Published : 12 Jan 2020 09:57 AM
Last Updated : 12 Jan 2020 09:57 AM

இலக்கிய வாசிப்பு என்ன செய்யும்?

க.மோகனரங்கன்

பல வருடங்களுக்கு முன் ஒரு புத்தகக்காட்சியில் வெகு மலிவாகக் கிடைக்கிறதே என்று டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலைப் பதினைந்து ரூபாய்க்கு வாங்கிவந்தேன். படிக்கும் பழக்கம் இல்லாதவரையும்கூடக் கையில் எடுத்துப் புரட்டத் தூண்டும் வகையில் அமைந்த அழகிய பதிப்பு அது. இரண்டு, மூன்று முறை எனது ஓய்வுவேளையில் அதைப் படிக்க முனைந்தேன். அப்போதிருந்த மனநிலையில் பத்துபதினைந்து பக்கங்களுக்கு மேல் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அதில் வீசிய போதனை நெடி ஒவ்வாமல் மூடிவைத்துவிட்டேன். கையெட்டும் தூரத்தில் கண்ணில் படும்படியாகப் பல மாதங்கள் கிடந்த அந்நூலை, ஒரு விடுமுறை நாளில் வேறு போக்கிடம் இல்லாமல் படிக்கத் தொடங்கினேன். முதல் நூறு பக்கங்கள் வரையிலும் மனதுக்குள்ளாக முணுமுணுத்தபடியே கடத்தியவன், பிறகு கதையின் போக்குக்கு ஒப்புக்கொடுத்தவனாக மூன்று நாட்களில் முழுமையாக வாசித்து முடித்தேன். அந்த அனுபவம் எனக்குள் ஏற்படுத்திய சமன்குலைவு பல மாதங்களுக்கு நீடித்தது. அதுவரையிலான எனது வாழ்வுநோக்கு, மனப்பதிவுகள், மதிப்பீடுகள் அனைத்தையும் வகுத்து, நிறுத்து மறுபடியும் என்னைப் புதிதாகத் தொகுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

இலக்கிய வாசிப்பு ஒருவனை என்ன செய்யும் என்பதைத் தன்னனுபவமாக உணர்ந்த தருணம் அது. அன்று முதற்கொண்டு என் நியாயத்தராசைத் தூக்கிப்பிடித்து எவரொருவரை மதிப்பிடத் தொடங்கினாலும் மறுதட்டில் எடைக்கற்களுக்குப் பதிலாக என்னை மானசீகமாக நிறுத்திக்கொள்வேன். அது நீதிபதியாவதினின்றும் எப்போதும் என்னைக் காப்பாற்றிவந்திருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் படிப்பு, வாசிப்பு இரண்டுக்கும் பொருள் ஒன்றே என்பதுபோல தொனித்தாலும் அடிப்படையான வேறுபாடு உண்டு. படிப்பு என்பது துறை சார்ந்த விரிவாக அமைகையில் அறிவின் பெருக்கமாக மேல்மனதோடு மாத்திரம் தொடர்புடைய ஒன்றாகத் தங்கிவிடுகிறது. ஆனால், அதுவே இலக்கிய வாசிப்பு என்று வருகையில் அது உணர்வின் தொற்றாகி ஆழ்மனதையும் அனிச்சையாகப் பாதிப்பதோடு ஒரு நிகர் அனுபவமாகவும் மாறி நிற்கிறது.

வாழ்க்கையில் முன்னேற படிப்பு அவசியம் எனப் பலரும் சொல்வதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால், வாசிப்பு அதற்கு எவ்வகையிலும் உதவாது. ஒருவர் இருக்கும் நிலையிலேயே தேங்கிப்போய்விடவோ அல்லது சக ஓட்டக்காரர்களிடமிருந்து பின்தங்கிப்போகவோ வேண்டுமானால் அது காரணமாகக்கூடும். ஏனெனில், ஆழ்ந்த வாசிப்பு என்பது முதலில் ஆட்டங்காணச் செய்வது என்னவோ நாம் கற்பனைசெய்து வைத்திருக்கும் நடைமுறை வாழ்வின் பயன் சார்ந்த மதிப்பீடுகளைத்தான். அவற்றின் போதாமைகளை வாசிப்பு நமக்குக் கோடிட்டுக்காட்டும்போது, இருந்த இடத்தில் இருந்தபடியே சென்றடையும் இலக்கு எதுவுமற்ற ஒரு பயணத்தை நாம் அந்தரங்கமாகத் தொடங்கிவிடுகிறோம். அதே பழைய வாழ்க்கையைத்தான் வாழ்கிறோம். ஆனால், அதைப் பற்றிய நமது கண்ணோட்டம் புதிதாக மாறிவிட்டிருக்கும். நேரிடும் அனுபவங்களை அலைக்கழிப்புகளின்றி சற்று நிதானமாக எதிர்கொள்கிறோம். மகிழ்ச்சியின் பின்னால் திரண்டுநிற்கும் கண்ணீரின் உப்பையும் துயரத்தின்போது மட்டுமே உணரக்கூடிய ஆழ்ந்த அமைதியையும் அறிந்தவர்களாக அப்போது மாறியிருப்போம். யாரோ ஒருவரின் நகலாக முற்படாமல் நம்மை நாமாக, நமது வாழ்க்கையை வாழ வாசிப்பு வகைசெய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x