Published : 11 Jan 2020 10:01 AM
Last Updated : 11 Jan 2020 10:01 AM

மொழியின் உயிர்த்துடிப்பு கவிதை- சுகுமாரன் பேட்டி

தமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக ‘கோடைகாலக் குறிப்புகள்’ தொகுப்பின் மூலம் அறிமுகமானவர் கவிஞர் சுகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் சுகுமாரனின் ஒட்டுமொத்தக் கவிதைகள் இந்தப் புத்தகக்காட்சியில் வருவதையொட்டி எடுக்கப்பட்ட பேட்டி இது…

உங்களது ஒட்டுமொத்தக் கவிதைகள் தற்போது வெளியாகவுள்ள நிலையில், உங்கள் கவிதைகள் கடந்த பருவங்களைச் சொல்லுங்கள்...

‘கோடைகாலக் குறிப்புகள்’ முழுக்கவும் தனி ஒருவனின் குரலில் வெளிப்படும் கவிதைகள் கொண்டவை. தன்னைச் சுற்றியுள்ள நிலைமையால் கசந்துபோன கைவிடப்பட்ட மனோபாவத்தில் எழுதப்பட்டவை. சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக்கொண்ட மனதின் மன்றாடல்கள். இந்த மனநிலை மிக விரைவிலேயே கலைந்தது. ‘சிலைகளின் காலம்’ தொகுப்புக்குப் பிந்தைய கவிதைகள் பெரும்பான்மையும் இந்த மனமாற்றத்தின் பல நிறங்களும் பல குரல்களும் கொண்டவை. சுருக்கமாக, நான் என்பதை நாமாக உணர்ந்தது பார்வையில் நிகழ்ந்த மாற்றம். இதுவே கவிதையின் உள்ளடக்கத்தையும் பெருமளவு புதுப்பித்தது. மாற்றங்களுக்குத் தொடர்ந்து ஆட்பட்டுவருகிறேன். எனினும், கவிதையாக்கத்தில் மாறாத சில அடிப்படைகள் எனக்கு இருக்கின்றன. கவிதையை மலினப் பண்டமாகக் கருதக் கூடாது. அனுபவத்தில் தைக்காத ஒரு வரியையும் எழுதக் கூடாது. புரியாத வகையில் எழுதக் கூடாது. பொய்யான ஒன்றைச் சொல்லக் கூடாது. பகட்டான உணர்வைக் காட்டக் கூடாது. இதுபோன்ற ‘கூடாது’களை இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

இன்றும் கவிதையின் இன்றியமையாத தன்மை எது?

நான் வசிக்கும் திருவனந்தபுரத்தில் ஒருமுறை ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலில் வண்டி திணறியபோது ஓட்டுநர் பாழாய்ப்போன இந்த வேலைக்கு வந்தது பற்றித் தனக்குள் நொந்துகொண்டு ஒரு வரியைச் சொன்னார். ‘அவனி வாழ்வு இது கினாவு கஷ்டம்’. அது மலையாளத்தின் மகாகவி குமாரன் ஆசானின் கவிதை வரி. ஆட்டோ ஓட்டுநர் படித்தவர் அல்லர். மொழியின் ஆதி மனநிலையைக் கிளர்த்திவிட்டதுதான் அந்த வரி செய்த காரியம். இன்றைய கொந்தளிப்பான சூழலில் எத்தனை பேர் ‘பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதி வரியை யோசித்திருப்பார்கள்? சர்வாதிகாரி பினோஷேயின் ராணுவம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடி பாப்லோ நெரூதாவின் வீட்டைச் சூறையாடியது. ‘உங்கள் கைகளில் இருப்பதை விடவும் வலிமையான ஆயுதம் இங்கே இருக்கிறது. அது கவிதை’ என்று நெரூதா பதில் அளித்தார். மொழியின் ஆதிக் கருவி கவிதை என்பதுதானே அந்தப் பதிலின் உட்பொருள். மொழியின் குருதியோட்டம் என்று சொல்வது அலங்காரமாகத் தோன்றினாலும் அதன் உயிர்த்துடிப்பை அளந்து பார்க்கக் கவிதையைத் தவிர வேறு வழி இல்லை என்பது உண்மை.

