Published : 28 Dec 2019 09:55 AM
Last Updated : 28 Dec 2019 09:55 AM

நூல்நோக்கு: சிறார்களுக்கான அறிவியல்

சிறார்களுக்கான அறிவியல்

சயின்ஸ் விக்னெட்ஸ்
ஜந்தர் மந்தர்
சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை-600 086.
விலை: ரூ.110
99943 68501

சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் கட்டுரைகளைக் கொண்டது. 1993 முதல் 2005 வரை ‘ஜந்தர் மந்தர்’ இதழில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அறிவியலின் அடிப்படை நோக்கமான கேள்விகளை எழுப்பும் பண்பைச் சிறார்களிடம் அதிகரிக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.
- வீ.பா.கணேசன்

தென்பாண்டிச் சீமையின் பதினெட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள்
முத்தாலங்குறிச்சி காமராசு
காவ்யா பதிப்பகம்
கோடம்பாக்கம், சென்னை-24
044-23726882
விலை: ரூ.1000

பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில நூற்றாண்டுகளின் வரலாற்றையும் இன்றைய யதார்த்தத்தையும் விளக்கியிருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரியும் இந்நூல், கள ஆய்வுகளாலும் புகைப்படங்களாலும் குறிப்பிடத்தக்கதாகிறது.
- செ.இளவேனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x