

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் தமிழ்நாடு முழுவதும் குவிக்கப்பட்டிருந்த அதே நேரத்தில், ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகப் பெரும் அறிவுத் திருவிழாவை நிகழ்த்தினார்கள் தமிழ் வாசகர்கள். புத்தாண்டு தினத்தைப் புத்தகங்களோடு கொண்டாடும் ‘புத்தகங்களோடு சொல்வோம் புத்தாண்டு வாழ்த்து’ இயக்கம், இந்த ஆண்டு மேலும் பிரம்மாண்டமாக நடந்தது.
சென்னை மட்டுமல்லாமல் செங்கை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், கன்னியாகுமரி, விழுப்புரம், புதுக்கோட்டை, ஓசூர் என்று மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ விடிய விடிய நடந்தது. பல லட்ச ரூபாய் மதிப்புக்கான புத்தகங்கள் அன்று ஒரு நாளில் மட்டும் விற்றுத் தீர்ந்தன. சமூக வலைதளங்களில், ‘2019-ல் படித்த/பிடித்த புத்தகங்கள்’ பட்டியலிட்டுப் பகிர்ந்தனர் வாசகர்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளிடம் ஒரு புத்தகத்தைப் பரிந்துரைக்கச் சொல்லி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது ‘கனலி’ இலக்கிய இணையதளம். தம் ஆதர்ச எழுத்தாளர்களின் பரிந்துரைகளைப் புத்தகக்காட்சியில் வேட்டையாடுவதற்காகப் பட்டியலாக்கிக்கொண்டிருந்தார்கள் வாசகர்கள்.
‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வாசகர்களின் எண்ணிக்கை இம்முறை புதிய உச்சத்தைத் தொட்டது. குழந்தைகள், பெண்கள், இளைஞர்களோடு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் தங்கள் குடும்பம் சகிதமாக இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றார்கள். ‘பாரதி புத்தகாலயம்’, ‘என்சிபிஹெச்’, ‘உயிர்மை’, ‘டிஸ்கவரி புக் பேலஸ்’, ‘எதிர்’, ‘தேசாந்திரி’, ‘விஜயா’, ‘பெரியார் புத்தக நிலையம்’ என்று தமிழின் முன்னணிப் பதிப்பகங்கள் பலவும் 10% முதல் 50% வரையிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தன. இதனால், புத்தகங்களை வாசகர்கள் அள்ளிச் சென்றனர்.
புத்தகங்கள் வாங்கிய இளம் வாசகர்கள் பலரும் புத்தாண்டு தினத்தில் வாசிக்கத் தொடங்கிய புதிய புத்தகங்களின் படங்களைச் சமூக வலைதளங்களில் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். பல்வேறு விஷயங்களைக் காரணம் காட்டி, வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டதான புலம்பல்கள் ஒருபுறம் கேட்கையில், இந்தப் புதிய வாசிப்பு இயக்கம் அந்தப் புலம்பல்களுக்கு ஒரு முடிவு கட்டட்டும்.
இந்தக் கொண்டாட்டத்தின் உற்சாகத்தோடு சென்னை புத்தகத் திருவிழாவும் சூடுபிடித்திருக்கிறது. ஜனவரி 9 அன்று தொடங்கும் புத்தகத் திருவிழா, இம்முறை 13 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவுக்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது பதிப்புலகம்.
அச்சகங்கள் முதல் பைண்டிங் வரை பதிப்புத் துறையின் எல்லா முனைகளும் துரிதமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. மழை, வெள்ளம், புயல்கள், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று பல்வேறு சவால்கள் காரணமாகப் புத்தகத் தயாரிப்பில் எதிர்கொண்டிருந்த சவால்களையெல்லாம் தாண்டி, முன்பைவிட அதிகமான புத்தகங்களுடன் களமிறங்குகின்றன பதிப்பகங்கள்.
50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களும் உண்டு. வாசகர்களை மூழ்கடிக்கப் பெரும் புத்தக அலை காத்திருக்கிறது. இப்போது சென்னை தாண்டி தமிழகத்தின் பிற மாநிலங்களிலும் புத்தகக்காட்சிகள் விரிந்திருக்கின்றன என்றாலும், சென்னைக்கு ஒரு தனி மவுசுதான். வாருங்கள் வாசகர்களே, புத்தக அலையில் மூழ்கித் திளைக்கலாம்!