Published : 28 Dec 2019 09:36 am

Updated : 28 Dec 2019 09:36 am

 

Published : 28 Dec 2019 09:36 AM
Last Updated : 28 Dec 2019 09:36 AM

காந்தி படுகொலை: பத்திரிகை அரசியல்

gandhi-murder

காந்தி படுகொலை: பத்திரிகைப் பதிவுகள்
பதிப்பாசிரியர்: கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை-83.
விலை: ரூ.360
044-24896979

காந்தியின் மரணம் தரும் செய்தி என்ன? இக்கேள்விக்கான பதிலைப் பல பக்கங்களில் விவரிக்கலாம். விடை தேடலாம். அந்த வரலாற்றை மீட்டுருவாக்குகிறது, கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பதிப்பித்திருக்கும் ‘காந்தி படுகொலை: பத்திரிகைப் பதிவுகள்’ புத்தகம். பல தரவுகளைப் பல கோணங்களில் தேடி ஆவணப்படுத்துகிறது.

காந்தி கொல்லப்பட்ட பிறகு தமிழக அச்சு ஊடகங்கள் அச்செய்தியை எப்படி அணுகின என்பது முக்கியமான விஷயம். ஏனெனில், ஒவ்வொரு இதழுக்கும் இருக்கும் அரசியல் பின்புலம் சார்ந்து அவை மாறுபடுகின்றன. வை.கோவிந்தனின் ‘சக்தி’, அறிஞர் அண்ணாவின் ‘திராவிடநாடு’, சின்ன அண்ணாமலையின் ‘வெள்ளி மணி’, எஸ்.எஸ்.வாசனின் ‘ஆனந்த விகடன்’, ரா.கிருஷ்ணமூர்த்தியின் ‘கல்கி’, கி.வ.ஜா.வின் ‘கலைமகள்’, ஏ.கே.செட்டியாரின் ‘குமரிமலர்’, நாரண துரைக்கண்ணனின் ‘பிரசண்ட விகடன்’, பெரியாரின் ‘குடிஅரசு’, ‘தி இந்து’ உள்ளிட்ட 12 இதழ்களில் வெளிவந்த பதிவுகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. காந்தியின் மறைவையொட்டி அம்பேத்கர் எழுதிய டைரி குறிப்பும் உள்ளது.

காந்தியை புத்தர், இயேசுவின் தொடர்ச்சியாகப் பார்ப்பது, ஒரு மனிதராக ஏற்றுக்கொண்டு கொள்கைகளை மறுப்பது, விமர்சனங்களுடன் ஏற்றுக்கொள்வது என காந்தியை வெவ்வேறு விதமாகப் பத்திரிகைகள் அணுகியிருக்கின்றன. கொலைசெய்த கோட்சேவைக் கவனமாகப் பேசியுள்ளன. அதிகபட்சமாக, ‘பைத்தியக்காரன்’ என்று ஜவாஹர்லால் நேருவும், எஸ்.ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளனர். ‘ஓர் இந்துவே அவரைக் கொன்றுவிட்டானே’ என்ற அவலக்குரலைப் பல இதழ்களில் கேட்க முடிகிறது. கோட்சேவின் சாதிய அடையாளம் வரை சென்று விமர்சித்துள்ளார் பெரியார். கோட்சேவின் சாதிய அடையாளத்தைத் தென்னாட்டு இதழ்கள் வேண்டுமென்றே மூடிமறைத்துவிட்டன என்ற குற்றச்சாட்டையும் பெரியார் முன்வைக்கிறார்.

காந்தியின் படுகொலைக்குப் பிறகு 53 நாடுகள் இரங்கல் குறிப்புகளை வெளியிட்டுள்ளன. அவர்களால் இயேசுவின் அவதாரமாக காந்தி பார்க்கப்பட்டுள்ளார். புத்தர் நீராடியதாக நம்பப்படும் ஆற்றில் காந்தியின் சாம்பலை இலங்கை அரசு கரைத்திருக்கிறது. காந்தியின் மரணம் தொடர்பான ஏராளமான தகவல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘காந்தியைக் கடவுள் நிலைக்கு உயர்த்திய தமிழ் இதழ்கள், அந்தப் படுகொலைக்குக் காரணமான கோட்சேவையும் அவரது பின்புலத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து எழுதவில்லை’ என்ற விமர்சனத்தை கடற்கரய் முன்வைக்கிறார். ‘ஜனசக்தி’, ‘நவசக்தி’, ‘தினமணி’, ‘சுதேசமித்திரன்’ உள்ளிட்ட இதழ்களின் பதிவுகளை இன்னும் தேட வேண்டும் என்கிறார். அவருடைய கடின உழைப்பில் வெளிவந்திருக்கும் இந்நூல் ஒரு முக்கியமான ஆவணம்.

- சுப்பிரமணி இரமேஷ்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

காந்தி படுகொலைபத்திரிகை அரசியல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author