Published : 28 Dec 2019 09:36 AM
Last Updated : 28 Dec 2019 09:36 AM

மரணத்தைக் கை குலுக்கி அனுப்பிய மனுஷ்!

சென்னை வருகிறார் விளையனூர் ராமச்சந்திரன்

மூளை நரம்பியலாளர், நரம்புசார் தத்துவவியலாளர், நரம்புசார் அழகியலாளர், கலை விமர்சகர் என்று பல பரிமாணங்கள் கொண்ட விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் இன்று (டிசம்பர் 28) மாலை 4 மணி அளவில் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் ‘அறிவியலின் சுயஅறிதல்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். சென்னைவாசிகளே தவறவிட்டுவிடாதீர்கள்!

புத்தகங்களோடு பணி ஓய்வு

தீவிரமான வாசகராக தன்னுடைய வாசகர் கடிதங்களால் அறியப்படும் எஸ்.வி.வேணுகோபாலன் அடிப்படையில் வங்கி ஊழியர். சமீபத்தில் அவர் பணி ஓய்வுபெற்றதை அவரது குடும்பம் புத்தகங்களோடு கொண்டாட நினைத்தது. விளைவாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் தலைமையில் எஸ்.வி.வி.யின் இரண்டு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். நீதிபதி கே.சந்துரு வெளியிட்ட ‘தர்ப்பண சுந்தரி’ சிறுகதைத் தொகுப்பை எஸ்.வி.வி.யின் பெற்றோர் எஸ்.ஆர்.வரதாச்சாரி - மைதிலி பெற்றுக்கொண்டனர். ‘உதிர்ந்தும் உதிராத...’ கட்டுரைத் தொகுப்பை ஜி.செல்வா வெளியிட எஸ்.வி.வி.யின் மாமியார் கோமதி மாத்ருபூதம் பெற்றுக்கொண்டார். “இனி வாசிப்பே முழு நேரப் பணியாகிவிடும்” என்று சிரிக்கிறார் எஸ்.வி.வி.

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபி 2019-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதைப் பெறுகிறார். இன்று (டிசம்பர் 28) கோவை ஆர்.எஸ்.புரத்திலுள்ள ராஜஸ்தானி அரங்கில் விருது வழங்கும் விழா நடக்கிறது. ஜெயமோகனுடன் மலையாளக் கவிஞர் கே.ஜி.சங்கரப்பிள்ளை, அஸாமிய ஆங்கில எழுத்தாளர் ஜான்னவி பருவா இருவரும் அண்டை மாநிலங்களிலிருந்து கலந்துகொள்கிறார்கள். ஏராளமான தமிழ் இலக்கிய ஆளுமைகளோடு கலந்துரையாடல், அபி குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு, அபி பற்றிய ஆவணப்படம் திரையிடல் என இன்று இலக்கியத் திருவிழாதான். வாழ்த்துகள் அபி!

மரணத்தைக் கை குலுக்கி அனுப்பிய மனுஷ்!

தொட்டுவிடக்கூடிய இடத்தில் மரணத்தைப் பார்த்துத் திரும்பிருக்கிறார் கவிஞர் மனுஷ்ய புத்திரன். இதய நோயால் பாதிக்கப்பட்டு, அபாயமான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் உடல் சூழல் வழமையான ‘பைபாஸ் சர்ஜரி’க்கு அனுமதிக்காத நிலையில், சிறுதுளை வழியிலான ‘பைபாஸ் சர்ஜரி’யை மேற்கொண்டிருக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் மேலும் இரு அடைப்புகளைச் சரிசெய்யும் விதமாக ஸ்டென்ட்டுகளும் பொருத்திருக்கிறார்கள். “வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத வேதனையை எதிர்கொண்டேன்” என்று சொல்லும் மனுஷ், அதைக் காட்டிலும் பெரிய வலி என்று தன் இலக்கிய நண்பர்கள் பலர் செல்பேசி வழியாகக்கூட விசாரிக்கவில்லை என்பதைப் பார்க்கச் செல்பவர்களிடம் சொல்லி வருந்தியிருக்கிறார். இந்நாட்களில் மனுஷுக்குப் பெரிய ஆறுதல் திமுக தலைவர் ஸ்டாலினின் கவனிப்பு. விஷயம் கேள்விப்பட்டது முதலாக மருத்துவமனையில் பேசி எல்லா மருத்துவ உதவிகளுக்கும் ஏற்பாடுசெய்தவர் பல முறை நேரிலேயே மருத்துவமனை சென்றும் நலம் விசாரித்திருக்கிறார். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த வேகத்தில் புத்தகக்காட்சிக்குத் தயாராகிவிட்டார் மனுஷ். கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரத்தும் மேற்பட்ட கவிதைகளை எழுதியவர் அவற்றை 11 கவிதை நூல்களாக சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவருகிறார். “நவ.25 மருத்துவமனையில் இருந்தேன்; டிச.25 புத்தக எடிட்டிங்கில் இருக்கிறேன்” என்று சிரிக்கும் மனிதரின் தன்னம்பிக்கை உண்மையாகவே அசரடிக்கிறது. எழுதும் ஒவ்வொரு கவிதையும் ஆயுளை நீட்டிக்கட்டும் மனுஷ்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x