ஒரு பத்திரிகையாளன் என்ற பின்னணியில் அனுபவம், மொழி சார்ந்து என்னவிதமான அனுகூலங்களை ஒரு படைப்பாளி பெறுகிறான்?

எந்தக் கதவையும் திறக்கும் மாயச் சாவி அவன் கையில் இருக்கிறது. எந்த மனத்தையும் துருவிப் பார்க்கும் நுண்ணோக்கி இருக்கிறது. எந்தக் கொண்டாட்டத்திலும் எந்தத் துயரத்திலும் அவனால் அழைப்பின்றிப் பங்கேற்க முடியும். இவையெல்லாம் அவனுக்கான தகுதிகள். ஆனால், இவற்றை அப்படியே நடைமுறையில் பின்பற்றும் வாய்ப்பு தமிழ்ப் பத்திரிகை உலகில் அரிது. எனக்கும் அப்படி முழுச் சுதந்திரவானாகச் செயல்படும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால், இந்தப் பணியில் கிடைத்த அனுபவங்கள் படைப்புக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன. மொழியைத் தெளிவானதாகவும் தெளிவு தருவதாகவும் பயன்படுத்த உறுதிகொண்டதும் இந்தப் பணி வாயிலாகத்தான்.

ஒரு நூறு ஆண்டைக் காணப்போகும் தமிழ் புதுக்கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

புதுக்கவிதையின் தோற்ற ஆண்டான 1934 முதல் எழுபதுகளின் இறுதிவரையான கவிதைகள் அக உணர்வுகளுக்கு முதன்மையளித்தவை; எண்பதுகள் முதல் தொண்ணூறுகள் வரையானவை புற உணர்வுகளையும் அகத்துக்குள் ஏற்றவை. அதற்குப் பிந்தையவை அகம், புறம் என்ற வேறுபாட்டை இல்லாமல் ஆக்கியவை என்று பிரித்துக் காண விரும்புகிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று கலந்தும் இயங்கியவை. எனினும், ‘எழுத்து’ முதலான காலகட்டக் கவிதைகளில் அதிகம் வெளிப்பட்டவை நகர மனிதனின் மனமும் சூழலும் மொழியும். அவற்றில் அரசியல், சமூகப் பேசுபொருள்கள் குறைவு. அதன் பின்னரானவற்றில் களம் விரிந்தது. மொழி மாறியது. அரசியலும் சமூகமும் பேசுபொருள்களாயின. ஈழக் கவிதையின் அறிமுகம் தனி மனிதனையும் அரசியல் உயிரி என்று கருதத் தூண்டியது. தொண்ணூறுகளுக்குப் பின்னர் கல்வி பெற்றுவந்த புதிய தலைமுறை, கவிதையின் பொதுத் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியது. ஒடுக்கப்பட்டோரின் நிலை, பெண்மையவாதம், சூழலியல், மாற்று அரசியல் இவையெல்லாம் புதுக்கவிதையை விரிவாக்கின. நவீனமாக்கின. அலகிட்டு விரிவாகப் பேசப்பட வேண்டிய தலைப்பைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. பிற மொழிக் கவிதைகளையும் வாசிப்பில் பின்தொடர்பவன் என்ற தகுதியில் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். சமகால இந்தியக் கவிதையில் தமிழ் அளவுக்கு விரிவும் ஆழமும் வேற்றுமைகளும் கொண்ட கவிதைகள் இல்லை.

‘வெல்லிங்டன்’ நாவலை எழுதும்போது மிக நேரடியான யதார்த்த மொழியைக் கையாண்டுள்ளீர்கள். கவிஞனின் சாயல் அதில் வரவே கூடாது என்று கவனமாக இருந்தீர்களா?

