டரின் யோசனையை ஏற்றுக்கொண்டால் எழுத்தாளர் அந்த இடத்தை விரிவுபடுத்திக் கொடுப்பார்.

விவரப் பிழை, மொழிப் பிழை என்று ஒரு பிரதி பல வகைகளில் எடிட்டரின் பரிசீலனைக்கு உள்ளாகிறது. பிரதியில் உள்ள காலக் குழப்பத்தை ஒரு எடிட்டரால் சரிசெய்ய முடியும். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் செயல்பாட்டின் ஒரு பகுதியாக எடிட்டர்களை ஏற்றுக்கொண்டாலொழிய எடிட்டர் ஒழுங்காகச் செயல்பட முடியாது. எடிட்டர் ஒருபோதும் எழுத்தாளரின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது, முடியவும் முடியாது. ஒரு ஆசிரியருக்கு உதவிசெய்வதற்குத்தான் எடிட்டர் இருக்கிறார். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. மிகத் தெளிவாக எழுதும் எழுத்தாளர்கள் மிகவும் சொற்பம். ந. முத்துசாமி, பூமணி போன்றவர்களை என் அனுபவத்திலிருந்து குறிப்பிடுவேன்.

க்ரியா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சந்தித்துவரும் பிரச்சினை என்றால் எதைச் சொல்வீர்கள்?

நிதி வசதி என்றைக்குமே இருக்கும் பிரச்சினை என்றாலும் தகுதிவாய்ந்த பணியாளர்கள் இல்லாததுதான் இன்று தீவிரமான பிரச்சினை. ஆனாலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு க்ரியா முன்னே சென்றுகொண்டிருக்கிறது. க்ரியா அகராதி, குட்டி இளவரசன் ஆகியவை பிரெய்ல் பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றன. இணையத்தில் வலுவாக எங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். க்ரியா அகராதிக்கு App ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.

க்ரியா அகராதி போன்ற பணிகளுக்கு அரசின் ஆதரவு எப்படி இருக்கிறது?

ஒரு தனிநபர் புத்தகம் எழுதி அவரே வெளியிட விரும்பினால் அந்தப் புத்தகச் செலவில் 80 சதவீதத் தொகையைத் தரும் திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்திருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ்தான் க்ரியா அகராதிக்கு முதலில் பணம் கேட்டு விண்ணப்பித்தேன். அகராதி போன்ற ஒன்றை உருவாக்குவதற்குப் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். ஒரு தனிமனிதர் எப்படி அகராதியை உருவாக்க முடியும்? பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணி அல்லவா அது என்றெல்லாம் கேட்டார்கள். உ.வே.சா. தனிநபரா, பல்கலைக்கழகமா என்று கேட்டு பதில் அனுப்பினேன். அரசிடம் நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் நம்மை நம்ப மாட்டார்கள். க்ரியாவின் அகராதியைப் பொறுத்தவரை ஒரு அதிகாரி விருப்புறுதியுடன் முடிவெடுத்தார். அகராதியின் முதல் பதிப்புக்கு ஆன செலவில் 40% மத்திய அரசு கொடுத்தது.

இப்போது நீங்கள் விரும்பி வெளியிட விரும்பும் எழுத்தாளர் யார்?

க்ரியாவில் நான் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிற ஒரு எழுத்தாளர் ஷோபா சக்தி. அவர் பெரிய இலக்கிய ஆற்றல் என்று நினைக்கிறேன்.

நாற்பது வருடங்களை முழுக்கமுழுக்க மொழி சார்ந்தும், பதிப்பு சார்ந்தும் கழித்திருக்கிறீர்கள். அது குறித்து தற்போது எப்படி உணர்கிறீர்கள்?

மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் இதே வாழ்க்கையை வாழவே விரும்புவேன். அதுபற்றி வருத்தமே கிடையாது. விழுந்து, எழுந்து கற்றுக்கொண்டது அதிகம். இது எனக்கு மனநிறைவான வாழ்க்கையையே தந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x