‘வெல்லிங்டன்’ நாவலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வெல்லிங்டன் உருவாக்கத்தைச் சொல்லும் வரலாற்றுப் பகுதியும், வெல்லிங்டன் மனிதர்களின் தற்கால வாழ்க்கை பற்றிய பகுதியும். முதல் பகுதியில் அங்கங்கே கவிஞன் எட்டிப் பார்க்கிறானே? இரண்டாம் பகுதி மையப் பாத்திரமான சிறுவனின் இளம் பருவத்திலும் பதின் பருவத்திலுமாக நிகழ்கிறது. அவனுடைய பார்வையிலேயே சம்பவங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்தப் பின்புலத்தில் அங்கே கவிஞனுக்கு வேலை இல்லை.

இசையில் ஈடுபாடு கொண்டவர் நீங்கள். உங்கள் மொழியில் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

என் இசை ஈடுபாடும் ரசனையும் மிக அந்தரங்கமானவை. கவிதையையும் இசையையும் போட்டுக் குழப்பிக்கொள்வதில்லை. இசை சில விளைவுகளைக் கொடுத்திருக்கிறது. சுருதி பிசகாத சொற்களைத் தேர்ந்து கவிதையில் பயன்படுத்துவது; அநாவசிய ஆலாபனைகளுக்குள் இறங்காமல் இருப்பது; கவிதைக்குப் பொருந்தக்கூடிய தொனியை உருவாக்குவது. இவற்றில் இசையின் தாக்கம் இருக்கலாம். இரண்டும் தனித்தனியான கலைவடிவங்கள் என்றாலும் இசையைக் கேட்டு முடித்ததும் வாய்ப்பதும், நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் வாய்ப்பதும் ஒரே மனநிலைதான்,

ஒரு இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட கவிஞர் நீங்கள். தமிழ் நவீனக் கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவரும்கூட. சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனின் ஆற்றலும், காதலில் ஈடுபடுபவனின் ஆற்றலும் ஒரு தளத்தில் சந்திப்பவையா?

உண்மையில், இது தமிழ் இலக்கிய மரபிலிருந்து நான் கண்டெடுத்துக்கொண்ட இயல்பு. காதல் உயர்வானது, காமம் விலக்கானது என்ற பேதம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் கிடையாது. அதையே நிஜத்திலும் கவிதையிலும் பின்தொடர முயன்றிருக்கிறேன். ஆணின் பார்வைக் கோணத்திலானவைதான் நீங்கள் குறிப்பிடும் கவிதைகள். ஆனால், அது பெண்ணை ஆகாயத் தாமரையாகப் புகழ்வதோ, பாதாளப் புழுவாக இகழ்வதோ அல்ல; மாறாக, நிகர்நிலையில் வைத்துப் பார்க்கும் எத்தனம். இயற்கையின் பகுதியாக ஏற்கும் முனைப்பு. காதல், காமம் பற்றிய என் கவிதைகள் எதிலும் இயற்கையின் குறிப்பீடு இல்லாமலிருக்காது. இன்றுவரையில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் புரட்சியாளர்களில் பெரும்பான்மையினரும் மாளாக் காதலர்கள்தான். காதலும் மானுடர்க்கிடையிலான மாற்றத்தைக் கோருவது என்பதால் சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனுக்கு இரு ஆற்றல்களும் ஒரு தளத்தில் இருப்பதுதானே சரி? இடதுசாரிப் பின்னணி அதற்கு ஒருபோதும் தடையல்ல என்று வரலாறு சொல்கிறது. நாம் பேசுவது காதலிலும் சமூக மாற்றத்திலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களைப் பற்றித்தான். நாடகக் காதலர்களையோ போலிப் புரட்சியாளர்களையோ அல்லவே.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x